Jan 2, 2019

நிர்மிதாவின் சாகஸப் பயணங்கள் - தெலுங்கு தேச யாத்திரை

நிர்மிதாவின் சாகஸப் பயணங்கள் - தெலுங்கு தேச யாத்திரை

26டிசம்பர்2018, புதன் கிழமை... நேத்திக்கு காலை 2.30 மணிக்கு தான் வீட்டுக்கு வந்தோம், ஒரு நாள் ரெஸ்ட், இன்னிக்கு துணிகளையெல்லாம் தோச்சி போட்டு அடுத்த ப்ளான் ரெடி... சரியான சண்டை. இப்டி டூர் டூர் போயிட்டே இருந்தா உடம்பு ரொம்ப வலிக்குது,  குழந்தைகள் என்ன ஆகறது.  ஸ்கூல் ஹோம் வொர்க், வீட்டு வேலையெல்லாம் அப்டியே இருக்கு, ரெஸ்ட் எடுக்க டூர் கூட்டிட்டுப் போக சொன்னா, போய்ட்டு வந்து நாலு நாள் ரெஸ்ட் எடுக்கறாப்ல கூட்டிட்டு போறீங்க...அப்டி இப்டின்னு ஒரே புகார், அட்வைஸ், திட்டு...

சிவன்: பல்வேறு தொழில்களிலிருந்து 63 நாயன்மார்கள், சரியை, கிரியை, ஞானம், யோக வழிகளைக் காட்டிய நால்வர் பாடல் பெற்றவை, ஜோதிர் லிங்கங்கள், மோக்ஷ லிங்கங்கள்னு தலங்கள், சங்கரர் விஜயம் செய்தவை
பெருமாள்: 108 திவ்ய தேசங்கள், ஆழ்வார்கள் தலங்கள்
அம்பாள்: சக்தி பீடங்கள்
முருகன்: ஸ்கந்த புராணத்தில் வரும் தலங்கள்
தவிர இதிஹாஸ, புராணங்களில் வரும் தீர்த்த நதி தலங்கள், வரலாற்று பொக்கிஷங்கள்

இதுல நாம எந்த ஒரு லிஸ்ட்ல இன்ட்ரெஸ்ட் காமிச்சாலும் இந்தியா முழுக்க பாத்திட்டு வந்திடுவோம்.    அவ்வளவு புண்ய பூமி நம் தேசம்... பல நூறு பாஷைகள், உணவு, உடை, சீதோஷ்ண வித்யாசங்கள் எல்லாத்தையும் தாண்டி நம் ஒவ்வொருவரையும் பணக்காரன், உழைப்பாளி, படிச்சவன், பாமரன்னு இல்லாம ஒன்றிணைக்கும் நாடு நம் நாடு.   புண்யம் செய்தவனே இவைகளை தரிசனம் செய்ய முடியும், மக்களுக்கு பாகுபாடின்றி சேவகம் செய்ய முடியும் என்பது என் கருத்து....

கடைசில என் தரப்பு கருணையால் வென்றது.  பவானி அனுமதியளித்தாள், உடன் புறப்பட்டாள்.   வேலும், மயிலும் கூடவே.. இரவு 9.15 க்கு சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து விஜயவாடாவுக்கு YBM ஏசி ஸ்லீப்பர் பஸ்.  சூப்பரா இருந்துது தனித்தனி ஹெட்செட், டிவி, தலையணை, கம்பளி, ஸ்வீட், ஸ்னாக்ஸ், ஜூஸ், ஸ்டடி லைட், ஃபோன் சார்ஜர் வசதிகளோடு, அனைத்தும் வொர்க்கிங் கண்டிஷன்ல... பஸ் ஏறி ரெண்டு தமிழ்ப்படம் பாத்திட்டு காலை 5.30 மணி குளிர்ல விஜயவாடால இறங்கியாச்சு

1. ஸ்ரீ துர்கா மல்லேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானம், விஜயவாடா: சக்தி பீடங்களில் ஒன்று.  அசுரர்களை அழித்த மகிழ்ச்சியில் துர்க்கை இந்த தலத்தில் தங்க மழை பொழிந்து, கீலன் என்ற அசுரனின் தவத்திற்கு இரங்கி, இந்திரகீல முனிவர் வேண்டுகோளின் படி அவரே மலையாக, அவர் ஹ்ருதயத்தில் மகளாக வாசம் செய்கிறாள்.  தேவியின் வெற்றியை இந்த்ராதி தேவர்கள் கொண்டாடிய இடம் என்பதாலும் இந்த மலைக்கு இந்த்ரகீல மலை என்று பெயர்.  அதனாலேயே விஜயபுரி, விஜயவாடா என்ற பெயரும்.  இவளே இந்த ஊரின் காவல் தெய்வம்.  எங்கும் மலைகள் சூழ்ந்து க்ருஷ்ணா நதியின் வெள்ளப்பெருக்கு க்ராமங்களை அவ்வப்போது அழித்து வந்தது.  பக்தர்களின் பெரும் கோரிக்கையை ஏற்று பரமேஶ்வரன் இந்த மலைகளில் குகை, தெலுங்கில் பெஜ்ஜம் ஏற்படுத்தி வெள்ள அபாயத்திலிருந்து காத்ததால் பெஜ்ஜவாடா,  மலை முழுதும் மூலிகைகள் நிறைந்திருந்ததால் பீஜபுரி என்ற புராணப்பெயர்களும் உண்டு.   கோவில் அடிவாரத்திலேயே க்ருஷ்ணா நதியில் ஆந்த்ராவின் முதல் முதலமைச்சர் திரு. ப்ரகாசம் பெயரால் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.  தேவி விஜயதசமி அன்று க்ருஷ்ணா நதியில் படகில் அருள்கிறாள்.  பெரும் கொண்டாட்டம்.  காலை 5.30 மணிக்கு நதியில் நீராடி, கோவிலுக்கு சென்றோம்.  உள்ளூர் ஆட்கள் இது புண்ய நதி, பல் தேய்க்காதீர்கள், துணி தோய்க்காதீர்கள் என்று உரிமையோடு தடுத்துரைக்கிறார்கள்.  ஆணவம் அழிவதைக் குறிக்கும் பொருட்டு முடியிறக்குகிறோம் அல்லவா? அதற்கான மண்டபம், பாத்ரூம் நதிக்கரையில் உள்ளது.  ரயில் நிலையம், பேருந்து நிலையம், க்ருஷ்ணா படித்துறை, கோவில்களை இணைக்க இலவச பஸ் வசதி, ஷேர் ஆட்டோ (சர்வீஸ் ஆட்டோன்னு சொல்றாங்க இங்க).  இலவச செப்பல் ஸ்டாண்டு, பொருள்கள் காப்பகத்துல எல்லாத்தையும் வெச்சி டோக்கன் வாங்கிட்டு, தர்ம தரிசன டோக்கன் வாங்கி நுழைந்தோம்.  260 படிக்கட்டுகள்.  ஈசியா ஏறலாம்.  க்யூல அதிக கும்பல் இல்ல,  30-40 நிமிடங்களில் அருமையான தரிசனம்.  அன்னையின் உக்ரம் அடங்க ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டையும் ஆதி சங்கரர் இங்கு செய்துள்ளார்.  அகஸ்த்யர், பாண்டவர்கள் பூஜித்துள்ளனர்.  5 ரூபாய்க்கு சூப்பர் புளிசாதம், 15 ரூபாய்க்கு சூப்பர் லட்டு நெய், ட்ரை ஃப்ரூட் போட்டு.  இலவச பாத்ரூம், குடிநீர் வசதிகள். 





2. உண்டவல்லி குகைகள், விஜயவாடா: கனகதுர்கா கோவில் எதிரில் ப்ரகாசம் தடுப்பணைலேந்து ஆட்டோல பயணம் செய்து இந்த இடத்தை அடைந்தோம்.   4-5ஆம் நூற்றாண்டுகளில் மலையை குடைந்து நாலு ஃப்ளோருக்கு கோவில்கள் செதுக்கியிருக்காங்க.  தொல் பொருள் இலாகா கன்ட்ரோல்ல இருக்கு.  பௌத்த, வைஷ்ணவ சிலைகள் 12 ஆழ்வார்கள், தசாவதாரம், ஜய விஜயர்கள் என்ற வைகுண்டத்து காவலர்கள், கருடன், ஹனுமான், பிள்ளையாரோடு, 20 அடி நீளத்துக்கு நல்லா புஷ்டியா பாம்பு படுக்கையில் பள்ளி கொண்ட பெருமாள்.  நான் தொட்டு, கட்டிப்புடிச்சி, காலில் பணிந்து பூஜித்த முதல் பெருமாள்.  இங்கிருந்து மங்களகிரி பானக நரசிம்மர் கோவிலுக்குச் செல்ல 25 கி.மீட்டர்களுக்குக் குகை உள்ளது.   பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டது.  மஹாபலியின் மகன் நமுசி என்ற அசுரனை அழித்த அந்த பெருமாள் உக்ரம் தணிய இன்றும் பானகத்தை சட்டி, சட்டியாக அவர் வாயில் ஊற்றுகிறார்கள்.  மடக் மடக் சத்தத்தோடு பானகம் போன இடம் தெரியவில்லை.  எங்கும் பானகம், தேங்காய் மூடிகள் இருந்தும் ஈ, எறும்புகள் இல்லை இந்த கோவிலில்.  பூமி வெடிப்பு, எரிமலை ஏற்பட்டு விடாமல் இருக்க இந்த ஏற்பாடு செய்திருக்கலாம் என்பது அறிவியலாளர்கள் கருத்து.  இங்கிருந்து பேருந்தில் ஸ்ரீ சைலம் சென்றோம்.  எல்லா இடத்துலயும் ஃபோட்டோ எடுத்திண்டோம் வரலாறு மிக முக்கியம்.    பவானி தீவுன்னு ஒன்னு இருக்கு வாட்டர் ஸ்போர்ட்ஸ், அட்வென்ச்சர் ஆக்டிவிடீஸோட... நாங்க அது எல்லா ஊர்லயும் இருக்கேன்னு போகல.  






