May 10, 2009

பட்டினத்தார்

காலம்: 10 -ஆம் நூற்றாண்டு
ஊர்: காவிரிப்பூம்பட்டினம்
தாய்: ஞானகலாம்பை
தந்தை: சிவநேசர்
குலம்: வைச்ய குலம்
மனைவி: சிவகலை
மகன்: மருதவாணன்

சிவபெருமானின் நண்பரும், திசைக்காவலர்களில் ஒருவரும், யக்ஷர்களின் தலைவரும், இராவணேச்வரனின் சகோதரரும், புஷ்பகவிமானத்தின் சொந்தக்காரருமான குபேரன் ஒரு முறை பூமியில் அவதரிக்க நேர்ந்தது. தமிழகத்தில் திருவெண்காட்டிற்கருகில் உள்ள காவிரிப்பூம்பட்டினத்தில் சிறந்த வைச்ய குலத்தில் சிவநேசர்-ஞானகலாம்பை தம்பதிகளின் நற்பலனாக ச்வேதாரண்யன் (திருவெண்காடர்) எனும் திருப்பெயருடன் பிறந்தார்.

ஐந்து வயதில் தந்தையை இழந்து, தாயாரால் வளர்க்கப்பட்டார். ஆறு வயதில் சிவனருளால் திருவெண்காடர் சன்னதியில் தாயார், சிவனடியார்கள் முன்னிலையில் வ்யாக்ரபுரத்தை சேர்ந்த ஒரு ப்ரம்மச்சாரியால் முறையாக பஞ்சாக்ஷர மந்திரமும், சிவபூஜை முறைகளும் உபதேசிக்கப்பட்டார். குருநாதர், சிவனடியார்கள், வறியவர்கள் என அனைவரும் பொருள்களாலும், த்ரவ்யங்களாலும், உணவு வகைகளாலும் அன்புடன் பெருமளவில் உபசரிக்கப்பெற்றனர்.

இளமைப்பருவத்தில் சிவசிதம்பரச் செட்டியார்-சிவகாமியம்மை தம்பதிகளின் தவப்புதல்வியான சிவகலை என்பவருடன் பட்டினத்தார் திருமணம் 5 நாட்கள் கோலாகலமாக நடந்தேறியது. அளவிற்கடங்கா செல்வக்குவியல், புகழ், சிவபூஜை, அடியார் பூஜை, தர்மகார்யங்கள் என வாழ்க்கை வளர்ந்தாலும், முப்பத்தைந்து வயதாகியும் மழலைச்செல்வம் ஒன்று இல்லாத குறை தம்பதிகளைப் பெரிதும் வாட்டியது. இடைமருதூர் ஈசனிடம் முறையிட்டனர்.

அதே வேளையில், திருவிடைமருதூரிலேயே மருதவாணர் பூஜைகளிலும், சிவனடியார் சேவையிலும் தன் செல்வங்கள் அனைத்தையும் செலவிட்டு, கடைசியில் இறைவன் திருவிளையாடலில் மனைவியின் திருமாங்கல்யத்தையும் அடியார் சேவைக்கே தீர்த்த சிவசருமர்-சுசீலை எனும் தம்பதியினர் மறுநாள் அடியாருக்கு அன்னமிட பொருளுக்கு என்ன செய்வது என்று பெரும் துயருற்று, வருத்தத்துடன் கண்ணயர்ந்தனர்.

