வட இந்திய யாத்திரை 2 ன் தொடர்ச்சி
டெல்லி: நம் தேசத்தின் தலைநகரம். மகாபாரத காலத்தில் இருந்தே
இது வெகு பிரசித்தம். சென்னை, கல்கட்டா போன்ற தலைநகரங்கள்
தரைவழி, வான்வழி, கடல்வழி மூன்றாலும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த டெல்லி சுற்றிலும் நிலம் சூழ்ந்தது. மலைகளும்
கிடையாது. உலர் குளிரும், வெயிலும் ஒவ்வொரு வருடமும் இங்கு
வாட்டும். எல்லா மாநிலங்களின் பிரதிநிதிகளும் அதிகம் உலாவும்
இடம் என்பதால், எல்லா மாநிலங்களின் அலுவலகங்கள்,
தங்குமிடங்கள் என்று பரபரப்பாக இருக்கும் இடம். அதனால்
டிராபிக், சுற்றுப்புற சுகாதார கேட்டிற்குப் பஞ்சம் கிடையாது.
நகரின் குடியிருப்பு, தொழிற்சாலை என மொத்த கழிவும் யமுனை
நதியில் தான். வட மாநிலங்கள் எல்லாமுமே முகலாயர்
படையெடுப்புகளின் எச்சங்கள் நிறைந்தவை. பல படையெடுப்புகள்,
துக்கங்கள், துயரங்களைத் தாண்டி மீண்டும் மீண்டும் எழுந்து
நிற்கும் நம் கலாசார அடையாளங்களாக வரலாற்று,
வழிபாட்டுத் தலங்கள்.
முழுதாக மூன்று நாட்கள் இருந்தால் டெல்லியை மட்டும் நிம்மதியாக மெட்ரோ ரயில், ஆட்டோ உதவியோடு சுற்றிப்பார்த்து ஷாப்பிங்கும் முடித்துக் கொள்ளலாம். ஷூ, கோட், ஸ்லீப்பிங் பேக் (பாதி மெத்தையில் படுத்துக்கொண்டு மீதியை போர்த்திக்கொண்டு ஸிப் போட்டு மூடிக்கொள்ளலாம்) போன்றவை இங்கு பிரபலம். தெருவோரங்களில் கூடை, தட்டுக்கடைகளிலும், கடைகளிலும் கிடைக்கும். ஸ்லேட்டில் நாமும் கடைக்காரரும் அழிச்சி, அழிச்சி விலை எழுதி வாங்கலாம். கூசாம பயமின்றி விலை குறைத்துப் பேச வேண்டியுள்ளது.
வருடா வருடம் கொடி ஏற்றப்படும் முகலாயர்களின் செங்கோட்டை, குடியரசு தின ராணுவ அணிவகுப்பு நடைபெறும் வழியில் இருக்கும் இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன், பிர்லா குடும்பத்தார் கட்டி வைத்துள்ள பிர்லா மந்திர், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்(இஸ்கான்) கோவில், தாமரை வடிவிலான லோட்டஸ் டெம்பிள், 2 கின்னஸ் சாதனைகள் படைத்த சமீபத்திய வரவான ப்ரம்மாண்டமான அக்ஷர்தாம் சுவாமி நாராயண் மந்திர், துருப்பிடிக்காத இரும்பு தூண் உள்ள குதுப்மினார் வளாகம்… டெல்லியில் 2-3 ரயில்வே ஜங்ஷன்கள் உள்ளன. எல்லாவற்றிற்கு அருகிலும் 600 ரூபாய் முதல் ஐயாயிரம் பத்தாயிரம் என்று நம் காசுக்கு தக்க ஏசி நான்-ஏசி அறைகள் கிடைக்கின்றன.
ஐஸ் பெட்டிக்குள் வைத்த இளநீர் 80 ரூபாய், சாதா இளநீர் 60 ரூபாய், வெள்ளரிக்காய், கொய்யாக்காய், தர்பூசணி, லஸ்ஸி, ஆரஞ்சு, ஆப்பிள் பழ வகைகள் கிடைக்கின்றன. ராஷ்ட்ரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நடந்து செல்லும் அனுபவம், அதுவும் மாலை சூரிய அஸ்தமன வேளையில் நடந்து செல்லும் அனுபவம் மிகவும் அருமையாக, கண்ணுக்கு இனிமையாக இருக்கும். திங்கட்கிழமை சில இடங்கள் (தொல்பொருள் இலாகா) மூடப்பட்டிருக்கின்றன.
பஞ்சாபில் இருக்கும் ஜந்தர் மந்தர் மிகவும் பிரசித்தம். அதைப் போலவே இங்கேயும் ஜந்தர்மந்தர் இருக்கிறது. இங்கு கட்டிடங்களை எழுப்பி அதன் நுணுக்கங்களை, நிகழ்வுகளை, பரிமாணங்களை கொண்டு வான சாஸ்திரங்கள், கோள்கள் இருக்குமிடம், தற்போதைய நேரம், நட்சத்திரங்களைப் பற்றிய விபரங்களை பண்டைய அறிவியல் சாதனைகளாக காணலாம். விளக்கங்களோடு தகவல் பலகைகளும் ஒவ்வொரு படைப்புகளுக்கும் அருகில் இருக்கின்றன. டிக்கெட் நாற்பது ஐம்பது ரூபாய். தில்லியில், பஞ்சாபில் எந்த இடத்திலுமே 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. இலவச அனுமதி. ஆன்லைனில் வெப்சைட், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் வாங்கினால் ஐந்து பத்து ரூபாய் சலுகை தருகிறார்கள். அதை எப்படி வாங்குவது என்று விளக்கங்களும் ஆங்காங்கு வைக்கப்பட்டிருக்கின்றன. தலைநகரம் என்பதால் எல்லா இடங்களிலும் டெல்லி போலீஸ், மத்திய போலீஸ், ராணுவ வீரர்களை ஆயுதங்களோடு காணமுடிகிறது. எல்லா மாநிலங்களிலும் மேலே நாங்கள்தான் செய்தோம், நாங்கள்தான் செய்தோம் என்று மாநில, மத்திய பிரதிநிதிகள் சொல்லிக்கொள்வார்கள். அது இங்கு சற்று அதிகமாகவே இருக்கிறது.
துருப்பிடிக்காத இரும்பு தூண் இருக்கும் குதுப்பினார் வளாகம் போட்டோ ஷூட்டிற்கு அருமையாக உள்ளது. நன்கு பராமரிக்கப்படுகிறது. முகலாய அரச குடும்பத்தினர்களை புதைத்த கல்லறைகளை எங்கும் காண முடிகிறது. நிறைய வேலைப்பாடுகள் எங்கு பார்த்தாலும். தங்கள் பங்குக்கு தொல்பொருள் இலாகா துறையினர் வழக்கம்போல் பெருக்கி, தூய்மை செய்து, புல் வளர்த்து டிக்கெட் போடுகிறார்கள். டெல்லி, பஞ்சாபில் சுற்றுப்புறத்தை பாதிக்காத பேட்டரி ஆட்டோக்கள் பிரசித்தமாக இருக்கிறது. அதிகபட்சம் 30 கிலோமீட்டர் வேகம் செல்கிறது. ஷாக் அப்சர்வர் இல்லாத காரணத்தால் வயதானவர்களுக்கு, பெண்களுக்கு, உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு பயணிக்க சற்று கடினமாக இருக்கிறது.
ரெட் ஃபோர்ட் என்னும் செங்கோட்டை. பிரதமர் கொடியேற்றும் இடம். போட்டோ எடுத்துக் கொள்ளலாம். எங்கும் டிக்கெட் உண்டு. சற்று தொலைவிலேயே ஆட்டோ/பஸ் நின்றுவிடும். அங்கிருந்து செங்கோட்டை வாசலுக்கு நடந்து வரலாம் அல்லது பேட்டரி ஆட்டோவில் 10 ரூபாய் கொடுத்து வரலாம். கோட்டைக்கு உள்ளே அரச குடும்பத்தினர் குளிக்குமிடம், குறைகள் கேட்கும் இடம், நந்தவனம், சுல்தான் படுக்கையறையிலிருந்து பாதாள வழி கொண்ட இரும்பு மசூதி என்று இரண்டு மூன்று இடங்கள் இருக்கின்றன. மற்றபடி பராமரிப்பு ஆக்ரா கோட்டையை போல் இல்லை.
பஹாய் மத வழிபாட்டுத் தலமான லோட்டஸ் டெம்பிள் பெரிய, நன்கு பராமரிக்கப்படும் தனியார் அமைப்பு. மத பேதங்கள் அற்றது. பல விருதுகள், ஈஃபில் டவர், தாஜ்மஹாலையும் தாண்டிய பார்வையாளர் எண்ணிக்கையையும் சில வருடங்கள் பெற்றது. நாங்க போயிருந்த போது கீதை, பைபிள், பௌத்தம், குரானிலிருந்து சில வாக்கியங்கள் வாசிக்கப்பட்டன. 2000 பேருக்கு மேல் அமரும் பிரமிப்பான கோவிலுக்குள் காலணி, புகைப்படங்கள் அனுமதி இல்லை.
சுவாமி நாராயண் அக்ஷர்தாம் மந்திர்: மிகக் குறைந்த காலத்தில் (5 வருடங்கள்) தன்னார்வலர்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய ஹிந்துக் கோவிலுக்கான கின்னஸ் விருது பெற்றது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கான வேலை வாய்ப்பு தந்தது. பழங்காலத்து பாரதத்தின் பெருமை, வான சாத்திரம், மருத்துவம், விமானம், போர், கல்வி முறை, வாழ்வியலை படகில் பயணித்து பிரமிக்கும் காட்சி, சினிமா, ரோபோ காட்சிகள், படிக்கிணற்றில் மாலை நேரத்து லேசர் மின்னொளியில் பிரம்மாண்டமான செயற்கை நீரூற்றுக் காட்சி என 600-800 ரூபாய்க்கு எக்சிபிஷன்கள் கொண்டது. கான்க்ரீட் உபயோகமின்றி பண்டைய முறையில் சிற்பங்கள், விளக்கொளிகள், பராமரிப்பு கொண்டது. மூலஸ்தானத்து தங்கத்தினாலான நாராயண், சிவன், ராமன் சன்னதிகளைத் தரிசிக்க இலவசம். எக்சிபிஷன்களோடு முழுமையாக அனுபவித்துப் பார்க்க 3-4 மணி நேரங்கள் நிச்சயம் ஆகும். குழந்தைகளும், பெரியோர்களும் ஒரு முறை பார்க்கலாம். எந்த ஒரு எலெக்ட்ரானிக் சாதனங்களும், பெரிய பைகளும் அனுமதி இல்லை., க(கொ)டுமையாக செக் செய்து அனுமதிக்கிறார்கள். மற்றொரு முந்தைய அக்ஷர்தாம் குஜராத்தில் உள்ளது. டில்லியின் ஹஸ்ரத் நிசாமிதீன் ரயிலடியிலிருந்து மதுரா (வட மதுரை நம் படைப்புகளின் படி) 2-3 மணி நேர பயணம்.
No comments:
Post a Comment