3. ஸ்ரீ சைலம்: ஸ்கந்த புராணத்துல பல சாப்டர்கள் இந்த தலத்து பெருமையை பத்தி வருது.  தெய்வானையோடு முருகன் இருந்த தலம்.  சூரசம்ஹாரத்துக்கு முன் சிவபூஜை செய்த தலம்.  பன்னிரு ஜோதிர் லிங்கங்களில் ஒன்று.  க்ருஷ்ணா நதி பாதாள கங்கையாக 700 படிகளுக்கு கீழே ஓடுகிறது.  ஸ்ரீசைலம் டேம்.    சமயக்குரவர் மூவராலும் பாடல் பெற்ற ஆந்த்ர தேசத்து தலம் (திருப்பருப்பதம்).    வீரசிவாஜி அன்னையிடம் வாள் பெற்ற இடம்.    மருதமரம் (அர்ஜுன மரம்) ஸ்தல வ்ருக்ஷமாக உள்ள தலங்களில் மூன்று விசேஷம்.  அதில் இந்த மல்லிகார்ஜுனம் முதல், இடையில் உள்ளது திருவிடைமருதூர் - கும்பகோணம், கடைசி திருப்புடைமருதூர் - திருநெல்வேலி.    சிவனை மட்டுமே வழிபடுவேன் என்று ஒரு முனிவர் அன்னையுடன் சேர்ந்து இருந்த போதும், வண்டு (ப்ருங்கி) உருவெடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார்.  அவர் சக்தியை முழுதும் சினந்து க்ரஹித்து கொண்ட அன்னை மீண்டும் தவத்தால் மகிழ்ந்து அருளிய தலம்.   அன்னை ப்ரமராம்பிகை.  அன்னையின் ப்ரகாரம் முழுதும் பெண் தேவதைகள் மட்டுமே பரிவாரங்களாக யானை, குதிரை, தேர், காலாட்படைகளாக செதுக்கப்பட்டிருக்கின்றனர்.  இவர் பெயராலேயே சென்னை ப்ருங்கிமலை அழைக்கப்படுகிறது (இப்போதைய பரங்கிமலை).  பக்தர்கள் அனைவரும் கர்ப்பக்ரஹம் வரை சென்று மூலவரை தொட்டு பூஜை செய்யலாம்.  நாங்களும் செய்து சிலிர்த்து, பேறு பெற்றோம்.    தங்குவதற்கு வசதியான தேவஸ்தான ரூம்கள் ஆன்லைன் முன்பதிவு வசதியோடு உள்ளன.








4.  அக்கமாதேவி குகைகள்:  ஸ்ரீசைலம் பாதாள கங்கையில் குளிக்க 700 படிகளிலும் இறங்கலாம்.  எங்கள மாதிரி முடியாத சோம்பேறிகள் ரோப் கார்ல இறங்கி, அப்றம் ஒரு 100 படிகள் இறங்கி குளிக்கலாம்.  இங்கயிருந்து 16 கி.மீ தொலைவு 800 அடிகள் ஆழம் கொண்ட க்ருஷ்ணா நதியில் போட்ல பயணம் செஞ்சா அக்கமாதேவி குகைகளை அடையலாம்.   செல்ஃபோன் சிக்னல் எடுக்காது.  வீரசைவ மரபைச் சேர்ந்த இந்த மஹாதேவி கர்னாடகா மாநிலத்து சிமோகாவில் பிறந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரையே கணவனாக பாவித்தவர்.  நூற்றுக்கணக்கான பாடல்களை எளிதில் புரிந்து கொள்ளும் வசன நடையில் அருளியவர்.    பசவண்ணர் முதலானோர் கூடியிருந்த சபையில் பதில்களால் அதிசயிக்கச்செய்து ஏற்கப்பட்ட இவர் நிர்வாண நிலையை அடையும் போது இயல்பால் கலங்கியபோது, தாயுமானவனால் உடலெங்கும் மயிர்க்கற்றைகள் வளர அருளப்பெற்றவர்.  வீரசைவ சம்பிரதாயத்தில் அக்கா என்றால் அது அக்க மகாதேவியையே குறிக்கும்.  இந்த குகைகளில் தவம் செய்து 25 வயதளவில் 7 கி.மீ தொலைவிலுள்ள தத்தாத்திரேயர் தவமிருந்து முக்தி பெற்ற கதலிவனம் சென்று தவம் புரிந்து மல்லிகார்ஜுனரோடு ஐக்கியமானாள்.

70 அடிகள் குகைக்குள்ளே செல்ல வேண்டியுள்ளது.  ஸ்ரீசைலம் க்ருஷ்ணா (பாதாள கங்கை) படித்துறையிலிருந்து 1 மணி சுமார் போட் பயணம் செய்து இந்த இடத்தை அடைந்து 5 நிமிடங்கள் மலையில் நடந்து இந்த இடத்தை அடைந்தோம்.  இங்கு ஒரு கடை கூட கிடையாது,  குகைக்குள்ளே ஒரே கும்மிருட்டு.  ஒருவர் தான் ஒரு சமயத்தில் சென்று வர முடியும், கடைசி 30 அடிகள் குனிந்து செல்ல வேண்டும்.  குகையின் மேல் புறத்தில் லைட் அடித்தால் வௌவால்கள் மொத்தமாக கிளம்பி விடும்.  ஊதுபத்தி சாம்பல் போன்ற மணலில் கால் புதைக்க, மணல் தூசுகள் பறக்க நுழைந்து செல் ஃபோன் டார்ச் லைட் வெளிச்சத்தில் உள்ளே சென்று ஒரு ஜான் உயரம் கொண்ட ஸ்வயம்பூ லிங்கத்தை தரிசிக்கிறோம்.  அதன் மேலே சொட்டு சொட்டாக நீர் விழுந்து கொண்டிருக்கிறது இயற்கையின் அதிசயம், இறைவன் இஷ்டம்.  அவனருளாள் அவன் தாள் வணங்கி திரும்பினோம்.     போட், ரோப் கார் கட்டணம் 400 ரூபாய் ஒருவருக்கு. குழந்தைகளுக்கு 200 ரூபாய். 





காலைல தூங்கிட்டதால ஸ்வாமி தரிசனம் செய்யல.  அக்கமா தேவி குகைக்கு காலை 10 மணி டீம்ல போய்ட்டு மூணு மணிக்கு திரும்பினோம்.  பாதாள கங்கையில் மீன்களோடு போட்டி போட்டு குளித்து மதிய உணவு முடித்து 5.30 மணிக்கு 5ரூபாய்க்கு செப்பல், பேக், ஃபோன் டெபாசிட் பண்ணிட்டு தர்ம தரிசன ரூம்ல போய் சேந்தோம்.  ஸ்வாமி, அம்பாள் தரிசனம் முடிந்து வெளியேறின போது இரவு மணி 7. 30.  8 மணிக்கு ஹைதராபாதுக்கு கடைசி பஸ்.  அதுக்கு மேல ஃபாரஸ்ட் டிபார்மெண்ட் அனுமதி இல்லையாம்.  முப்பதே நிமிடங்களில் கோவில்லேந்து ரூமுக்கு போய் காலி பண்ணிட்டு வந்து பஸ் ஏறினோம். 

5. ஹைதராபாத்: விடிகாலை 2.30 மணிக்கு இறங்கி, 4.30 மணி வரை ரூம் தேடினோம்.  கடைசியா 2000 ரூபாய்க்கு ஒரு டொக்கு ரூம் தான் கிடைச்சிது  ஹேப்பி ந்யூ இயர் உபயம்.  எல்லா ஹோட்டலும் ஃபுல்.  11 மணிக்கு கிளம்பி ஹைதராபாத், செகந்த்ராபாத்துக்கு நடுவில் கடலோட பேக் வாட்டர்ல ஹுசைன் சாகர் ஏரில நிறுவப்பட்டிருக்கும் ஒரே கல்லினாலான 18 மீட்டர் (60 அடிகள்) உயரம் கொண்ட புத்தர் சிலைய லும்பினி பார்க்லேந்து போட்டுல போய் மேல ஏறி சுத்திப் பாத்தோம்.   ஆந்திர முதல்வர் என்.டி.ஆரால் நம்மூரு கணபதி ஸ்தபதியோட மேற்பார்வையில் 350 டன் எடை கொண்டது இந்த சிலை.   தலாய்லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.   நாகார்ஜுன சாகர் அணை கட்டும்போதும் ஏறத்தாழ 50 கோவில்களை அப்படியே பழமை மாறாமல் பிரித்தெடுத்து பத்திரமாக வேறு இடத்தில் மீண்டும் உருவாக்கிக் கொடுத்தவர் இந்த ஸ்தபதி.  நம் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.   கன்யாகுமரியில் வள்ளுவர் சிலை வடிவமைத்த பேறு பெற்ற கணபதி ஸ்தபதி வேறொருவர். 

6. சார்மினார் ஷாப்பிங், அங்கிருக்கும் சிவன், பாக்யலக்ஷ்மி கோவில்கள், புறாக்கள் பறக்கும் மசூதிகளை பார்த்து விட்டு, ஹரே க்ருஷ்ணா இஸ்கான் கோவிலும் தரிசனம் செய்து, இலவச ப்ரசாதம் உண்டு இரவு 10 மணிக்கு பத்ராசலம் புறப்பட்டோம். 

7.  பத்ராசலம்:  சீதையை மடியில் வைத்து அமர்ந்த கோலத்தில் சங்கு, சக்ரம், கோதண்டமும், அருகில் தயாராக இராமானுஜனோடும் எழுந்தருளியுள்ளார் ராமதாஸருக்கு அருளிய ராமன்.  கோதாவரி நதிக்கரையில் உள்ளது.    கோபண்ணா (ராமதாசர்) அரசுப்பணியில் இருந்த போது கருவூலப்பணத்தை கொண்டு இந்த கோவிலைக் கட்டியதால் கோல்கொண்டாவில் சுல்தானால் சிறை வைக்கப்பட்டார்.    இவருக்காக ராமோஜி, லக்ஷ்மோஜி என்ற பெயரோடு சுல்தானிடம் வந்து ஆறு லட்சம் மொஹர்களையும் திரும்பச்செலுத்து ரசீதை கொண்டு போய் ராமதாசரின் தலையணைக்கடியில் வைத்து மறைந்தார்கள் ராம, லக்ஷ்மணர்கள்.  மறுநாள் உண்மை உணர்ந்த சுல்தான் ராமதாசரை விடுவித்து கோவில் பணிகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டான்.   இன்றும் கூட ஆந்திர அரசு இராம நவமியன்று முத்துக்களை அளிக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறது.

பத்ராசலம், அதனருகில் உள்ள பர்ணசாலா போன்ற கோவில்களில் நாம் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை.  கோவிலுக்குள்ளேயே எக்சிபிசன் மாதிரி செட்டிங்க்ஸ் போட்டு அவங்க ஆளுங்க உடனடி ஃபோட்டோ ப்ரிண்ட் எடுத்து கொடுத்து காசு பார்க்கிறார்கள்.  கோதாவரியிலும் உள்ளூர்வாசிகள் நாம் துணி அலசுவது போன்றவை செய்தால் வருந்தி, வேண்டுகிறார்கள்.  இந்த டூர் முழுதும் ஆந்த்ரா, தெலுங்கானா உள்ளூர் ப்ரதேசங்கள்.  சுத்தமான தெலுங்கு, அவங்களுக்கு நாம சொல்றத எதுவும் தெரியல.  நமக்கு அவங்க சொல்றது தெரியல.  தமிலன் பரம்பரைன்னு சொல்லி ஹிந்தியும் நம்கி தெர்லே.  ரொம்ப கஷ்டம் இப்டி இருந்தா. 

பத்ராசலத்திலிருந்து விஜயவாடா 5-6 மணி நேரம் பேருந்தில் பயணித்து, இரவு 10 மணி YBM ஸ்லீப்பர் பஸ்ஸில் தூங்கி, 31 டிசம்பர் 2018, திங்கள் காலை 6 மணிக்கு வீடு சேர்ந்தோம். 


நிர்மிதாவின் சாகசப்பயணங்கள் - கொங்கு தேச யாத்திரை

நிர்மிதாவின் சாகசப்பயணங்கள் - கொங்கு தேச யாத்திரை

22 திசம்பர் 2018, சனிக்கிழமை...இங்க்லீஷ் மாசங்கள யூஸ் பண்ணுவோம்... ஆனா அத இப்டி தமிழ்ல திசம்பர்னு எழுதுவோம்...வி ஆர் டமிலியன்ஸ்.  இந்த சத்யமங்கலக் காடுகள்ல சந்தன மரங்கள் விசேஷம்.  அதனால பணம் பண்றவங்களும், அவங்களால வீரப்பனும் விசேஷம்.  நார்மல் சந்தனம், செஞ்சந்தனம் பூஜைகளுக்கு விசேஷம் தோன்றின காலத்திலிருந்து.  அப்டி கொஞ்சம் செஞ்சந்தனக்கட்டைகள் நேர்ல போனா கிடைக்குமான்னு இப்ப நா அந்த ஊருக்குப் போறது தான் விசேஷம்.  போன டூர்ல உடுப்பில விரல்கட்டை அளவுக்கு செஞ்சந்தனம்னு ஒன்ன வாங்கிண்டு வந்து அப்பா கிட்ட ஏமாந்திட்டன்னு திட்டு வாங்கினது தான் மிச்சம்.  அதனால செஞ்சந்தனம் பத்தி வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு உண்மை பேட்டி குட்டியா எடுக்களாம்னும் ஐடியா.   சந்தன மரங்கள் நாம வளக்க அனுமதி உண்டு.  ஆனா வெட்டினா அரசு டிப்போல தான் கொடுக்கனும்.  அவங்க தான் ஏலம் விட்டு கமிஷன் போக மிச்சக்காச நமக்குத் தருவாங்க.  அப்டி மூணு டிப்போ தான் நம்ம ஸ்டேட்ல இருக்கு, சேலம், சத்யமங்கலம், திருப்பட்டூர்ல.

அப்றம், கொங்கு நாட்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் (அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஞானசம்பந்தர்கள் பாடினவை) 5-6 தான் மொத்தமே.  அவினாசி ஏற்கனவே பாத்தாச்சு, அது அருணகிரிநாதர் பாடல் பெற்ற முருகன் ஸ்தலமும் கூட.  கொடுமுடி, திருமுருகன்பூண்டி மற்ற சில.  இதத்தவிர சஷ்டிகவசங்கள் அறுபடை வீடுகள் மேலயும் பாலதேவராய ஸ்வாமிகள் அரங்கேற்றம் செய்த சென்னிமலை முருகன்,   இந்த ஆறு சஷ்டி கவசங்கள்ல திருச்செந்தூர் முருகன் மேல பாடின ஒன்னு தான் நாம தினமும் பாராயணம் செய்யும் ஒன்று,  சூலமங்கலம் சகோதரிகள் பாடி வெளியிட்டது.   அப்றம் சிவவாக்யர் பூஜை செய்த சிவன் மலை முருகன்.  காவிரி மேலாண்மை வாரியப்புகழ் மேட்டூர் டாம்,  பவானி சாகர் டாம் இதெல்லாமும் இந்த தடவை டூர் ப்ளான்ல.

ஆபீசர்கிட்ட பெர்மிஷன் வாங்கியாச்சு, பசங்களுக்கு ஸ்கூல்ல லீவு பெர்மிஷன் வாங்கறது இப்ப ரொம்ப கஷ்டம்.  ரெண்டு பசங்கள்ல ஒருத்தர் பெரிய காலேஜ்ல படிச்சு நெறையா காசு சம்பாதிக்க, அதுக்கு நல்ல ஸ்கூல்ல பளஸ்டூ படிக்க இப்ப நாலாங்க்லாஸ் படிச்சிட்டு இருக்காரு.  இன்னொருத்தரும் அதே தேசிய நோக்கத்தோட எல்.கே.ஜி படிச்சிட்டிருக்காரு.  இப்ப அரையாண்டு லீவு பத்து நாள்.  நானும் க்றிஸ்மஸ், ந்யூ இயர்னு எங்க மொதலாளிங்க லீவுல இருப்பாங்கன்னு லீவு வாங்கியிருக்கேன்.  ஒரு நாள் ட்ரைவர் பேட்டாவுக்கும், லாங் லீவ் ட்ராஃபிக்கும் காரணம் வெச்சி விடிகாலை....1 மணிக்கு கெளம்பறோம்..  வழக்கம் போல ஆஸ்தான ட்ராவல்ஸ் பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ்... இந்த தடவ புது பையன் வினோத் குமாரு இண்டிகா எடுத்திட்டு வந்தார்.

நைட் குளிச்சி சாப்டு வண்டி ஏறினோம்.   ஞாயிறு காலை 9-10 மணிக்கு தான் மேட்டூர் டாம் பாக்க அனுமதி.  நாங்க போகவும் சரியா இருந்துது.  வழில குளிர் தாங்கல ஆம்பூர் பக்கம்லாம்.  சரியான பனி.  20 நிமிஷம் வண்டிய ஓரமா நிறுத்திட்டு தூங்கிட்டு, பாதாம் பால் குடிச்சிட்டு கெளம்பினோம்.

1. மேட்டூர் டாம்: தமிழகத்துக்குள்ள வர்ற காவிரிய தேக்கி வைக்கும் முதல் அணை.  ஸ்டேன்லி என்பவர் மேற்பார்வையில் கட்டப்பட்டபோது இதுதான் ஆசியாவின் மிக உயரமான, பெரிய நீர் தேக்கம்.  2-3 முறை அப்போதைய மைசூர் சமஸ்தானம் எதிர்த்ததால் ப்ரிட்டிஷாரால் கைவிடப்பட்டு, பின்னர் தஞ்சை விவசாயிகள் கோரிக்கையை மைசூர் சமஸ்தானத்து திவான் திவான் பகதூர் சர் சி.பி.ராமசாமி அய்யர் முயற்சியால் அனுமதிக்கடிதம் பெற்று கட்டப்பட்டது.  தண்ணீர் முழுவதும் குறையும் போது வரலாற்று சின்னங்கள் வெளியே தெரிகின்றன.  இப்ப நம்ம பசங்க மேல இருக்கற நம்பிக்கையா என்னன்னு தெரியல.  டாம் மேல போக யாருக்கும் அனுமதி இல்ல.  ஒவ்வொரு கேட்லயும் ஓய்வு ராணுவ அதிகாரிகளா இல்ல பணில இருக்காங்களா தெரியல பாதுகாப்புக்கு, டிக்கெட் செக் பண்றதுக்கு.  தூரத்துலேந்து தேங்கியிருக்கும் தண்ணிய வேடிக்கை பார்க்க ஜெயலலிதா அம்மா காலத்துல ஒரு டவர் கட்டி வெச்சிருக்காங்க 6 மாடிக்கு.  லிஃப்ட் வேல செய்யல.  ஒருத்தருக்கு 5 ரூபா டிக்கெட் படியேறி மேல போய் பாக்க.  என்னத்த பாக்க.  காவிரி குதிச்சி குளிச்சவன இதான் டேம்.  பாத்துக்கோன்னு கைதிகள பாக்க வரும் விருந்தாளிபோல தூரத்துல ஒரு கூண்டுல நிக்க வெச்சி காமிச்சா... ?  கொஞ்சம் பச்சை பசேல்னு வெச்சிருக்காங்க.  தண்ணி வரும் வழில வாய்க்கால்ல இறங்கி குளிக்க படிகள் இருக்கு.  தண்ணி பாசம் பிடிச்ச வாசனை மூக்க தொளைக்குது.  இங்க குளிக்கற திட்டமும் எங்களுக்கு இல்ல.  வரலாற்று பதிவுக்கு கெடைச்ச தடுப்புக்கம்பிகள் வழியா ஃபோட்டோக்கள் எடுத்திட்டு வழியில் ஒரு சின்ன ஹோட்டலில் டிஃபன் சாப்டு, கெளம்பினோம்.

2. கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சி: சத்யமங்கலம் டவுன்லேந்து 10 கி.மீ தூரத்துல பவானி ஆத்துல கட்டியிருக்காங்க.  இரண்டு முறை கட்டப்பட்டு மன்னர் திறப்புவிழாவிற்கு வரும்போது அணை வெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்டு, தானும் தன் குடும்பத்தாரும் வருவதை அன்னை பண்ணாரியம்மனும், நஞ்சுண்டேஶ்வரரும் விரும்பவில்லை போலும், நாங்கள் அங்கு வருவதில்லை இனி என்று மன்னர் கூறியதன் பின் மூன்றாம் முறையாக கட்டப்பட்ட தடுப்பணை இன்று நாம் காண்பது.  வரிப்புலிகள் இருந்ததாலும், கொடிவேலிகள் இருந்ததாலும் வந்த பெயர் மருவி கொடிவேரி என்று ஆகிவிட்டது.   சேற்று மணல் தன்னைத்தானே தூர்வாரிக்கொள்ளும் விதமாக அன்றே கட்டப்பட்டுள்ளது சிறப்பு.  தண்ணி எப்பவும் இருக்கும் போல.  சூப்பரா இருந்தது அரை மணி நேரத்துக்கும் மேல ஆட்டம் போட்டோம் ட்ரைவர் உட்பட.  பாசியில் வழுக்கி அங்கங்க எவனாவது விழுந்திட்டே இருந்தாங்க விழாம இருங்கறது, விழுந்துன்னு விதவிதமா வயசுப்பசங்க பெர்ஃபார்மென்ஸ்.  மாங்கா, அன்னாசி, கைல வாட்ச், மோதிரம் கட்டி விடுவாங்களே ஜவ்வு மிட்டாய், அதெல்லாம் சாப்டுட்டு சத்யமங்கலப்புகழ் ராம விலாஸ் ஹோட்டல்ல லஞ்ச்.  சூப்பரா இருந்துது சுத்தம், சுகாதாரம், சர்வீஸ்காரங்க ட்ரெஸ், சூடு, டேஸ்ட்.  அங்கயே இரவு தங்கவும் விசாரிச்சிட்டு கெளம்பினோம்.  மறுநாள் உள்ளூர் பவானி ஆத்துல குளிக்கலாம்னு.



3. பண்ணாரி மாரியம்மன்: காலைலேந்து இரவு வரை ஓய்வின்றி தரிசனம் தருகிறாள் அன்னை இங்கு.  காட்டுப்பகுதியோட அடிவாரத்துல இருக்கு கோவில்.  தங்க தேவஸ்தான ரூம்செல்லாமும் இருந்துது.  அருமையான தரிசனம்.  பொண்ணு சூப்பரா பாடினான்னு அம்மாள் மாலை ப்ரசாதமா போட்டாங்க.  பெருமையா ப்ரகாரங்கள்ல சுத்தி சுத்தி அதோட ஃபோட்டோ எடுத்திட்டு கெளம்பினோம். 