இரு தம்பதிகளுக்கும் அருள திருவுளம் கொண்ட மருதீசர், சிவசருமர் தம்பதிகளின் கனவில் மலர்ந்து, "நாளைக் காலை காருண்யாமிர்தத் தீர்த்தக் கரையில் இருக்கும் வில்வமரத்தடியில் யாமே ஒரு குழந்தையாய் இருப்போம். எம்மை காவிரிப்பூம்பட்டினத்தில் இருக்கும் பட்டினத்தாரிடம் கொடுத்து எடைக்கு எடை பொன்னைப் பெற்றுக்கொள்ளுங்கள், இது பற்றி கவலை கொள்ளவேண்டாம். குபேரனே பட்டினத்தாராக அவதரித்திருக்கிறான். இவை முன்னமே முடிவு செய்யப்பட்டது. அவனுக்கு மெய்ஞான நிலை அருள்கையில் உமக்கும் குடும்பத்தோடு முக்தி பேறு அளிப்போம்" என்று கூறி மறைந்தார். அதேபோல் பட்டினத்துத் தம்பதிகளின் கனவிலும் "சிவசருமர் கொண்டுவரும் குழந்தையை எடைக்கு எடை பொன் கொடுத்துப் பெற்றுக்கொள்ளுமாறும், இந்தப் பிறவியில் உங்களுக்குப் பிள்ளைப் பேறு இவ்விதமே" என்றும் கூறி மறைந்தார்.

இறைவனுக்கீடாக எவ்வளவுப் பொருள் வைப்பது. குழந்தை இருந்த தராசுத்தட்டு கீழாகவே உள்ளது. சிவசருமர் போதும், போதும் என்க, பட்டினத்தார் என் பொருளனைத்தையும் கொடுத்து, என்னையும் கொடுத்து இந்தக் குழந்தையைப் பெற்றே தீருவேன் என்கிறார். இந்த நிலையில் அனைவரும் பார்த்திருக்க தராசுத்தட்டுகள் சமநிலைக்கு வருகின்றன. சிவசருமரே ப்ரோஹிதராக இருக்க குழந்தைக்கு "மருதவாணன்" என்ற பெயர் சூட்டப்படுகிறது. தகுந்த மரியாதைகளும், உபசரிப்பும் செய்யப்பெற்ற சிவசருமர் பட்டினத்தார் பல வண்டிகளில் அளித்த செல்வங்களுடன் பாதுகாப்புடன் இடைமருதூருக்கு அனுப்பிவைக்கப்படுகிறார். குழந்தையை யிழந்த வருத்தத்துடன் நாட்களைக் கழித்த சிவசருமர் தம்பதிகள் நாளைடைவில் இறையருள் பெற்று உய்கின்றனர்.

பட்டினத்தாரில்லத்தில் சீரோடும், சிறப்போடும், கலைகளில் சிறந்தும், பல திருவிளையாடல்களை நிகழ்த்தியும் குழந்தை வளர்ந்து பதினாறாம் ப்ராயத்தையடைகிறது. செல்வந்தர்களுக்கெல்லாம் தலைவரான பட்டினத்தாரின் குழந்தை அவருக்கு மெய்ஞ்ஞானம் அளிக்க நேரம் வந்ததையுணர்ந்து, நண்பர்களுடன் சேர்ந்து திரைகடலோடித் திரவியம் தேட தந்தையிடம் அனுமதி கேட்கிறார். பெறும் வற்புறுத்தலுக்குப் பின் அனுமதிக்கப்படுகிறார்.சென்ற இடங்களில் அனைவரையும் விஞ்சிப் பொருளீட்டுகிறார். திரும்பிக் கடலில் வந்து கொண்டிருக்கையில் காற்றும், பெருமழையும் கப்பல்களை அலைக்கழிக்க வைக்கின்றன. குளிரிலும், மழையிலும் அல்லலுற்ற நண்பர்கள் மருதவாணன் வறட்டிகள் வைத்திருப்பதையறிந்து சிலவற்றைக் கேட்கின்றனர். மீண்டும் அதே போன்ற வறட்டிகளையே திருப்பித்தரவேண்டுமென்று எழுதி வாங்கிக்கொண்டு வறட்டிகளைக் கொடுக்கிறார்.

திசை தெரியாமல் திண்டாடி, அங்குமிங்கும் சுற்றி, அனைத்துப் பொருள்களையும் இழந்து ஒருவாறு ஊரை அடைகின்றனர். மருதவாணரின் வறட்டிகள் மட்டுமே எஞ்சுகிறது. உயிருடன் திரும்பிய புதல்வர்களைப் பெற்றோரும், உற்றாரும் ஒன்று சேர்ந்து வரவேற்று மகிழ்கின்றனர். மருதவாணருடன் வந்தவர்கள் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாகவும், வறட்டிகளுக்குப் பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டதையும் பட்டினத்தாரிடம் கூறிச்செல்கின்றனர். கப்பல்களில் கண்ட வறட்டி மூட்டைகளைக் கண்ட அவரும் பெரும் அவமானமும், வருத்தமும் அடைகிறார். ஒரு பெட்டியை தந்தையாரிடம் கொடுத்து, எல்லாவற்றையும் சரி பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, மருதவாணர் அன்னையையும், பாட்டியையும் பார்ப்பதற்கு இல்லம் சென்று விடுகிறார்.

அந்தப்பெட்டியில் கடன் பத்திரங்களும், மாதிரிக்கு சில வறட்டிகளும் இருக்கின்றதைக் கண்டு நொந்த பட்டினத்தார் அவைகளைத் தூக்கி எறிகிறார். தரையில் விழுந்துடைந்த வறட்டிகளிலிருந்து முத்து, மாணிக்கம், வைர வைடூர்யங்கள் என செல்வங்கள் சிதறித்தெறித்தோடுகின்றன. அதைக்கண்டு நெஞ்சம் பதைக்க, பரபரப்போடு செல்வனைப் புரிந்து கொள்ளாமல் வருத்தப்பட்டதை நொந்து வீட்டை நோக்கி ஓடுகிறார். கிடைப்பாரா இனி? அனைவரும் அனைத்து இடங்களிலும் தேடியும் மருதவாணர் கிடைக்கவில்லை. அப்போது பட்டினத்தார் மனைவி, "நம் மைந்தன் தாங்கள் வந்தவுடன் கொடுக்கும்படி இந்தப் பேழையைக் கொடுத்திருக்கிறான்" என்றாள்.

ஆவலுடனும், பயத்துடனும் அதைத் திறந்துபார்த்த அவருக்கு அதில் ஒரு காதற்ற ஊசியும் (குண்டூசி), ஒரு ஓலைச்சுவடியும் காத்திருந்தன. "காதற்ற ஊசியும் வாராது காணுங்கடைவழிக்கே" - இதுவே அந்த சுவடியில் இருந்த வாசகம். குண்டூசியைக் கூட நாம் இறந்துபடும்போது எடுத்துச்செல்லப் போவதில்லை என்ற அந்த சொல், பக்குவமடைந்திருந்த பட்டினத்தாருக்கு பசுமரத்தில் ஆணி அடித்ததுபோல் பதிந்தது. துறவு கொள்கிறார். அம்மாவின் காலம் முடியும் வரை ஊர் எல்லையைத் தாண்டுவதில்லையென்று உறுதி செய்துகொள்கிறார். மனைவியை சிவனடியார்க்குத் தொண்டு செய்து கொண்டு இறைவன் திருவடிகளை அடையுமாறு அறிவுறுத்துகிறார். தலைமைக் கார்யதர்சியான சேந்தனாரிடம் எல்லா செல்வங்களையும் அனைவரும் எடுத்துக்கொள்ளும் வண்ணம் சூறையிடுமாறு கூறி விட்டு ஊர் எல்லையில் இருக்கும் ஒரு மண்டபத்தைத் தனக்கிருப்பிடமாகக் கொண்டு, தினமும் ஊரில் சென்று அனைவரிடமும் பிச்சையெடுத்து உண்டு, ஈசன் நினைவில் காலத்தைப் போக்குகிறார்.

அரசனுக்கும் வேண்டியவரான பட்டினத்தார் துறவு பூண்ட செய்தி எங்கும் பரவி, ஊர் மக்களும், பெரியவர்களும் அவர் தங்கியிருந்த மண்டபத்திற்கு வந்து திரும்பி வந்து விடுமாறு வேண்டுகின்றனர்.

அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே

விழி அம்பொழுக

மெத்திய மாதரும் வீதி மட்டே


விம்மி விம்மி இரு


கைத்தலைமேல் வைத்து அழும்


மைந்தரும் சுடுகாடுமட்டே


பற்றித் தொடரும் இருவினை


புண்ணிய பாவமுமே

- என்று பதிலளிக்கிறார். விஷயத்தை யறிந்த மன்னர் பட்டினத்தாரிடம் வந்து, "வணிகர் குலத் தலைவரே ! எல்லாவற்றையும் உதறி விட்டு இப்படி பரதேசியாக இங்கு வந்து அமர்ந்திருக்கிறீரே. இதில் என்ன விசேஷத்தைக் கண்டீர்?" என வருத்தத்துடனும், பரிவுடனும் கேட்கிறார். "மன்னர் நிற்க, ஆண்டி நான் அமர்ந்திருக்கிறேன், இதுதான் விசேஷம்" என்கிறார். மன்னர் வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார். அவர் முன்பிருந்த நிலையையும், இப்போதிருக்கும் நிலையையும் கண்ட உறவினர்களும், நண்பர்களும் வருத்தமும், வெறுப்பும் அடைகின்றனர். ஒரு நாள் பிச்சையெடுத்து வருகையில் அவர் தமக்கையாரே விஷம் கலந்த அப்பத்தை தயாரித்து அவருக்கிடுகிறார். சித்தரல்லவா அவர். "தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று தமக்கையின் வீட்டின் மீதெறிந்துவிட்டு செல்கிறார். மளமளவென்று வீடுகள் தீப்பற்றி யெரிய ஆரம்பிக்கின்றன. அவர் கால்களில் விழுந்து அனைவரும் மன்னிப்பு வேண்ட, கருணை புரிகிறார். நெருப்பு அணைந்து விடுகிறது.

காலம் கழிகின்றது. பட்டினத்தாரின் தாயார் இறைவனடி சேர்கிறார். விஷயத்தைக் கேள்விப்பட்ட பட்டினத்தார் விரைந்து வருகிறார். தாயின் மெல்லுடலை கட்டைகளும், சுள்ளிகளும் குத்திக் கொடுமைப் படுத்தும் என்று வாழை மட்டைகளால் சிதையமைத்து தாயின் பெருமைகளை நினைத்துப் பாடல்களைப் பாடுகிறார்.

முன்னை யிட்டதீ முப்புரத்திலே


பின்னை யிட்டதீ தென்னிலங்கையில்

அன்னை யிட்டதீ அடிவயிற்றிலே

யானும் இட்டதீ மூள்கமூள்கவே

- என்று பாட சிதை தானாகவே பற்றி யெரிகின்றது.

பல ஊர்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்துப் பாடல்களைப் பாடுகிறார். மௌன விரதம் இருந்த ஒரு நாளில், ஒரு வீட்டின் வாசலில் பிச்சைக்காகக் கையைத் தட்டுகிறார். அந்த இல்லத்தின் தலைவன் விவரமறியாமல் காம எண்ணத்துடன் எவனோ ஒருவன் தன் வீட்டு வாசலில் கையைத் தட்டுவதாக யெண்ணி அவரை அடித்து விடுகிறான். ஒரு சாண் வயிற்றுக்காகத் தான் படும் பாட்டை யெண்ணி, இனி எங்கும் பிச்சை யெடுப்பதில்லை யென்றும், இருக்கும் இடத்தில் கிடைப்பதையே உண்ணவும் நிச்சயித்துக் கொள்கிறார்.