4. பவானி சாகர் டேம்: சூப்பரா இருக்கு தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணைக்கட்டு.  ஆசியாவின் மிகப்பெரிய மண் அணைக்கட்டு.  பூங்காவும், சிறுவர் விளையாட்டுகளும் பராமரிக்கப்படுகிறது.  இதன் நீர் வற்றும்போது தண்டநாயகன் (சேனாதிபதி) கோட்டை எனும் டணாய்க்கன் கோட்டை தெரியும்.

5. கொங்கு நாட்டு பாடல் பெற்ற தலங்கள்
அவிநாசி அவிநாசியப்பர் திருக்கோயில்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் திருக்கோயில்
பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்
கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில்
கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

இவைகளில் இம்முறை யாத்திரையில் அவினாசியப்பரையும், திருமுருகநாதரையும், மகுடேஶ்வரரையும் தரிசித்தோம்.  அவினாசி (திருப்புக்கொளியூர்) முருகன் அருணகிரிநாதராலும் பாடப்பெற்றவர்.  இந்த தலத்தில் தான் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவன் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் கட்டளைப்பாடலால் மீண்டும் 6ஆண்டு கால வளர்ச்சியோடு திரும்ப வந்த அதிசயம் நிகழ்ந்தது.

6. திருமுருகன்பூண்டி கற்சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை.  ஒரே கல்லில் செதுக்கிய தெய்வச்சிலைகளில் மூக்கில் ஆடும் பில்லாக்கு, மேலும், கீழுமாக நகர்த்திப்பார்க்கும் கைவளையல்கள் என திறமையான வேலைப்பாடுகள் நிறைந்தவை.   முருகப்பெருமானால் வழிபடப்பட்டவர்.  சுந்தரர் இரவு தூங்கும்போது சிவபெருமான் பூதங்களைக் கொண்டு அவர் பொருள்களை களவாடினார்.    காலையில் கூப்பிடு விநாயகரிடம் முறையிட்டப்போது அவர் அருளால் பரமன் இருக்கும் இடத்தை அறிந்து, என் பொருள்களை களவாடப்பட்டிருக்கின்றன. "எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே " என்று உரிமையோடு பாடி வழிபட்டு மீண்டும் தன் பொருள்களை பெற்றுக்கொண்டார் சுந்தரர்.  அவினாசி கோவில் அளவு இங்கு விமர்சையாக கும்பல் இல்லை.  மறுநாள் திருவாதிரை.  இரவு சென்று திருப்பூரில் தங்கி மறுநாள் ஓய்வு.    குழந்தைகளுக்கு பனியன் மெட்டிரியல் ரெடிமேட் ட்ரெஸ்செல்லாம் வாங்கினோம்.

24டிசம்பர் 2018, திங்கள்.
7. சிவன் மலை:  காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.  அருணகிரிநாதரால் பாடல் பெற்றது.  500 படிகள் கொண்ட மலைக்கு கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம்.    சிவவாக்கியரால் வழிபடப்பட்ட முருகன்.  ஏதாவது ஒரு பக்தரின் கனவில் வந்து சிவன்மலை முருகன் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜை செய்ய உத்தரவிட, அந்த பக்தர் அப் பொருளை இக்கோயிலுக்குக் கொண்டு வருகிறார். அதன் நம்பகத்தன்மைக்காக கடவுள் முன் பூப்போட்டுப் பார்த்து உறுதி செய்யப்பட்ட பின்னர் அப் பொருள் கடவுளின் முன் வைத்துப் பூசைசெய்யப்பட்டு, மக்கள் பார்வைக்காக முன்மண்டபத்திலுள்ள உத்தரவுப் பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. வேறொரு பக்தரின் கனவில் மற்றொரு பொருளுக்கான உத்தரவு வரும்வரை பழைய பொருளே உத்தரவுப் பெட்டியில் நீடிக்கிறது. நடக்கப்போகும் நிகழ்வுகளின் முன்னறிவிப்பாக இப்பொருள்கள் முக்கியத்துவம் பெற்றவவை என்பது பக்தர்களின் நம்பிக்கை.  மூன்று கருக்கருவாள்கள் இருக்கின்றன இந்த பெட்டிக்குள் இப்போது.
8. சென்னிமலை: தேவராய சுவாமிகள் இங்குதான் ஆறுபடை வீடுகளுக்குமான கந்த சஷ்டி கவசங்களை அரங்கேற்றம் செய்தார்.  இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த 1300 மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.  கோவில் பேருந்திலும், நம்ம காரிலும் செல்லலாம்.   கோவிலுக்கு பின்னே பிண்ணாக்கு சித்தர் தவம் செய்த குகை, சமாதி இருக்கின்றன.  பொய் சொல்லும் நாக்கு புண் பட்ட நாக்கு என்று அருளிய இவரை புண்ணாக்கு சித்தர் என்றாக்கியது நம் பெருமை.

9. திருப்பாண்டிக்கொடுமுடி மூவர் பாடல் பெற்ற ஸ்தலம்.  காவிரி இங்கு கிழக்காய் திரும்பி ஓடுகிறது.  மும்மூர்த்தி ஸ்தலம்.  மூன்று முகத்தோடிருக்கும் ப்ரஹ்மனுக்கு பின்னால் இருக்கும் வன்னி மரமே நான்காவது முகமாக அறியப்படுகிறது.  ஆண் மரமான இது பூ, காய் தருவதில்லை.   3000 ஆண்டுகளுக்கு மேலான இது மீளுருவாக்கப்பட்டு காக்கப்படுகிறது.  இதன் இலைகளை காவிரி நீர்க் குடங்களில் இட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்கிறார்கள்.  எவ்வளவு நாட்களானாலும் நீர் கெடாமல் இருக்கிறது.   காவிரி படித்துறை நன்கு பராமரிக்கப்படுகிறது.


10.  நாமக்கல் (நாமகிரி) நரசிம்மர், நாமகிரி தாயாருக்கு எதிரில் வெட்ட வெளியில் 18 அடிக்கு ஒரே கல்லில் எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயர் தரிசனம் முடித்து இரவுப் பயணம் செய்து விடிகாலை வீடு திரும்பினோம்.  ட்ரைவர் சின்னப்பையன் ரொம்ப பயமுறுத்திட்டாரு ஓவர் டேக் செய்யும் போதும், முன்னாடி இருக்கும் வண்டிகளுக்கு வெகு அருகில் செல்வதுமாக.


Oct 9, 2018

கர்நாடகா தீர்த்த, தல யாத்திரை

நிர்மிதாவின் சாகசப் பயணங்கள் - கர்நாடகா தீர்த்த, தல யாத்திரை

4 நாட்களில் 40 கோவில்கள், முடிஞ்சதும் யாராவது அந்த கோவில்ல சாமி நின்னிட்டு இருந்தாரா, ஒக்காந்திட்டு இருந்தாரான்னு கேட்டா எங்களால சரியா சொல்ல முடியுமான்னு நிச்சயமா தெரியல,  ஆனா எல்லா சாமியும் எங்கள பாத்திட்டாங்க, 5-7 புராண ப்ரசித்தி பெற்ற நதிகளில் குளிச்சாச்சு.  இறையருள் இருந்தால் மறுமுறை நிதானமா போவோம்.

போறோம், இல்ல முடியல, நாலு நாள் போனா குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாம ஆய்டும், எனக்கும் முடியவே முடியாதுங்கற மனைவியின் விசும்பலோடு 20 வருஷ டூர் ப்ளான் இப்ப நடந்தேறியது.

27 செப்டம்பர் 2018, வ்யாழக்கிழமை இரவு 1.35 க்கு தமிழக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நண்பர் கார்த்திக் மணிகண்டன் வீட்டில் சிற்றுண்டி விருந்து முடித்து, கார் அவரோடது, ட்ரைவர் அவர் ஏற்பாடு, மதியம் 12 மணிக்கு புறப்பட்டு ஶ்ரவணபெலகொலா போய் சேர்ந்தோம்.  சிலை கீழே இருக்கும்னு பாத்தா 720 படிகளுள்ள மலைமேலே இருக்கிறார் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 57 அடி உயர கோமதீஶ்வரர் என்கிற பாஹுபலி.  டோலி விசாரிச்சா ஒருவருக்கு போய் வர ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாங்கிறான்.  மலையே சின்னதா தெரிந்தது அப்போ.  படிகளும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில் படிகள் போல சப்பை, சப்பையா தான் இருக்கு, நடந்தே போய்டலாம்ன்டாங்க மனைவி.  ஏற 20 நிமிஷம், இறங்க 10 நிமிஷம்.  ஆசம் பாஹுபலி கோவில், நம் புராதன முறைப்படி அடுக்கி, அடுக்கி சேத்து வெச்சிருக்காங்க கோவில், சரிஞ்சிடாம இருக்க பிற்காலத்துல முட்டுக்குடுத்திருக்காங்க பாறாங்கற்களால்.  தொல்பொருள் இலாகா பார்வையில் இருக்கிறது கோவில் ஃபோட்டோ, வீடியோ கண்டிப்பா எடுக்கக்கூடாதுங்கற போர்ட கூட விடாம ஃபோட்டோ எடுக்கறாங்க நம்மாளுங்க.  பாஹுபலி கூட செஃல்பி, லைவ் வீடியோ,  ஒக்காந்து கொஞ்ச நேரம்  சிவத்யானம் செஞ்சிட்டு இறங்கினோம்.  மலைமேல பாஹுபலி, ஒரு சமண குரு, என் பையன் மூனு பேரும் ஒரே கோலத்தில் தரிசனம், பிறந்த நாள் ட்ரெஸ்ல.

விந்தியகிரி, சந்த்ரகிரின்னு ரெண்டு மலைகள் இருக்கு இங்க,  பாஹுபலி சிலை விந்தியகிரியில் இருக்கு.  தன் மகன்கள் 100 பேருக்கும் ராஜ்யத்தைப் பிரித்துக் கொடுத்து விட்டு, சந்த்ரகிரியில் தங்கி விடுகிறார் சூர்ய வம்ச அரசர்,  முதல்வன் பாஹுபலி, இளையவன் பரதன், சகோதரர்கள் அனைவரையும் போரில் வென்ற பரதன், பாஹுபலியோடு ஒத்தைக்கு ஒத்த சண்டையில் தோற்று விடுகிறான்.  எனினும் ஆசைகளின் விபரீதமே சகோதரர்களுக்குள் நடந்த இந்த யுத்தம் என்று தெளிந்த பாஹுபலி ராஜ்யங்களை பரதனிடமே கொடுத்து விட்டு ஒட்டுத்துணியையும் துறந்து காட்டில் தவம் செய்து தம்பிக்கு தவத்தின், த்யாகத்தின் மேன்மையை உணர்த்துகிறார்.  12 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களால் நடத்தப்படும் மஹாமஸ்தகாபிஷேக விழாவில் இம்முறை புதுசா ஒரு படிக்கட்டு பாதை திறந்திருக்காங்க ப்ரதமர் மோடி.

பன்ஸ்ன்னு ஒன்னு விக்கறாங்க பெங்களூர் ஹோட்டல்களில், பொட்டிக்கடை பன் எண்ணைல வாட்டி எடுத்தாப்ல இருந்துது.  எல்லா கர்நாடகா ஹோட்டல்களிலும் இரவிலும் வெரைட்டி ரைஸ், மீல்ஸ் கிடைக்குது.  தமிழ்நாட்டு ஹோட்டல்களில் வெகு, வெகு, வெகு.... அரிதாகக் காணக்கிடைக்கும் காட்சி இது.  50-70 ரூபா மீல்ஸ் எப்ப முடியும்,  சாயந்தரம் எப்ப வரும், ஒரு கரண்டி மாவுல இட்லி, தோசை வகைகள், போதாக்குறைக்கு 10-15 வருஷங்களா நான், பட்டர் நான், சைட் டிஷ் க்ரேவி, செமி க்ரேவி வேற, கல்லா கட்டி கொள்ளையடிக்கும் நேரம் நம்மூர்ல காலை, மாலைகள்.  கர்நாடகா இன்னும் மக்களுக்கு இந்த கரிசனத்த காமிச்சிட்டு இருக்கு.  வெளிநாட்டு குளிர்பானங்களை இனிமேல் விற்க மாட்டோம்னு புருடா உட்ட பசங்க நம்ம வ்யாபாரிகள், இவனுங்களா நைட் மீல்ஸ் போடப்போறாங்க.  பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் கிட்ட மதி த்யேட்டருக்கு எதிரில் சபரி ஹோட்டலில் மட்டும் இன்றும் இரவு மீல்ஸ் கிடைக்குது.

இரவு குளிர், மழையில், இருளில் மலைப்பயணம் முடிந்து தர்மஸ்தலா சேர்ந்தோம்.  நைட் 10 மணிக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், மீல்ஸ், தோசை கிடைக்குது ஹோட்டல்களில் 30 ரூபாய்க்கு.  சாப்டுட்டு தேவஸ்தானத்து ஆஃபீஸ்ல ரூம் விசாரிச்சோம்,  300 ரூபா டபுள் பெட் அட்டாச்டு பாத்ரூமோட.   வர்றவங்களுக்கு ஒரு குறையும் இல்ல இங்க தங்கற இடம் தேவஸ்தானத்து சத்திரங்களில்,  மதியம் இரவு அன்னதான ப்ரசாதம் இலையில் பரிமாறி.  டூரின் இரண்டாம் நாள் காலையில் நேத்ராவதி நதியில் நீராடி, காலை சூரிய பூஜைகள் செய்து தர்மஸ்தலா மஞ்சுநாதர் தரிசனம்  முடித்தோம்.  சமணர்கள் பராமரிப்பில் குருக்கள்களின் பூஜை முறைகளோடு சிவபெருமானாகவும், சமண தீர்த்தங்கரராகவும் வழிபடப்படுகிறார் இங்கு.   நிர்வாகத்தார் சுற்று க்ராமங்களில் கல்வி, மருத்துவ சேவைகளையும் செவ்வனே செய்து வருகின்றனர்.

குமாரதாரா நதியில் மதியம் சூரிய பூஜையை முடித்து கரையில் குடிகொண்டிருக்கும் குக்கி சுப்ரமண்யஸ்வாமி தரிசனம் முடித்தோம்.  இங்கு நாகர்களுக்குக் காவலனாக முருகன் இருக்கிறார்.  ஆதி சுப்ரமண்யர் சன்னிதியில் நாகராஜனையே முருகனாக வழிபடுகின்றனர்.

உடுப்பி க்ருஷ்ணன் குட்டியா ரம்யமா இருக்கான், வெளில இல்ல நம்ம மனசுல.  ஆம், ஒன்பது த்வாரங்கள் கொண்ட நம் ஒவ்வொருவர் இதயத்திலுமே இந்தத் திருடன் இருக்கிறான் என்பதை உணர்த்தும் வகையில் உடுப்பியில் ஒன்பது ஓட்டைகள் கொண்ட ஜன்னல் வழியாகத்தான் க்ருஷ்ண தரிசனம்,  ஸ்ரீ மத்வாச்சாரியாரால் ஸ்தாபனம் செய்யப்பட்டது.  நம்மூர் போல குறுக்க நெடுக்க யாரும் சன்னிதியில் நடந்து மறைக்கறதில்ல.    30-40 மாடுகளோட கோ சாலை இருக்கு, தரிசனம் செய்தோம்.   கோவிலுக்கு எதிரில் மீசையோடு சிவபெருமான் கோவில் தரிசனம் முடிந்து லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்லிக்கொண்டே கொல்லூர் மூகாம்பிகையை நோக்கிப் பயணம்,  இருட்டு, மழை, மலை, காடு, வழியில் ஒரு லைட்டு கூட இல்ல, கோவில்ல கும்பல் இருக்காதுன்னு பாத்தா, ஒரு 600-700 பேர் போல இருக்கு கும்பல்,  அம்பாள் புறப்பாடு நடந்து, மூலவர் தரிசனமும் முடித்தோம்.    இங்கயும் சுத்தமான அன்னதானம், சாப்பிட்டு முடித்து, கோவில் ரூம் 300 ரூபாய்க்கு, அயர்ந்து தூங்கினோம், இரண்டாம் நாளும் இனிதே முடிந்தது. 

மூன்றாம் நாள் கொல்லூர் சௌபர்ணிகா நதியில் நீராடி காலை சந்த்யா வந்தனம் முடித்து முருடேஶ்வர் சென்றோம்.  இன்னிக்கு ஸ்டைல்ல பெரிசா சிவன் சிலை பீச்சாங்கரையில், சுத்தி சுத்தி செல்ஃபி எடுத்தோம்,   10ரூபாய்க்கு ஒரு குகை மாதிரி அனுபவம், கன்னட குரலில் ஸ்தல வரலாறு அழகான சுதைகளோடு குகைக்குள்ள.  இங்க இருக்கற சிலைக்கு பணம் செலுத்தி பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்து மகிழ்கிறார்கள்.  ராவணன் சிவ தர்சனம் முடித்து, ப்ரசாதமாக அவருடைய விக்ரஹம் ஒன்றையும் தன் தேசத்திற்கென்று சிவனிடம் பெற்றுச் செல்கிறான்.   தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி இந்த ஸ்தலத்தில் சிறு பையனாக வழியில் இருந்த பிள்ளையாரிடம், மாலை சந்த்யா வந்தனம் செய்து விட்டு வந்து விடுவதாகவும், கீழே வைத்து விடாமல் சிலையை கையிலேயே வைத்துக்கொண்டிருக்குமாறும் கூறி கொடுத்து செல்கிறான்.    இவன் சொன்னபடி கேக்கவா அவர் இருக்கார்.  அவர் கீழே வைத்து விடுகிறார்.  அதை எடுக்க முயற்சிக்கையில் லிங்க மேனிதான் மாட்டுக் காது போல வளைந்ததே தவிர எடுக்க வரவில்லை.   அந்த இடமே கோகர்ணம் (பசுவின் காது),  நிஜ ஸ்வரூபத்தைக் காட்டிய பிள்ளையாரை வணங்கிச் செல்கிறான் பத்துத்தலையன்.  இதே வரலாறு கீழே     ஸ்ரீரங்கத்திலும் பின்னர் நடந்தது, அவன் தம்பி விபீஷணனிடம் ரெங்கநாதர் விக்ரஹத்திற்காக.    கோகர்ணம் போலாம்னு பாத்தா அங்க போயி மூனு மணி நேரம் கழிச்சி சாயந்தரம் 5 மணிக்கு தான் கோவில் திறப்பு, அவ்ளோ நேரம் அங்க இருந்தா மத்த ப்ளான் எல்லாம் டும் ஆய்டும்.  அதனால கோகர்ணத்த அடுத்த 30 கோவில் டூர்ல சேத்துக்கலாம்னு கூடலி ஶ்ருங்கேரி சங்கராச்சார்ய மடத்த நோக்கிப் பயணித்தோம்.  வழியில் உலகப்புகழ் ஜோக் நீர்வீழ்ச்சி பரவசமான காட்சி.


துங்கா நதியும், பத்ரா நதியும் கூடுவதால் கூடலின்னு பேரு இந்த க்ராமத்துக்கு.  ரெண்டு நதிகளுக்குமிடையில் ராமநாதர் கோவில், சங்கர மடங்கள் கரையில் இருக்கின்றன.   சரியான மழை ஒரு மணி நேரத்துக்கு,  மழை நின்னதும், குடும்பத்தோட துங்கபத்ரா நதிக்கூடலில் மாலைக் குளியல் அருமையாக,  மாலை சந்த்யாவந்தனம், ஜபம்,  தற்போதைய பீடாதிபதிகள் ஸ்ரீ வித்யாபிநவ வித்யாரண்ய பாரதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் வருபவர் எல்லோருக்கும் பாகுபாடின்றி தர்மோபதேசம் செய்து கொண்டிருக்கிறார்.   குழந்தைகள், நடுத்தற, பெரிய வயது பெண்கள், ஆண்கள்னு ஒரு டீமுக்கு லீலா ஸரஸ்வதி, சுப்ரமண்யரோட 32 பெயர்களையும் உபதேசம் செய்து திரும்ப சொல்ல வைத்துக்கொண்டிருந்தார்,  கன்னட மொழியில் புஸ்தகமும் ஒவ்வொருத்தருக்கும் கொடுத்தார் தினமும் வ்யாதிகள், கஷ்டங்கள் நீங்கி, மெமரி பவர், கவனம் ஜாஸ்தியாக.  நாங்களும் சேர்ந்து சொன்னோம்.  இரவு ஶ்ருங்கேரிக்குப் போகப்போவதாக சொன்னோம்,  நேரமாகிவிடும் குழந்தைகள் வேற இருக்கு, சாப்டுட்டு போங்கோன்னு சொன்னார்.   பெரியவங்க சொன்னதையெல்லாம் கேட்டிருந்தா நாம ஏன் இப்டி இருக்கோம்.  சாரதாம்பாள நின்ன கோலத்துல தரிசனம் செய்து விட்டு,  சாப்டாம கெளம்பினோம்.  வழில சோத்துக்கு சிங்கியடிச்சி இரவு உணவா சிப்ஸ், பேக்கரி பப்ஸுன்னு ஹெல்த்தி ஃபுட்டா சாப்டுட்டு ஶ்ருங்கேரிக்குப் பயணம்..  இரவு ஶ்ருங்கேரி தேவஸ்தானத்து சத்திரத்தில் 300 ரூபாய்க்கு தங்கல்.





கூடலி ஶ்ருங்கேரி சங்கரமடம் ஶ்ருங்கேரி ஆச்சார்யரால் ஸ்தாபிக்கப்பட்டது.    ஆதி சங்கரர் மண்டனமிஶ்ரராக அவதரித்திருந்த ப்ரஹ்மாவை வாதத்தில் வென்று ஸுரேஶ்வரர் என்று தன் சீடனாக்கிக்கொண்டார்.  அவருடைய மனைவியான ஸரஸவாணி ஸரஸ்வதியின் அவதாரம்.   கணவனை சீடனாக்கிக்கொண்டு தன்னோடு வாதம் புரிந்த ஸரஸவாணியையும் இந்த க்ஷேத்ரத்தில் நின்ற கோலத்தில் வனதுர்கா மந்த்ரங்களால் ஸ்தாபனம் செய்து வழிபட்டார்.

 நான்காம் நாள், துங்கா நதிக்கரை, சாரதாம்பாள் கோவிலுக்கு எதிரில் சத்திரம்,  காலை 6.30 மணியளவில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் சாரதாம்பாள், வித்யா சங்கரர் தரிசனம், கோவிலுக்குள்ளேயே துங்கா நதியில் குளிக்க படிக்கட்டுகள்,  காலை சந்த்யாவந்தனம் முடித்து, 9 மணிக்கு ஆற்றைக்கடக்கும் பாலத்தை திறந்து விட்டதும் எதிர்க்கரைக்குப் பயணம்.   ஶ்ருங்கேரி சங்கர மடத்தில் சந்த்ரமௌளீஶ்வரர் பூஜா ஹாலில் அமர்ந்து வேத மந்திரங்கள் ஜபம்,   ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள், ஸ்ரீ விதுஶேகரேந்த்ர பாரதி ஸ்வாமிகள் தரிசனம் முடிந்து ஹொரநாடு அன்னபூர்னேஶ்வரி கோவில் தரிசனம்,  அங்கேயே மதிய அன்னதான சாப்பாடு.   மாலை தரிசனத்திற்கு பேலூர் சென்னகேசவ பெருமாள் கோவில்.  மரவேலைப்பாடுகள் போல கல்லுலயே பூந்து வெளையாடியிருக்காங்க நம்ம சிற்பிகள்,  ஹொய்சால ராஜாக்கள் காலத்து மாடல்,  நுணுக்கமான வேலைப்பாடுகள், சீலிங், சுத்து சுவர், கோபுரம்னு எல்லா இடங்களிலும், கோவில்ல இருக்கற மொத்த சிற்பங்களையும் இந்த சுத்தற தூண்ல செதுக்கியிருக்கேன், ஏதாவது மிஸ் ஆகியிருந்தா இந்த இடத்துல அதை செதுக்குங்கன்னு ஒரு இடத்த காலியா விட்டிருக்கான் தொழில் திமிர் கொண்ட அந்த சிற்பி.  நம்மாளுங்க பக்தி ஜாஸ்தியாகி கொஞ்சம் சிற்பங்கள உடைச்சிருக்காங்க.  இந்த தூணும் இப்ப சுத்தறதில்ல.

நைட் 1 மணி ஆய்ட்டதால, நாங்களும் டயர்டு, லேட்டா எழுந்திருந்து அவமானப்படாம இரவு கார்த்தி வீட்டுக்கிட்டயே ஒரு ரூம்ல தங்கிட்டோம்.  இவ்வளவு தீர்த்த யாத்திரை, க்ஷேத்ராடனப் பலன், காந்தி ஜயந்தி மதியம் கர்னாடக ஐராவதத்துல பயணம்.  இரவு 11 மணி போல மாமி சமைத்த சீரக மிளகு ரசம், மோர் சாதம் சாப்டுட்டு நல்ல ஓய்வு,

இயற்கை, குளிர், மழை, பீச், அடர்த்தியான காடுகள், சரிவான அடர்த்தியான, கடும் மலைப்பாதைகள், மின் விளக்குகள், ரோடு, போக்குவரத்து வசதிகள் இல்லாத, பக்கத்துல போனா தான் கண்டுபிடிக்கவே முடியும்ங்கற மாதிரி க்ராமங்களில் இருக்கின்றன நாம் பயணித்த பாதி கோவில்கள்.   வழி நெடுகிலும் நீரோடு ஆறுகள், கடலோடு சங்கமிக்கும் பேக் வாட்டர் பாலங்கள், பொன்னி அரிசி, ரப்பர், வாழை, பாக்கு, தென்னை, அன்னாசி என கொழிக்கும் வட கர்னாடகா.    தண்ணிக்கு அடுத்த மாநிலங்களை நம்பியிருக்க வேண்டியிருக்கு,  வேலைக்கும் ஆட்கள் கிடைக்கலன்னு பல காரணங்களால் விவசாயம் அருகிப்போய் கொண்டிருக்கும் நம்ம ஊரப் பாத்திட்டு, நாடி, நரம்பெல்லாம் விவசாய வெறி ஊறினாப்ல இன்னும் இந்த ஊர்கள விட்டு விலகாம, விவசாயத்தை செய்து கொண்டிருக்கும் இந்த மக்களயும், பச்சைப் பட்டு போர்த்திய மண்ணையும், மலைகளையும் பார்த்தா பெருமூச்சும், பொறாமையுமாதான் இருக்கு.  ஒவ்வொரு ஸ்தலமும் இங்கேயே தங்கி விடலாம் என இழுக்கின்றன.  தோ ஆஃபீஸ்லேந்து கால் வந்தாச்சு.  மீண்டும் சந்திப்போம்.

  • ஸ்ரவணபெலகொலா - வெண்குளம் - கோமதீஶ்வரர்
  • தர்மஸ்தலா - நேத்ராவதி - மஞ்சுநாதர்
  • கொக்கி - குமாரதாரா - சுப்ரமண்யர்
  • உடுப்பி - குளம் - க்ருஷ்ணன் - சந்த்ரமௌளீஶ்வரர்
  • கொல்லூர் - சௌபர்ணிகா - மூலவரே பஞ்சலோக மூகாம்பிகை (ஸ்வர்ண ரேகை உள்ள லிங்கரூபம்)
  • முருடேஶ்வர் - அரபிக்கடல் - முருடேஶ்வர் (உலகின் 2ஆவது பெரிய சிவன் சிலை, பக்தர்கள் மேலே சென்று பார்க்க லிஃப்ட் வசதி உள்ள ராஜகோபுரத்துடன்)
  • கூடலி - துங்கபத்ரா கூடல் - சாரதாம்பாள், கூடலி ஶ்ருங்கேரி சங்கர மடம்
  • ஶ்ருங்கேரி - துங்கா - சாரதாம்பாள், ஶ்ருங்கேரி சங்கர மடம்
  • பேலூர் - யாகாச்சி ஆறு - சென்னகேசவப் பெருமாள்

Sep 4, 2018

பர்வதமலை தரிசனம்

பர்வதமலை ப்ரமராம்பிகை உடனுறை மல்லிகார்ஜுனர் தரிசனம்

வரலாற்றுக் குறிப்புகள்:

அர்ஜுனர் - மருதமரத்து நாதர் (மருதவாணர்),

ப்ரமர - வண்டு - சிவன் மேல் மட்டும் பற்று கொண்டு வண்டு உருவெடுத்து அவரை மட்டுமே வலம் வந்த ப்ருங்கி முனிவருக்கு நற்புத்தியளித்து ஆட்கொண்டதாலும், தன் படைகளோடு வண்டுகள் உருவில் ஒரு அசுரனை வென்றதாலும் ப்ரமராம்பிகை.  இந்த ப்ருங்கி முனிவர் தவமிருந்த மலை ப்ருங்கி மலை, இன்றைய பரங்கிமலை.

ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான பர்வதமலை கடல் மட்டத் திலிருந்து சுமார் நான்காயிரம் அடி உயரம் கொண்டது. 
கிரிவலப் பாதையின் தூரம் 26 கிலோமீட்டர்.  காஞ்சி மஹாஸ்வாமிகள் இந்த கிரிவலம் செய்துள்ளார்.
ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றும் அவ்வாறு விழுந்த மலைகளின் ஒரு பகுதிதான் பர்வதமலை என்றும் கூறப்படுகின்றது.
பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு. 
பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.  கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து செங்கம் செல்லும் வழியில் உள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம்(தென்பாதி மங்கலம்) வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு.  வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர்.

தென்பாதி மங்கலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரம் சென்றால் கடலாடி கிராமம் வருகிறது. அங்கிருந்து மலை உச்சிக்கு எட்டு கிலோமீட்டர் தூரம் தான்.  ஆனால் இன்னும் கொஞ்சம் கடினம்.

இந்த மலையில் உச்சியில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.

வெள்ளியங்கிரி போன அனுபவம் இருந்ததால ஒரு சின்ன ஒப்பீடு, வழி காட்டுதல்:  வெள்ளியங்கிரி உயரம், தொலைவு அதிகம், 7 மலைகள், எல்லா க்ளைமேட்டும் ஒரு தடவ ஏறிட்டு வந்தா அனுபவிச்சிடலாம்.  ஆனா இப்படி பாறைகள் இல்ல, வெவ்வேறு படிவங்கள் பாறை, செம்மண், விபூதி மலைன்னு, தொடர்ந்து செங்குத்து இல்ல, தண்ணி, கடை வசதிகள் சின்ன சின்னதா இருக்கு சாதாரண நாட்களிலும்.  இங்க ஒரு 10-20 அடிகள் கூட சமதளத்துல நடக்கல.  முழுசா பாறைகள்.   எங்களுக்கு இது அத விட கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது.  

நாங்க போய்ட்டு வந்த வழி: சென்னை - பூந்தமல்லி - ஸ்ரீ பெரும்புதூர் - இராணிப்பேட்டை - ஆரணி - போளூர் - தென்மதிமங்கலம் - பர்வதமலை - 200 கி.மீட்டர்

வருஷ ஆரம்பத்துல வெள்ளியங்கிரி போய்ட்டு வந்ததுலேந்தே இந்த பர்வதமலை, சதுர கிரியெல்லாமும் முடிச்சிடனும்னு ப்ளான்.  ஆனா தள்ளிட்டே போய்டுச்சு பல காரணங்களால்.  கடினமான மலையேற்றத்துக்கு பாய்சுக்கு கொஞ்சம் மூளை, மனசு திரும்ப தயாராகனும்.  அன்னமிட்ட அன்னை பால்பாண்டியோட அம்மாவும் இறைவனடி சேர்ந்து விட்டார் இடையில்.  ஒரு வழியா செயல் தலைவர் இளவரசனோட தொடர் முயற்சியால் 31 ஆகஸ்ட் 2018, வெள்ளிக்கிழமை ஆஃபீஸ் முடிச்சிட்டு கொஞ்சம் சீக்கரமா கெளம்பி நைட்டே மலையேறிடலாம்னு ப்ளான் பண்ணியாச்சு.   10-12 போல ரெடி.  நம்மளே ஓட்டிட்டுப் போனா மலையேறுவது, இறங்கி மீண்டும் ட்ரைவ் பண்றதெல்லாம் கஷ்டம்,  யாரும் இதுவரை எங்க டீம்ல போனதில்ல இந்த மலைக்கு.  வேன் விசாரிச்சா ரெண்டு நாள் பேட்டா, டோல் அது, இதுன்னு நெறையா ஆய்டும் போல.   நண்பன் ஸ்ரீகாந்த் வண்டி அரேஞ்ச் பண்ணினாரு.   ரெண்டு மூனு ப்ராஜெக்ட்ல இருந்தோம், எல்லாரும் அமெரிக்காவோட கஸ்டமர் மீட்டிங் முடிச்சி ஒரு வழியா 7 மணிக்கு சென்னை டி.எல்.எஃப் லேந்து கெளம்ப தயார்.  

எங்க டெலிவரி மேனேஜர் ஒரு ஆக்டிவ் ஸ்போர்ட்ஸ் பெர்சன்.  என்ன மாதிரி கிடையாது.  லெஹர் 7 அப் பாய் மாதிரி தான் இருப்பார்.   வெள்ளியங்கிரி மிஸ் ஆய்டிச்சின்னு இந்த தடவ கடைசி நிமிஷத்துல ஒரு வழியா செவுரேறி குதிச்சி அவரும் சேந்திட்டார்.  அவருக்கு மாத்துத் துணி எங்க வீட்லேந்து எடுத்திட்டு வரச்சொல்லியாச்சு.  ஏறும் போது ராத்திரி வசதி இருக்கோ, இல்லியோ, இறங்கியாவது எங்கயாவது வயக்காட்டுல பம்புசெட்ல ஜாலியா சோர்வு போக ஒரு க்ராமக் குளியல் குளிக்கலாம்னு ஒரு ப்ளான்.

என் பொண்ணு நாலாங்க்ளாஸ்,  ஏற்கனவே வெள்ளியங்கிரி, நாகலாபுரம்லாம் வந்திருக்கா.  அவள என் மனைவி கொண்டு வந்து விடுவாங்கன்னு ப்ளான்.  நாங்க ஒரு 7-8 வருஷங்களுக்கு முன்னாடி மனைவியோட குலதெய்வம் கோவில் இராமனாதபுரம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலுக்குப் போயிருந்தப்ப வழில ஒரு வயசான அம்மா ஜடாமுடியோட, நீ பர்வத மலைக்குப் போய்ட்டு வா, எல்லாம் நல்லதா நடக்கும்னு சொல்லியிருந்தாங்க.   என் நண்பன் ரஞ்சித்தும் அவங்க அம்மா ஊரு அது தான், ஏதாவது ஹெல்ப் வேணுன்னா சொல்லுங்க, பண்ணிடலாம், போய்ட்டு வாங்கன்னாரு.  நெட்ல இந்த மலைய பத்தி, வழிய பத்தி செய்திகள, வீடியோஸ பாத்தா என் மனைவி வரமுடியும்னு தோணல, நாலஞ்சு ஆபரேஷன் ஆனவங்க.  உழைச்சி கொட்டி, ஏற்கனவே வீட்ல எங்க எல்லாரையும் மேச்சி நலிவாயாச்சு.   வெள்ளிக்கிழமை காலைல திடீர்னு நானும் வந்துடட்டுமான்னு கேட்டாங்க.  விஷயத்தையெல்லாம் சொல்லி, வீடியோவெல்லாம் பாத்திட்டு சாயந்தரம் உன்னால முடியும்னு தோணினா வான்னு சொல்டேன்.  பையனுக்கும் 4 வயசு கூட ஆகல, விட்டுட்டும் வர முடியாது.  முடிவு பண்ணி மொத்த குடும்பமும் கெளம்பியாச்சு சிவன் மேல பாரத்த போட்டுட்டு.  வண்டில என் மனைவியும் வராங்க, பையனோடன்னு சொன்னதும் எல்லாரும் அப்டியே ஷாக் ஆய்ட்டாங்க.   ஒன்னும் சொல்லவும் முடியாது இவன் கேக்க மாட்டான்,  எதாவது கஷ்டமாய்ட்டா என்னா பண்றதுன்னு அவங்களுக்கு பயம், கவலை.  கெளம்பியாச்சு இரவு 7.30 மணிக்கு

போரூர்ல ஆப்பிள், பொரி, கடலை, பொட்டுக்கடல, க்ளூகோஸ் டப்பா, க்ளூகோஸ் மிட்டாய், சாமிக்கு அபிஷேகத்துக்கு 5 எலுமிச்சை, பிஸ்கெட், ப்ரட்ன்னு வாங்கிட்டாங்க பசங்க டீமுக்கு.  20 லிட்டர் வாட்டர் கேன் ஒன்னு வண்டில போட்டாச்சு.  வழில ஒரு ஆரிய பவன்ல டின்னர் முடிச்சிட்டு கடலாடி மௌனகுரு விடோபானந்த ஸ்வாமிகள்  ஆஸ்ரமத்தை இரவு 1 மணி வாக்குல அடைந்தோம்.  மழை சூப்பரா பெஞ்சிட்டு இருக்கு.  பால்பாண்டி நாங்க குடும்பத்தோட இப்டி கெளம்பினதுமே ரஞ்சித் குடும்பத்துக்கு தெரிஞ்ச தென்மதிமங்கலத்துல இருக்கற 'சின்னப்பையன்' கூட பேசி அவரையும் வழித்துணைக்கு வரச்சொல்லிடுங்க, குழந்தைங்க, லேடீஸ்லாம் இருக்காங்கன்னு ஆர்டர் பண்ணிட்டாரு.  அந்த அண்ணனையும் ஃபோன் பண்ணி ஒரு 9.30 மணி போல எழுப்பி, நாங்க வந்திட்டு இருக்கோம், நீங்களும் எங்களோட வாங்கன்னு சொல்லிட்டோம்.  அவரும் நீங்க போளூர் வந்திட்டு ஃபோன் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.  காலைலயே ஃபோன் பண்ணி இப்டி குடும்பத்தோட வரலாமான்னு கேட்டேன்.  அவரு அப்பவே இப்ப நீங்க மட்டும் வந்து பாருங்க, ராத்திரி நேரம், மழை வேற பெய்யுது,  அவங்க வேற முடியாதவங்க, பையனும் குழந்தைங்கறீங்க, அடுத்த தடவ வேணா, உங்களுக்கு சரின்னு தோணினா கூட்டிட்டு வரலாம்னு சொன்னாரு.  நமக்கு தான் சொல் பேச்சு கேக்கற பழக்கமே கிடையாதே,  ராத்திரி திருப்பியும் 1 மணிக்கு நாங்க கடலாடி ஆஸ்ரமம் வாசல்ல இருக்கோம்னு ஃபோன் பண்ணி வரச்சொன்னோம்.   அவரு அந்த வழி வேணாம், இப்ப கஷ்டமா இருக்கும், நீங்க திரும்பி போளூர் வழில வாங்க, நா உங்கள தென்மதிமங்கலத்துல பிக்கப் பண்ணிக்கறேன்ன்னு சொல்லிட்டாரு.

இந்த விடோபானந்த ஸ்வாமிகள், திருவல்லிக்கேணி பர்வதமலை பக்தர்கள் குழுவினர்னு கொஞ்சம் டீம் ஏற்கனவே சில வசதிகளையெல்லாம் பக்தர்களுக்காக, பக்தர்களைக்கொண்டே அவனருளால் அங்க செஞ்சிட்டு இருக்காங்க.  டொனேஷன்ல கெடச்ச சிமெண்ட், மணல், ஜல்லி, தண்ணின்னு ஒவ்வொரு பொருளயும் மலையேறும் பக்தர்களை வேண்டி, இஷ்டமிருந்தா முடியும்னா எடுத்துட்டுப் போய், மலைல சேத்திடுங்கன்னு சின்ன, சின்ன துணிப்பைகள்ல, ஒரு லிட்டர் பாட்டில்கள்ல அனுப்சி, இன்னிக்கு மலை மேல இருக்கற முழு கட்டுமானங்களையும் முடிச்சிருக்காங்க.  புணரமைக்கப்பட்ட கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, வழில கடப்பாறை, வண்டிச்செயின், சங்கிலிகள் பிணைச்சி, காங்க்ரீட் படிகள், சைடு தடுப்புகள், இரும்புப் படிக்கட்டுகள்னு பல.    கீழ இருக்கற ஆஸ்ரமத்துலயே சித்தியாகியிருக்கும் விடோபா ஸ்வாமிகள் மேல வந்தவங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

வழில ஒரு சொட்டு தண்ணி வசதியும் கிடையாது, ஒரு கடையும் கிடையாது.   இவ்வளவு உயரமான செங்குத்து மலையேற்றத்துல இன்னி வரை யாருக்கும் எந்த குறையும் நடந்ததுமில்லை.    ஆளுக்கு ஒரு எலுமிச்சை சாதம், தயிர் சாதம், வாட்டர் பாட்டில், ஆப்பிள், க்ளூகோஸ்னு சுமந்திட்டு போய்டலாம்னு கெளம்பிட்டோம்,  ஒன்னு ரெண்டு பேர் தான் ஷூ போட்டிட்டு வந்தாங்க.  விடிகாலை 2.30 மணிக்கு ஆரம்பிச்சி வழில பாம்பு, தேளெல்லாம் பாத்திட்டு, மழைல நனைஞ்சிட்டு 3 கி.மீட்டர் டார்ச் லைட் வெளிச்சத்துல ஒரு வழியா வீரபத்திரர் கோவிலுக்கு வந்து சேந்தோம்.  அந்த நேரத்துலயும் அங்க சுடா கஞ்சி ரெடி வர்றவங்களுக்கு.  நாங்க ஏற்கனவே சாப்டதால கெளம்பிட்டோம், மழையும் நின்று விட்டது.  1263 படிகளப்பா, அத்தனையும் முழங்கால் முறிச்சான் படிக்கட்டுகள்.  அத தாண்டினதும் ஏற்றமான சிறிய, பெரிய பாறைகள்.  டீம் பிரிஞ்சி போச்சு.  மணி சார் முதல் டீம்ல போய்ட்டாரு அவரும் வெயிட் கிடையாது, அவர்ட்ட எந்த லோடும் கிடையாது.  பையனும், பொண்ணும் ரைன் கோட்டுக்குள்ள.  ரெண்டு மணி நேரம் தூக்கிட்டு வந்திருப்பேன் அந்த குட்டிப்பையன நான்,  செர்மராஜ் நண்பேன்டான்னு தூக்கிட்டு போயே போய்ட்டாரு,  நானும் என் மனைவியும் ஸ்லோவா போறோம்னு சின்னப்பையன் அண்ணா எங்களோட வந்து சேந்திட்டாரு.  பெரிய பெரிய மரவட்டைகள் கறுப்பும், சிவப்புமா, தேரை, தவளைகள் ஓன்னு இரைச்சலோட, மழை மேகங்களால பௌர்ணமி முடிஞ்ச 5-6 நாள்லயே அவ்ளோ இருட்டு.  நாங்கதான் கடைசி, ஒக்காந்து ஒக்காந்து போறோம்னு பாத்தா, எங்க டீம்லயே ரெண்டு பசங்க சுத்தமா டயர்டாகி நடப்போமா, மாட்டோமான்னு வரானுங்க.   நாங்க அவங்களயும் விட்டு முன்னே போய்ட்டோம்,  "உன்னுடைய வேலொன்று உறுதுணையாய் வருகிறது, கும்மிருட்டுப் பாதையிலும் கோடாக தெரிகிறது" ன்னு மன தைரியத்துலயும், தெய்வபலத்துலயும்தான் எங்க குடும்பம் இந்த ப்ராஜெக்ட்ல மொத்தமா போயிட்டு இருக்கோம்.  நிச்சயமா ஏறிடுவோம் ஆனா என்னிக்குன்னெல்லாம் திட்டம் இல்ல :) அப்பப்ப என் கிட்ட இருந்த குட்டி சங்க எடுத்து முழு மூச்சோட ஊதிட்டு, பின்னாடி வர்ற பசங்களுக்கு சத்தம் குடுத்துட்டு.  வழில கடலாடி பாதையும் ஒன்று சேர்ந்தது.

விடிகாலை 5.30 மணி இருக்கும், டார்ச் லைட் அணைச்சிட்டு நடக்கறோம்.  குளிர்ல நடுங்குது உடம்பு, வேர்வையா ஊத்துது ஆனா.  ஒரு வழியா கடப்பாறை மலையடிவாரத்து வந்து எல்லாரும் கூடினோம்.  செர்மராஜ் குழந்தைய பக்கத்துலயே பாறையேற்றத்துல தூங்க வெச்சிட்டு பாத்துக்கிட்டு இருந்தாரு.  வெள்ளியங்கிரி முதல் ஆளா ஓடிப்போன கோபால் இங்கயும் அப்டி சாமி பாத்துட்டு வந்திட்டாரு போலன்னு பாத்தா, அவரு அந்த கடப்பாறை மலை செங்குத்து, இரும்புப் பாதைகள், கைப்பிடிகள், சங்கிலிகள், கீழ பாத்தா 1000 அடி உயரம், சுத்தி எங்க பாத்தாலும் பச்சைப்பட்டாடையில் பராசக்தி மலைத்தொடர்களாக.... பயந்து அங்கயே ஒக்காந்துட்டு இருக்காரு படபடன்னு.  போதாததுக்கு விடிய விடிய பசியோட இருந்ததோ என்னவோ, நாங்க தான் முதல் டீம்னு குரங்குகள் சூழ்ந்து விட்டன.  ப்ளாஸ்டிக் பைன்னு நெனச்சு ஒன்னு என் பையனோட ரைன் கோட்ட நவுத்தி பாக்குது,  செர்மராஜ் பைய ஒரு பக்கம் பிடிச்சிக்க, இன்னொரு பக்கம் அது பாட்டுக்கு ஒவ்வொரு சிப்பா தொறந்து பாக்குது, மலையேறுவோர் பேண்ட் பாக்கெட்ல உரிமையா கைய விட்டு கெடச்சத திருடுது.    நா வரல, என்னால முடியாது சொன்ன மொத்த கும்பலும் இந்த குரங்கு கூட்டங்களால வேற வழியே இல்லாம செர்மராஜ் பொறுப்புல மொத்த குரங்குகளையும் குத்தகைக்கு விட்டுட்டு, பொறுமையா ஏறினோம் கடப்பாறை மலைல.

என் பையனும் முழிச்சிட்டாரு.  நம்ம கிட்ட அப்புச்சி (ஸ்னாக்ஸ்) ஒன்னும் இல்ல, அதனால நம்ம கிட்ட வராது, அது ஆஞ்சனேயர் உம்மாச்சின்னு தைரியம் சொல்லி ஒரு வழியா ரெடி பண்ணியாச்சு.  இனிமே யாராலயும் யாரையும் தூக்கிட்டுப் போக முடியாது.  ஒவ்வொரு கடப்பாறை, வேல், சூலங்களையும் பிடிச்சி ஆட்டி பாத்து ரெண்டு கைகளிலும் ஒவ்வொன்ன பிடிச்சிட்டு, குழந்தைய அடுத்த கடப்பாறை கிட்ட தூக்கி வெச்சி, புடிச்சிக்க சொல்லி, அவர பாத்துக்கிட்டே நான் அடுத்த அடி ஏறி, அங்கேந்து அடுத்த அடின்னு இப்டியே கடப்பாறை மலை, தண்டவாளங்கள், இரும்பு தகரப்பாலங்கள், இரும்பு ஏணிகள்னு ஏத்தி, எறி, ஏத்தி, ஏறி ஒரு வழியா வந்தேன்.  குறுநிலமன்னர் நன்னன் கோட்டை வாசல்ல ஒக்காத்தி வெச்சி கொஞ்சம் ரெஸ்ட்டு, ஃபோட்டோக்கள், விடிஞ்சாச்சுல்ல, இனிமே எங்கள புடிக்க முடியாது விளம்பரத்துல,  கீழயே இந்த தடவ வீரபத்திரர் கிட்ட உங்களெயெல்லாம் நம்பித்தான் குடும்பத்தோட வந்திருக்கேன்,  என் திமிரு கொஞ்சம் கூட இல்லன்னு வேண்டிட்டேன்,  அவனருளால் அவன் தாள் வணங்குவோம்னு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு.   திருப்பி ஒரு 100 படிகள் கான்க்ரீட் படிகளேறி 6.30 மணி போல கோவிலை அடைந்தோம்.  மணி சார் அங்க வெளையாடிட்டு இருக்காரு.  வீரபத்திரர் கோவில்ல சொன்னபடியே ஒரு பைரவர் (நாய்) எங்க டீம்ல யாரு கடைசில அப்பப்ப வராங்களோ, அவங்களோடயே தங்கி, தங்கி கூடவே வந்தது ரொம்ப ஆச்சர்யம்.   இந்த அனுபவம் எல்லாரும் சொல்றாங்க.

ஏறத்தாழ 600 வருஷங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நடந்திருக்கிறது, கோவில் சூப்பரா இருக்கு, மழைல நனையாம ஒரு 50 பேர் தங்கலாம், மழைல நனஞ்சிட்டு ஒரு 400-500 பேர் மேல நிக்கலாம், அந்த அளவு இடத்த பாதுகாப்பு வேலி போட்டு வெச்சிருக்காங்க.  பக்தர்கள் கொண்டு வரும் பூஜை பொருள்களைக் கொண்டு அவங்களே உள்ள போயி, சாமிய தொட்டு பூஜை பண்ணலாம்.  நாங்களும் செய்தோம்.  வீட்ல ஒரு வில்வ மரம் இருக்கு, 200 இதழ்கள் போல பறிச்சிட்டு போயிருந்தேன்.  வில்வ இலையை ஒவ்வொரு முறையும் திரும்பவும் அர்ச்சனைக்கு பயன்படுத்தலாம், தோஷமில்லை.  பாஸ்கர் குடுத்திருந்த காப்பர் வாட்டர் பாட்டில்ல தண்ணி எடுத்திட்டு போயிருந்தோம்.  அதையும், 5 எலுமிச்சைப் பழத்தையும் வெச்சி கொஞ்சமா அபிஷேகம் செய்து, வில்வார்ச்சனை செய்து, சங்கு முழங்க ரெண்டு ஆப்பிள்களையும் இறைவனுக்கு கண்ணப்ப நாயனார் ஸ்டைல்ல படைத்து பூஜையை முடித்தோம்.    டீம் கொண்டு வந்திருந்த சாப்பாட்டையெல்லாம் முடிச்சாங்க.    அங்க இப்படி வந்தவங்களோட மேல ஏறி வந்த 3-4 நாய்கள் ஒரு குரங்கையும் நம்மள தொல்லை செய்ய விடாமல் கோவில்லேந்து விரட்டிட்டே இருந்துதுப்பா.

எங்களுக்குப் பின்னாடி ஒரு டீம்,  நாலு பாய்ஸ், நெறையா பூஜை பொருள்களோட வந்து சிறப்பா பூஜைகள் செஞ்சாங்க.  பேண்ட் சட்டைலேந்து வேஷ்டிக்கு மாறி, திருநீறு பூசி சுத்தமாக, சிவனின் பழைய ஆடை, அலங்காரங்களையும் கலைந்து சிறப்பாக அபிஷேகங்கள் செய்தார்கள்.  ரெண்டு அடியார்கள் பெரிய சங்குகள் கொண்டு கோஷம் எழுப்பினார்கள்.  மல்லிகார்ஜுனர் பூஜை முடித்து, ப்ரமராம்பிகையின் திருப்பாதங்களையும் இப்படியே சிறு அபிஷேகம், பூஜைகளை செய்து முடித்து, டீம் ஃபோட்டோல்லாம் எடுத்திட்டு 7.30 மணிக்கு இறங்க ஆரம்பித்தோம்.  மேல கோவில் கிட்ட ஒரு பாறைப்பள்ளம் இருக்கு, அதுல மழைத்தண்ணி சேந்திருக்கு, அதுதான் அந்த கோவிலுக்குக் குளம்.    யார்ட்டயும் சொட்டு தண்ணி இல்ல.  வழில ரெண்டு இடத்துல ஆட்டுக்கல்லுல மழைத்தண்ணி தேங்கி தெளிஞ்சிருந்துது,  நான், மனைவி, பையன் மூணு பேரும் அதத்தான் குடிச்சோம் கையால அள்ளி, அள்ளி.  பொண்ணு ஏற்கனவே டீம் கூட கீழ இறங்கி போயாச்சு.  சின்னப்பையன் அண்ணா இறங்கும்போது பையன தூக்கிட்டு வந்தார்,  நான் கடைசில ஒரு மணி நேரம் தூக்கிட்டு, நடத்திட்டு வந்தேன்,  வழில 10-15 நிமிஷம் படுத்து, தூங்க விட்டோம்.    என் பொண்ணுகிட்ட மலையேறும் ஒரு பக்தர், எங்கப்பன ஏறி வந்து பாத்திட்டல்ல, இனிமே உனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்னு ஆசிர்வதிச்சாரு.

அடிவாரத்துல வீரபத்ரர் கோவில்ல வந்து ஒரு ரெண்டு லிட்டர் தண்ணி முழுசா குடிச்சேன் டேங்க்குலேந்து.  மனைவி கஞ்சி குடிச்சாங்க அன்னதானம்னு.  பையன் ரெண்டு வடை வாங்கி சாப்ட்டாரு.  10.30 மணி போல கெளம்பி, பூந்தமல்லி பஸ் ஸ்டாப்ல இறங்கி, பிபி 66 டீலக்ஸ், ஆங் அதே ப்ளாஸ்டிக் சேர் போட்ட சரவணா ஸ்டோர் பொம்ம பஸ்தான்,  ஏறி வீட்டுக்கு வந்து சேந்தோம்.  வீட்டுக்கு வந்தும் ஒரு சுடு சாதம், சூப்பர் ரசம், கோஸ்-கேரட்-தேங்காய் பொறியல் அத்தனை களைப்பிலும் அமுது படைத்தாள் மனைவி.  ஃபோட்டோ பாத்துட்டு, பல் தேச்சி, சூப்பரா ஒரு வென்னீர் குளியல் போட்டு,, சாப்பாடு முடிச்சி,  தென்னைமரக்குடியெண்ணெய பசங்களுக்கு தடவி, நீவி விட்டு ஆசமா ஒரு தூக்கம்.    ஸ்கூல்ல போன வாரம் க்ருஷ்ண ஜயந்தி மாறுவேஷ போட்டில என் பையன் முதல் பரிசு வாங்கியிருக்காருன்னு இன்னிக்கு பாராட்டுச் சான்றிதழ் குடுத்திருக்காங்க.  எல்லாம் அவன் செயல்.