இருக்கும் இடம் தேடி என் பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் - பெருக்க

அழைத்தாலும் போகேன் அரனே என் தேகம்

இளைத்தாலும் போகேன் இனி


உஜ்ஜயினியில் ஒருமுறை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் ஒரு பழைய பிள்ளையார் கோவிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் உருவம் தெரியாமல் பிள்ளையார் என்று நினைத்து அன்று அரண்மனையில் திருடியதில் பங்காக ஒரு விலையுயர்ந்த மாலையைப் போட்டுவிட்டு சென்று விடுகின்றனர் ஒரு திருட்டுகூட்டத்தினர். அவர்களைத் துரத்திக் கொண்டு வந்த காவலர்கள் ஜொலிக்கும் அணிகலனைப் போட்டுக் கொண்டிருந்த பட்டினத்தாரை மிகுந்த கடமை யுணர்வுடன் சபைக்கு இழுத்துச் செல்கின்றனர். பலரின் வேறுபட்ட கூற்றுகளுக்கிடையே, மன்னர் பத்ரகிரியாரும் விதி வசத்திலிருந்து, அவரைக் கழுவிலேற்றிக் கொன்று விடச் சொல்கிறார். கழுமர மிருக்கும் இடத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பட்டனத்தார் அதைப் பார்த்து,

என் செயலாவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே


உன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்த

பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்கு

முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே

- என்று பாடுகிறார். கழுமரம் உடனே தீப்பற்றி யெரிந்து சாம்பலாகி விடுகிறது. அதிகாரிகளும், காவலர்களும் பத்ரகிரியாரிடம் விஷயத்தைத் தெரிவிக்கின்றனர். பக்திமானான அரசர் உண்மையைப் புரிந்து கொள்கிறார். அடியார் காலில் அரசர் விழுந்து, தன் தவறை மன்னித்தருளுமாறு வேண்டிக் கொள்கிறார். பட்டினத்தாரின் அருட்பார்வையும், உபதேசமும் பெற்ற அரசரும் துறவு பூண்கிறார். பட்டனத்தாருக்கு சீடராகிறார்.

மீண்டும் திருவெண்காட்டிற்கு வந்திருந்த பட்டினத்தாரிடம், அவர் செல்வங்களையும், சொத்துக்களையும் அரசு கஜானாவில் சேர்க்கும் பொருட்டு சேந்தனாரை யரசர் சிறையில் அடைத்து, சித்ரவதை செய்வதாக, வறுமையில் தவிக்கும் சேந்தனாரின் மனைவி, குழந்தைகளோடு வந்து கூறி யழுகிறார். அவர்களை யழைத்துக் கொண்டு இறைவன் சந்நிதிக்கு சென்ற பட்டினத்தார்,

மத்தளை தயிருண்டானும்


மலர்மிசை மன்னினானும்

நித்தமுந் தேடிக் காணா

நிமலனே! அமலமூர்த்தி!

செய்த்தளைக் கயல்பாய்

நாங்கூர்ச் சேந்தனை வேந்தனிட்ட

கைத்தளை நீக்கியென்முன்

காட்டு வெண்காட்டுளானே!

- என்று வேண்ட, பரமனருளால் பட்டினத்தார் முன் நிற்கிறார் சேந்தனார். அரசன் சிறையில் இருந்து விடுதலை யளித்தது போல், பிறவிக் கடலில் இருந்தும் அவருக்குத் தில்லையில் இறைவன் விடுதலை யளித்து ஏற்றுக் கொள்கிறான். பின்னொரு சமயம் காளத்திநாதரைத் தரிசிக்கையில்,

வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேனல்லன் மாது சொன்ன


சூளால் இளமை துறக்க வல்லேனல்லன் தொண்டு செய்து

நாளாறில் கண் இடந்தப்ப வல்லேனல்லன் நானினிச் சென்று

ஆளாவ தெப்படியோ திருக்காளத்தி யப்பருக்கே

- என்ற பாடலைப் பாடுகிறார்.

பெரும் செல்வங்களையும், சுற்றங்களையும் விடுத்து, பிச்சையெடுத்து உண்டும், பல சித்துக்களை செய்தும், பல தலங்களுக்குச் சென்று இறைவனைப் பாடியும் தனது வாழ்க்கையைக் கழித்த பட்டினத்துப் பிள்ளை இறுதியில், திருவொற்றியூரில் இறைவனோடு கலக்கிறார்.

No comments: