Apr 23, 2018

நாகலாபுரம் ட்ரெக்கிங்

நாகலாபுரம் ட்ரெக்கிங்

தேதி: 21 ஏப்ரல் 2018, சனிக்கிழமை

ரூட்: ராமாபுரம் - திருமழிசை - திருவள்ளூர் - பூண்டி - ஊத்துக்கோட்டை - சுருட்டப்பள்ளி - நாகலாபுரம் - ராமகிரி - பிச்சாத்தூர் - 100 கிலோ மீட்டர்




டீம்:
பால்பாண்டி - லீடர்
ஞானசேகர்
ராஜ்மோகன்
பழனி
மாஸ்டர் விசேஷ்
ஸ்ரீநாத்
ஸ்ரீகாந்த்
இளவரசன்
சிவகுமார்
என் பொண்ணும் நானும்

அன்னமிட்ட கை: பால்பாண்டி அம்மா

நாகலாபுரம் - தமிழகத்திலிருந்து திருப்பதி போற வழில ஆந்திரா பார்டர்ல நொழஞ்சு கொஞ்ச நேரத்துல வந்திடும்.  சுருட்டப்பள்ளில பள்ளி கொண்ட சிவன், நாகலாபுரம் ட்ரெக்கிங்னு சொல்றாங்க, ஆனா, அதையும் தாண்டி பிச்சாத்தூர்னு ஒரு ஊர்.  அங்க தான் இருக்கு இந்த மலை, சுனைப்புனல் எல்லாம்.  நாகலாபுரம் க்ருஷ்ணதேவராயர் அம்மா பேர்ல உருவாக்கப்பட்டதுன்னு வரலாறு.

வருஷம் முழுக்க போலாம் இங்க,  ஆனா மழைக்காலத்துல சூப்பரா வழுக்கும் வழி முழுக்க, அட்டைபூச்சி ஆசமா இருக்கும்,  குளிரும், கோடைக்காலத்துல வெயில் மண்டய பொளக்கும்,  நமக்குப் பழக்கப்பட்டது தானே.  தண்ணி இருக்கான்னு கேட்டுட்டுப் போனா நல்லா இருக்கும்.

சென்னை ட்ரெக்கர்ஸ் டீம்ல அவங்க டெஸ்ட்டுல செலக்ட் ஆகி, ரூல்ஸ் ஃபாலோ பண்ணி, டீமோட கைடென்ஸ்ல போகனும், நமக்குத்தான் ஒருத்தன் சொல்லி, அதைக் கேட்டு நடந்து பழக்கம் கிடையாதே,   எங்க டீம் லீடர், பால்பாண்டி இங்கெல்லாம் போய்ட்டு வந்திருக்கார்,  போலாமான்னு கேட்க, 10-20 பேர்ல ஆரம்பிச்சி, கடைசில 11 பேர் போய்ட்டு வந்தோம்.  நான் என் பொண்ண கூட்டிட்டுப் போலாம்னு ரெண்டு வாரமாவே ரூட், க்ளைமேட், ஏற்கனவே போய்ட்டு வந்தவங்க அனுபவங்கள்னு பாத்து வெச்சிருந்தேன்.

பூச்சி/கொசுக்கடி மருந்து,
தேங்காயெண்ணெய்,
பேண்டேஜ்,பேண்டேஜ் துணி,
உலர் பழங்கள், பிஸ்கெட், புளிப்பு மிட்டார்,
மொபைல், கேமரா,
மலையேற்ற ஷூ,
லைஃப் ஜாக்கெட்/ட்யூப்,
தீப்பெட்டி/லைட்டர், சூடம், நூடுல்ஸ் பாக்கெட், பாத்திரம், தட்டு,
ட்ராக் சூட்/கார்கோ பேண்ட்/ஸ்விம் சூட்
தொப்பி, சன் க்ளாஸ்,
ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்,
துண்டு,
கத்தி,
டார்ச் லைட்,
கம்பாஸ் (திசைமானி)
பெப்பர், சால்ட், லெமன்

எல்லாம் எடுத்துட்டுப் போலாம்னு லிஸ்ட்டும் ரெடி, ஒரு சிலத விட்டுட்டு மிச்சதெல்லாம் வாங்கியாச்சு.  பால், பழனில்லாம் ஏற்கனவே போய்ட்டு வந்திருக்காங்க.  மிச்ச பேர் எல்லாம் புதுசு. ஒரு நாலு பேருக்கு நீச்சல் தெரியாது, ரெண்டு பேர் தெலுகு பாய்ஸ், கெளம்ப ரெண்டு நாளைக்கு முன்னாடி தண்ணியடிச்சுட்டு வாரா வாரம் யாராவது தவறிப்போய்டறாங்கன்னு, ட்ரெக்கிங் தடை பண்ணிட்டாங்கன்னு ந்யூஸ் காம்சாங்க ஃப்ரெண்ட்ஸ், லோக்கல் மக்கள்ட்ட ஃபோன் பண்ணி கேட்டா அது அடிக்கடி நடக்கும், தடையெல்லாம் ஒண்ணும் பண்ணலன்னுட்டாங்க.

வெயில் ஜாஸ்தியா இருக்கு,  காலை 5 மணிக்கு கிளம்பிடலாம்னு ப்ளான்,  6 மணிக்கு தான் கிளம்பினோம் ராமாபுரத்துலேந்து, பழனி கார்ல, பால் கார்ல ரெண்டு டீம்,  சுருட்டப்பள்ளில ஒரு ரோட்டோரக் கடைல மூணு ரூபாய்க்கு மசால் வடை, சாப்டு, டீ குடிச்சு, வழில, தர்ப்பூசணி சாப்டுட்டுப் போனோம்.  ஆந்த்ரால ரோட்டோரம் பனங்கள்ளு விக்கறாங்க, நம்மூர்ல மது ஒழிப்பு, கள்ளச்சாராய சாவைத் தடுக்கறேன்னு, டாஸ்மாக்க தொறந்து வெச்சிருக்காங்க, சாகற வரைக்கும் சொன்னா கேப்பான், கொஞ்ச கொஞ்சமா சாகட்டும்னு,

ஒன்பது மணிக்குப் போய் சேந்தோம் ட்ரெக்கிங் பார்க்கிங் இடத்துக்கு,  மெயின் ரோடுலேந்து மண் ரோடு ஒரு 2-3 கிலோ மீட்டர்.  பால்பாண்டி அம்மா காலை ரெண்டு மணிக்கு எழுந்து பத்து பேருக்கு புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்கா கறி, உருளைக்கிழங்கு கறி, மாங்கா துண்டம், கரண்டி, அலுமினியம் பேக்கிங்னு தடபுடல், ரெண்டு வேளைக்கு சாப்டோம், எங்க வீட்ல கெஸ்ட் வந்திட்டதால 20 இட்லியும், ஒரு டப்பா தயிர் சாதமும் தான் நான் எடுத்துட்டுப் போயிருந்தேன், பழனி பையனுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்திருந்தார்.  பார்க்கிங் சார்ஜ்ஜுன்னு 20 ரூபாய் வாங்கறாங்க, உள்ளூர்க்காரங்கன்னு நெனைக்கறேன்.  சாப்டுட்டு, அலுமினியம் கன்டெய்னர்ல மிச்ச சாப்பாட பேக் பண்ணிட்டு, காலி பாத்ரத்தையெல்லாம் கார்லயே வெச்சிட்டு கிளம்பினோம்,

சரியான வெய்யல், ஏரிக்கரைல ஏறி கொஞ்ச தூரம் நடந்து, உள்ள இறங்கினோம்.  மழை, வெள்ளத்தின் போது இந்த டேம்க்கு தண்ணி வந்து ரொம்பும் போல இருக்கு.  வழி நெடுக சைஸ் வாரியா கூழாங்கற்கள், மணல், இன்னும் சூடு ஏறல, ஒன்றை, ரெண்டு மணி நேரம் பாட்டு பாடிட்டு, கேட்டுட்டு, பேசிட்டு முதல் ஓடையை வந்து சேந்தோம்.  முதல் தடவைங்கறதால வழி நெடுக பட்டணத்த பாத்தாப்ல ஃபோட்டோஸ்,  தண்ணி சூப்பரா இருந்துது, குடிச்சிட்டு, பாட்டில்கள்ல ரொப்பிட்டு தாண்டினோம்.  நோ பாட்டில், அன்ஹெல்த்தி ட்ரிங்க்ஸ், ப்ளாஸ்டிக் குப்பைய காட்டுல போடறதில்லன்னு முடிவு பண்ணியிருந்தோம் பகுத்தறிவை யூஸ் பண்ணி,   வெல்லம் தூளா ஒரு கிலோ வாங்கிட்டு போயிருந்தேன். அதோட சுக்குப்பொடியும் ஒண்ணு, ரெண்டு விரல் போட்டு பாட்டில்ல குலுக்கி பானகம் ரெடி,  அடிக்கடி குடிச்சு, தொப்பைல லோடு சேக்காம, ஸ்ட்ரா வெச்ச வாட்டர் பாட்டில்.  கார்கோ பேண்ட்ல ஜெம்ஸ், ஆரஞ்சு, சீரக மிட்டாய்கள், பேரிச்சை, கடலை மிட்டாய், பிஸ்கெட் :)  எப்புடி,

பால் கொண்டு வந்த சாப்பாட்டால இந்த ஸ்னாக்ஸ் எல்லாம் அப்டியே ரிட்டர்ன் ஆய்டுச்சு.  முதல் ஓடைய தாண்டினதும் வெயில் தெரியல, மலை ஆரம்பிச்சுது, பாத்து, பாத்து பத்ரமா நடந்து ரெண்டாவது பனலுக்குப் போய் சேந்தோம்,  அதிக பட்சம் 10 அடி ஆழம் நடுவுல, இறங்கிப் போலாம்.  நல்லா குளிச்சு, மலை மேல ஏறி குதிச்சி ஆட்டம், கொண்டாட்டம்.  பழனி சார் வழக்கம் போல இங்கயே தங்கிட்டாரு.  பையன மட்டும் எங்கள நம்பி அனுப்பிச்சு வெச்சார்.  மூணாவது குளத்துக்கு அங்கிருந்து ஒரு அரை மணி நேரம் ஏறனும், பெண்களுக்கும், குண்டு பாய்ஸ்சுக்கும், நீச்சல் தெரியாதவங்களுக்கும் தேவையில்ல அங்க போறது,  எவன் சொல்றது, யார் கேக்கறது,  கொஞ்சம் கஷ்டம் சில இடங்கள்ல, குனிஞ்சு போகனும், பாறைய புடிச்சிட்டு, கால விளிம்புல வெச்சி ரெண்டு மூணு அடி போகனும் ஒரு எடத்துல..  இந்த இயற்கை நீர் நிலைகளுக்கு வரும்போது இன்னத்துக்கு ஷாம்பு, சோப்பு போட்டு குளிக்கறாங்கன்னு தெரியல,  எல்லாருக்கும் அதுதான் குடி நீரும் கூட,

போய் சேந்தாச்சு மூணாவது குளத்துக்கு,  குறைஞ்சது நாலாள் அடி ஆழம் இருக்கும், கொச கொசன்னு மீன்கள், பணிப்பெண்களாய்,  தெளிந்த , குளிர்ந்த நீர், குட்டி வாட்டர் ஃபால்ஸ், ட்யூப்ப இதுக்குன்னு சேப்பாக் ஸ்டேடியம் கிட்ட ஸ்போர்ட்ஸ் கடைல 400 ரூபாய்க்கு வாங்கியிருந்தேன் பொண்ணுக்குன்னு, 20 அடிக்கு தடியா ஒரு நைலான் கயிரும் தயார், மரக்கிளைல கட்டி, ட்யூப்ப ஊதி இன்னொரு முனைல கட்டி பொண்ண அந்த ஏரில இறக்கியாச்சு,    இறங்கிக் குளிக்க முடியாது, தண்ணியடிச்சிட்டு பாட்டில்கள எதுக்கு ஒடச்சு, ஒடச்சுப் போடறானுங்கன்னு தெரியல.  முட்டாப்பசங்க, ஊறிப்போன கால்ல எப்டி ஏறும்.  தீவட்டி பாய்ஸ்,  மலை மேல ஏறி, ஏறி குதிச்சு, நீச்சலடிச்சு, ப்ராணாயாமம் பண்ணிட்டே பத்மாசனம் போட்டு தண்ணில மிதந்து, நீச்சல் தெரியாத ஒருத்தனை உயிர் காத்து, வெயில்ல குளிர் காஞ்சு, ஃபால்ஸுல தலைய தோச்சு, குரங்குள தொரத்தி, நாங்க சாப்டு, பின்னர் அதுக்கும் குடுத்து, எங்கயும், கிழ விழாம, அடி பட்டுக்காம இறங்கி வந்தோம்  மாலை சூரிய அஸ்தமனம் அழகாய் ஏரில, மலைல, மரங்கள்ல,  நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டு போச்சண்ணே, அந்த மூணாவது குளத்துக்கிட்ட ஒரு குகை, குரங்குகள், காட்டுக் காய், பழங்கள், இப்படி யாராவது வரும் போது பிச்சையெடுத்து நாட்டு உணவு, தவ வாழ்க்கை, சூப்பரா இருக்கும்.  நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு இறங்கி வந்திட்டேன்.

பால்பாண்டி டீம முந்தி நாங்க வந்த வழிய விட்டு பெரிய பாளையம் ரூட்ல மாறி, வழில தேவையேயில்லாம கூகிள் மேப்புல வர்ற பொண்ணு சொல்றத தேட்டு ரெண்டு முட்டுச்சந்துக்குப் போனது தான் மிச்சம்.  பத்து மணிக்கு ஆபீஸ் கிட்ட அக்ஷயான்னு ஒரு வெஜிடேரியன் ஹோட்டல், டேஸ்ட், க்வாலிட்டி ஓகே, சர்வீஸ், ரேட் ஜாஸ்தி,  ஒவ்வொண்ணத்தையும் மூணு, மூணு தடவ கேட்க வேண்டியிருக்கு.  ஞானசேகர் ஆக்டிவால ஆபீஸ்லேந்து நைட் 12 மணிக்கு வீடு வந்து சேந்தோம்,  எல்லா புகழும் பால் பாண்டிக்கே :)

காட்டுல, நீர் நிலைகளில் குப்பை போடாதீங்க, சோப், ஷாம்பூ போட்டு குளிக்காதீங்க, எல்லா மூலிகைகளும் அந்த தண்ணிலயே இருக்கும், நமக்கு அங்க இருக்கும் போது அது தான் குடி நீர்.   சாராய பாட்டில தயவு செய்து உடைச்சுப் போடாதீங்க.

ஒவ்வொரு அடியும் பாத்து கண்ணு ஓகே சொன்னதும் காலை அழுத்தி வெச்சு நடங்க,  யாரையும் அவசரப்படுத்தாதீங்க, இஷ்டம் இல்லாதவங்கள, நீச்சல் தெரியாதவங்கள கட்டாயப்படுத்தி கூட்டிட்டுப் போகாதீங்க.  எதுக்கும் நீங்க பொறுப்பாக முடியாது.  வேர்களும், மரங்களும், பாறைகளும் தான் புடிச்சு ஏறுவதற்கும், கால் வைக்கறதுக்கும் துணை,  வேர்னு நினைச்சு தூங்கிட்டு இருக்கற பாம்பு, கறையான் அரிச்ச மரங்களை புடிச்சு ஏறாதீங்க :),  அட்டை பூச்சி கடிச்சு, கொஞ்ச நேரம் ரத்தம் உரிஞ்சனுத்க்கப்பறம் தான் நமக்கு எரியும், தெரியும், ஷூ, சாக்ஸ்குள்ளயும் சில அட்டைப்பூச்சிகளால போக முடியும்,  ஒரு குச்சியால அத எடுத்துப் போட்டுட்டு, கால கழுவிட்டு நடங்க, அதுவே சரியாய்டும் நாம வீட்டுக்கு வர்றதுக்குள்ள.

Apr 2, 2018

பங்குனி உத்திரம் காவடியாட்டம்




காவேரி ஒன்னு-ஒன்றை கிலோ மீட்டர் அகலம் இருக்கும் எங்க ஊர்ல.  நான் ஸ்கூல் படிச்சு முடிக்கற வரை வருஷத்துக்கு ஒரு 5-6 மாசம் முழுசா ஓடும்.  மிச்ச மாசம் ரெண்டு கரையை ஒட்டியும் தண்ணி ஓடும்.  எங்கப்பா எங்களை சலிக்காம தோள்கள்ல தூக்கி வெச்சிட்டு சித்திரைத் தேர், வைகுண்ட ஏகாதசியின் போதெல்லாம் காவேரி குறுக்க கூட்டிட்டு போவார்.  எதிர்க்கரை ஸ்ரீரங்கம்.  விழா களை கட்டியிருக்கும்.  ஆயிரங்கால் மண்டபத்துக்கு எதிர்க்க இருக்கற சிற்பங்கள், சுத்து சாமி சன்னிதிகள், தண்ணி பந்து, அம்மம்மா அப்பப்பா பலூன் (ஊதிட்டு விட்டா பலூன்ல சொருகியிருக்கற பீப்பில பான்னு சத்தம் வரும்).  ரெண்டு கரைலயும் ஓடும் தண்ணில குளியல், வெயில் காலப் பொசுக்கும், குளிச்ச தண்ணில துண்ட நனைச்சு கால்ல கட்டிட்டு எதிர்க்கரைக்கு ஓடி வருவோம்.  ஆடி மாசமா இருந்தா காத்துல மணல் உயிர் போறாப்பல அம்பு மாதிரி கால்ல பறந்து குத்தும்.  18-ஆம் பெருக்கு உத்சவத்துக்கு எங்க ஊர் பெருமாள் கோவில்லேந்தும் தெப்பத்தேர் காவேரில போகும்.

தண்ணீரைப் பிழைக்கக்கூடாது என்று ஒரு பழமொழி.  தண்ணி கம்மியா ஓடும் போதெல்லாம் அத எல்லாரும் சேந்து மூச்சா, ......... அலம்பிக்கறது, பவானி, அமராவதி, குடமுருட்டி ஆறுகளோட சாக்கடை, ஆலைக்கழிவுகள்.  திருச்சி சிந்தாமணி, டவுன் பகுதிகளோட சாக்கடைக் கலப்பு  எல்லாம் நடந்து கொண்டிருந்தது.  வருஷங்கள் ஆச்சு.   இப்ப வருஷத்துக்கு ஒன்னு, ரெண்டு மாசம் தான் அதிக பட்சமா காவேரி முழுக்க ஓடுது.  2-3 மாசம் ரெண்டு கரையையும் ஒட்டி ஓடுது.  மிச்ச மாசமெல்லாம் வற்றாமல் மணல் ஓடுது, தண்ணி இருந்தா தண்ணிய எடுப்போம், இல்லாட்டி மண்ண எடுப்போம்.  ஊருக்கெல்லாம் கொடுப்போம்.  எங்க ஊர்ல பெரிய, பெரிய கிணறெல்லாம் 4-5 போட்டு கி.மீ கணக்குல தண்ணிய உறிஞ்சி கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள்.  எங்க ஊருக்கே இப்ப ஆத்து நீரும் இல்ல, நிலத்தடி நீரும் இல்ல,  வருஷங்கள் போராடி காவேரி பைப் கனெக்ஷன் வந்தது தெருவுக்கு.  கூட்டுக்குடிநீர்க் கிணறுகளுக்கு தண்ணி ஓட்டம் இல்லைன்னு காவேரில ரெண்டு கரைலயும் ஓடின தண்ணிய ட்ராக்டர் வெச்சு வாய்க்கால் மாதிரி கிணறுகளுக்குக் கிட்ட கொண்டு வந்தாங்க..  இப்ப எந்த கரைலயும் தண்ணி இல்ல,  ஊற்றும் இல்ல, தடுப்பணை கட்டி தண்ணி தேக்கறாங்க, வந்தா !!

தமிழ்நாட்டுல எல்லா ஆற்றங்கரை ஊர்க்கதையும் இதேவாகத்தான் இருக்கும், அதனால் ஊர்ப்பேர் சிறப்பா சொல்லல :(  வினை விதைத்தவன் வினையும், தினை விதைத்தவன் தினையும் அறுப்பான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு பல பழமொழிகள் இயற்கையைப் போற்றுத் துதித்துப் பாதுகாக்காமல், சீரழித்து அழிந்து கொண்டிருக்கும் எங்கள் வரலாறுதான் இது.

28 மார்ச் 2018, புதன் கிழமை இரவு 11.20 க்கு வரவேண்டிய RPN ஏசி செமி ஸ்லீப்பர் பஸ், ஒரு மணி நேரம் தாமதமாக க்ரோம்பேட்டைக்கு வந்தது.  காலை திருச்சில இறங்கி, எங்க ஊர்க் காவிரில ஒரு குளியல் போட்டு,  வீட்டுல பரம்பரையா பூஜை பண்ணிட்டு வர்ற சாமிகளுக்கு அபிஷேகம் பண்ண தீர்த்தம் குடத்துல எடுத்திட்டு வந்து சூப்பர் பூஜை.  ஒரு சில வருஷங்கள் ஆச்சு நான் பூஜை பண்ணி.

நண்பர் கும்பகோணம் ஸ்ரீ சிவராம சிவாச்சாரியார் சமீபத்துல முக்திநாத், கைலாஷ், மானசரோவர் தீர்த்த யாத்ரை, க்ஷேத்ராடனம் பெற்றோர்களுடன் சென்று, ஒவ்வொரு ஸ்தலத்திலும் அந்த குளிரில் குளித்து ஆசாரக்குறைவில்லாமல் சிவபூஜை செய்து, எனக்கும் தீர்த்தம், ருத்ராக்ஷ மாலை கொண்டு வந்து கொடுத்தார்.  பாக்யம் செய்தவர், போகாமலேயே அந்தக் கதையெல்லாம் கேட்க, எழுத, ப்ரசாதம் கிடைக்க நானும் பாக்யம் செய்திருக்கிறேன்.  எங்க ஊர் தர்மசம்வர்த்தினியம்பா சமேத கம்பரசன்பேட்டை கைலாசநாதருக்கு அன்றைய ப்ரதோஷ அபிஷேகத்துக்கு இந்த கைலாஶ், மானசரோவர் தீர்த்தம் அமைந்தது.  கும்பாபிஷேகம் முடிந்து இன்னும் ஒரு வருஷம் ஆகவில்லை.  நானும் ருத்ரம், சமகம் க்ரமபாடம் சொன்னேன் அன்று பூஜையின் போது.  ப்ரதோஷ புறப்பாடும் உண்டு, ரிஷப வாகனத்தில் ஸ்வாமியும், அம்பாளும் எழுந்தருள நானும் இந்த முறை  ஒரு வாரைப் பிடித்தேன்.  அதிக அளவில்  2-3 மணி நேரங்களுக்கு பக்தர் கூட்டம், தேவார, திருவாசகப் பாடல்களோடு எண் திசைகளிலும் தீபாராதனைகளோடு சிறப்புப் புறப்பாடு,  பெரியார் மண்ணல்லவா.


30 மார்ச் 2018, வெள்ளிக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள், மாதமும் 12, நக்ஷத்ரமும் 12ஆவது ! ! பெருமாள் கோவில்களில் சேத்தி என்ற உற்சவம்.  ஸ்ரீரங்கம் தாயார் அவங்க எல்லை தாண்டி வரமாட்டார்.  பெருமாள் ரெங்கராஜா அவங்க கிட்ட போய், சேர்ந்திருந்து தரிசனம்.  சுப்ரமண்ய, சிவாலயங்களில் கல்யாண உற்சவம்.  எங்க பாட்டி பரம்பரையில் வந்த காவடிய பழனிக்குப் பாதயாத்ரையாகக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்களாம்.  எங்க தகுதியும்,  ஊர் இருக்கற நெலைமையும் தெரிஞ்சு முந்தின தலைமுறைகளிலேயே அது உள்ளூர் முருகன் சன்னதியில் முடியத் தொடங்கியிருந்தது.  நாம சினிமால பாக்கற காவடி இல்லை இது.  ரெண்டு பக்கத்துலையும் மரத்தால் பிள்ளையார், தண்டபாணி, இடும்பன், வள்ளி தேவசேனா சமேத ஷண்முகர் சிலைகள் செதுக்கப்பட்டிருக்கும்.   இந்த தடவை நீயே எடு, நான் ஆத்து பூஜை பண்றேன்னு தம்பி பரத் அனுமதி.  காவேரியில் காவடிக்குக் காலை 6 மணியிலிருந்து ஒன்பது மணி வரை எல்லா அபிஷேகங்களும் குடும்பத்தோடு செய்து,  காவேரி நீர் கலச அபிஷேகத்தில் முடித்து, மணிகள் ஒலிக்கும் அந்தக் காவடியில் விக்ரஹங்களுக்கு வீட்டில் தயாரித்த விபூதி, சந்தன, குங்குமம் சார்த்தி, மயில்தோகைகள், பால் சொம்புகள், வேல் கட்டி, எடுத்து செல்பவருக்கு வெயில் கொளுத்தாமல் இருக்க மேனா என்ற ஒரு பட்டுத்துணியையும் கட்டி, சஷ்டி கவசம், திருப்புகழ், அரோஹரா கோஷங்கள் முழங்க, தீர்த்தக் குடங்களோடு கிளம்பும் எங்கள் காவடி.


வடக்குத்தெரு பிள்ளையார்க் கோவிலில் அண்ணாவுக்குப் பூஜை செய்து, சூரத்தேங்காய் உடைத்து, அக்ரஹாரத்தின் மேற்குத் தொடக்கத்தில் மாமனைக் கும்பிட்டு அங்கொரு தேங்காய் தெறிக்க, வழியில் விபூதி ப்ரசாதம் கொடுத்துக் கொண்டு, ஆங்காங்கே கொதிக்கும் கால்களுக்கு இதமாய் பக்தர்கள் குடம் குடமாய் நீரால் நனைக்க, வேல் வேல் வெற்றி வேல், வீர வேல், ஞான வேல், சக்தி வேல் என்று கோஷித்துக் கொண்டு சிவன் கோவில் முருகன் சன்னிதியில் உள்ளூர் சிவாச்சாரியார் பேபி மாமா குடும்பத்தார் பூஜித்து, இறக்கி வைப்பர்.  இந்த முறை பேபி மாமா, சதீஷ் அண்ணா, செந்தில், உதவிக்கு விக்னேஷ் என்று அவங்க டீம்.  முதல் நாளே கோவிலை சுத்தம் செய்து, மாக்கோலமிட்டு, வாழைமரம், தோரணங்கள் கட்டி, பூஜை சாமான்கள் அவர்களிடம் சேர்த்து விடுவோம்.  நாங்க காவேரிலேந்து வருவதற்குள் அவர்கள் தீர்த்தக் குடங்களில் முருகன், வள்ளி, தேவானையை வருவித்து இருப்பார்கள்.  மற்ற சன்னிதிகள் நித்யப்படி அபிஷேக அலங்காரங்களும் நடந்திருக்கும்.   10 மணிக்குக் கோவிலில் மஹான்யாஸ, ருத்ர, சமக, சூக்தங்கள் என்று வேத மந்த்ரங்கள், திருப்புகழ், பக்திப் பாடல்கள், கோஷங்களோடு அபிஷேகங்கள் தொடங்கி, வள்ளி, தேவானையோடு அலங்காரம், அஷ்டோத்திர, ஸஹஸ்ர நாம அர்ச்சனைகள், ப்ரசாத வினியோகம் முடிந்து வீட்டுக்குக் காவடியோடு திரும்பும் போது மணி மதியம் இரண்டாவது ஆகியிருக்கும்.

இந்த நாலு- ஆறு மணி நேரத்தில் வீட்டு பூஜையும் முடிந்திருக்கும்,  வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்து, சூரத்தேங்காய் உடைத்து, காவடியை ஸ்வாமி ரூமில் அதன் பீடத்தில் இறக்கி, அர்ச்சித்து, நமஸ்கரித்து, பின் பெற்றோர், பெரியோரிடம் ஆசி பெற்று, சுற்றமும், நட்பும் சூழ இல்லத்தரசிகளின் கைவண்ணத்தில் முன்னாள் திட்டமிட்டு, இன்னாள் காலையிலிருந்து தயாரான சூடான, சுவையான, வகையான அன்லிமிட்டெட் சுப்ரமண்ய ஸ்வாமி கல்யான சமையல் சாதம் பரிமாறி, உள்ளூர் சிவ-விஷ்ணு கோவில் பட்டர்கள், நண்பர்கள், வெளி மனிதர்கள் விடைபெற்றதும், வீட்டு மக்கள், குழந்தைகள், பெரியோரோடு பந்தியில் அமர்ந்து பரிமாறும் பெண்டுகளை மிரட்ட, அவர்கள் மிரள, கடைசி பந்தியில் நாம சாப்ட ஒக்காந்து அதிகமா மிஞ்சினத அள்ளிப்போட்டு, குறைவா இருக்கறத காலியாக்கி, தீர்ந்து போனவைகளுக்கு சத்தம் போட்டு, சாப்பிடற வகையறாக்களில் நொள்ள, நொட்ட சொல்லினு, கால நீட்டி சாப்டும் சொகம் இருக்கே, அடடடடடடா.  சாப்ட தொப்ப மூட்டைய தூக்க முடியாம தூக்கி, கை, கால், வாய் சுத்தம் செய்து கட்டைய நீட்ட, அவங்க பாத்ரங்கள தேய்க்க ஒழிச்சி போட்டு, உள்ள வரும்போது 4 மணியாச்சே டீ, காபி ஏதாவது குடுங்கோம்மான்னு நாங்க, கேட்க, பாக்க, அவங்க கிட்டேந்து ஒரு அன்பும், பண்பும் அளவில்லாம பொங்க கொதிக்க, கொதிக்க அந்த பாழாப் போனா காபிய கொண்டாந்து குடுப்பாங்க பாருங்க.  சான்ஸே இல்ல.

முதல் நாள் வந்தா ப்ளான், ப்ரிபரேஷன் வொர்க்குன்னு எதாவது இருக்கும்.  மறுநாள் இருந்தா க்ளீனிங் வொர்க், பத்தாக்குறை, குறை தீர்ப்பு பட்ஜெட் மீட்டிங் இருக்கும்னு மேக்சிமம் யாரும் இருக்க ட்ரை பண்றதில்ல.  இருக்கவே இருக்கு அவர் ஐடி கம்பெனி, டெய்லி ராத்திரி லேட்டா தான் வரார்.  ஒழுங்கா சாப்பிடறது, தூங்கறது கூட இல்ல, லீவே குடுக்க மாட்டேங்கறான்,  இவனுக்கு ஸ்கூல் ப்ரமோஷன் மீட்டிங், அவளுக்கு புக்ஸ் வாங்க வரச்சொல்லி இருக்கான்னு எவ்வளவோ இருக்கு காரணங்கள் நமக்கு.  இந்த பங்குனி உத்தரம் வேற ஒவ்வொரு வருஷமும் அன்ப்ளான்டா வந்துடறது.   ஊருக்கு இளைத்தவன் புள்ளையார் கோவில் ஆண்டி,   எங்களுக்கு இளைச்சவன் உள்ளூர்ல இருக்கறவங்க.  இப்ப கொஞ்சம் பரவாயில்ல, வீட்டு வேலைக்கு ஆள், சாமான் வாங்கி காவேரி, வீடு, கோவில் பூஜைக்குப் பிரிச்சு வெச்சா போறும்,   பூ, சாப்பாடெல்லாம் வீட்டுக்கே வந்துடும்.

இதுக்கு முந்தின இல்ல பிந்தின நாள்ல எந்த நாள் வசதியோ, அந்த நாள்ல மொத்தக் குடும்பமும் குல தெய்வக் கோவிலுக்குப் போய், பூஜை, வழிபாடுன்னு ஏற்பாடு.  அதுக்கு ஒரு வண்டி, பாட்டு, கும்மாளம்,  க்ராமக்கோவில்ல போயி டண்டக்கு டண்டான்னு இறங்கினதும் பூசாரி பூஜைகள் செய்ய, இந்த, மூத்த தலைமுறை பெண்கள் பூஜைக்கு ஏற்பாடுகள் செய்ய, நாங்க ஐயர் கடைல ஆர்டர் பண்ணி எடுத்துனு போன டிஃபன், காபிய காலி பண்ணி உதவி பண்ணன்னு எல்லாமும் ரொம்ப பிசி.  காலை ஏழு மணிக்குக் கிளம்பி ரெண்டு கோவில்களில் பூஜை, தரிசனம் முடிந்து,  இப்ப இருக்கற ஊர் எல்லைக்கோவில்லயும் தரிசனம் முடிச்சு வீட்டுக்கு ஒரு 12-1 மணிக்கு வந்தா, பார்றா, வீட்லயும் லஞ்ச் வந்திருக்கு.  திருப்பி சலிக்க, சலிக்க சாப்டு, தூங்கு, காபி குடி, வூட்டு வம்பு, ஊர் வம்பு, இந்திய வம்பு, இன்டர்னேஷனல் வம்பு, ப்ரச்னைகளுக்குத் தீர்வுகள், தீர்ப்புகள்.  இங்க வந்த ஒன்னு ரெண்டு நாள்லயும் தனிக்குடித்தன டீம்கள், ஹைஜீனிக் சோப்புகள், அலங்கார சாமான்கள், நாலு துணிய, சார்ஜர மறந்துட்டு, ரெண்டு நாள் கடின உழைப்புக்கு ஈடா, மறுநாள் ஆஃபீஸ்க்கு தோதா தத்கல்ல புக் பண்ணின, இல்ல ஸ்லீப்பர் ஏசி பஸ்ல ஏறி, விடிய விடிய ஊர் வந்திருக்குமோ நிம்மதியா விழித்திருந்து,  வேலை பாக்கற ஊருக்கு வந்து, மிஸ் பண்ணிட்டு வந்த பொருள்களுக்கு ஊருக்கு ஃபோன் பண்ணி, அப்படியே பத்ரமா வந்து சேந்துட்டோம்னும் சொல்லி, தூங்கி, எழுந்து, குளிச்சு ஆஃபீஸ்க்கு வந்தாச்சு,  ஆசம், ஆசம், சாப்பாட்டு டப்பாவ வீட்லயோ, எங்கயோ மறந்துட்டு வந்தாச்சு.

Mar 26, 2018

திருவிசைநல்லூர் ஐயாவாள்

ரொம்ப டயர்டு, கீழ விழுந்து கால் கட்டு பிரிச்சு, இன்னும் ஆனா கால் சரியாகல. வீட்டிலயும் தொடர் வேலைப் பளுவால் வொய்ஃபும் செம டயர்டு.  எல்லா சனிக்கிழமையும் ஸ்கூல் வெச்சு பொண்ணும் டயர்டு.  வீட்டுல எல்லாரையும் அலர்ட்டாவே வெச்சிருந்து 3 வயசுப் பையனும் டயர்டு.  ரெண்டு நாள்ல கும்பகோணம் கோவிலெல்லாம் சுத்தி முடிக்க முடியாது.  ஆனா ஏற்கனவே 2-3 தடவ நெறையா கவர் பண்ணியாச்சு கார் டூர்கள்ல.  கெளம்பியாச்சு YBM ஸ்லீப்பர் ஏசி பஸ்ல.

16மார்ச், 2018, வெள்ளிக்கிழமை.  பொதுவா எல்லா ப்ரைவேட் பஸ்ஸுமே எல்லா ஸ்டாப்லயும் லேட்டாதான் வரும்.  ஆனா பாருங்க, இந்த பஸ்ஸு, போகும் போதும் சரி, வரும் போதும் சரி.  கரிக்டா டயத்துக்கு வந்துடுச்சி.  குட் பாய்ஸ்.  சும்மாவே வெள்ளிக்கிழமை சென்னைலேந்து வெளில போறதுக்கும், ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வரவும் கண்டபடி ரேட் போடுவாங்க ப்ரைவேட் பஸ்ல.  இப்ப கவர்மெண்ட் பஸ்ஸும் ரேட்  ஏத்திட்டாங்கள்ல,  வீக் எண்டு மட்டும் ஓட்டிட்டிருந்த ட்ராவல்ஸ் எல்லாம் இப்ப எல்லா நாளும் ஓட்றாங்க.   ஒரு குட்டி வாட்டர் பாட்டில், அடையார் ஆனந்த பவன் 5ரூபா ஸ்னாக்ஸ் பாக்கெட், பிஸ்கெட் குடுத்தாங்க. 

திருக்கருகாவூர், திருவலஞ்சுழி, கும்பேஸ்வரர், திருவிசைநல்லூர்,  கோவிந்தபுரம் மொத்தமே இவ்ளோதான் சனி, ஞாயிறு ரெண்டு நாள்ல போனோம். டவுன் பஸ்ல.  மிச்ச நேரம்லாம் ரெஸ்ட்.  திருப்பி ஞாயிற்றுக்கிழமை நைட் பஸ் ஏறி, திங்கள் கிழமை ஆபீஸ்க்கு வந்தாச்சு.

திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை சமேத மாதவி வனேஶ்வரர் (கருக்காத்தவள் உடனுறை முல்லை வன நாதர்).  ஒரு ரிஷி பத்னியின் கர்ப்பத்தை சாபத்திலிருந்து காத்த நாயகியாதலால் இன்றும் கர்ப்பக்கோளாறுகளிலிருந்து காக்க வேண்டி கண் கண்ட தெய்வமாய் இங்கு வந்து பலர் வேண்டி, குழந்தைப் பேறு பெறுகின்றனர்.  பாடல் பெற்ற ஸ்தலம்.  சிவபெருமானாரின் பஞ்ச வன தலங்களில் ஒன்று.

1.முல்லை வனம் - திருக்கருகாவூர்
2.பாதிரி வனம் -*அவளிவள் நல்லூர் 3.வன்னிவனம் - அரதைபெரும்பாழி
4.பூளை வனம் - திருஇரும்பூளை
5.வில்வ வனம் - திருக்கொள்ளம்புதூர்
*அவளிவணல்லூர்

திருவலஞ்சுழி வெள்ளைப்பிள்ளையார் குட்டியூண்டா இருக்கார். அவர் இருக்கற சன்னிதியோட ஜன்னல்கள் சிற்ப வேலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.  பாடல் பெற்ற ஸ்தலம்.  ப்ருஹன்னாயகி ஸமேத கபர்தீஶ்வரர்.  12-12.30 க்குக் கோவிலெல்லாம் பூட்டிடறாங்க.

சாயந்தரம் கும்பேஸ்வரர் தர்ஶனம் முடிஞ்சு கடை வீதி சுத்தினோம், விண்டோ ஷாப்பிங்.  மரப்பாச்சி, மர பொம்மைகள், இரும்பு பாத்திரங்கள், நாழி, தோசைக்கல்லு, பல்லாங்குழின்னு எல்லாம் இருந்துது.  ஒரு சுக்கும் வாங்கல நாங்க.

ஞாயிற்றுக்கிழமை காலம்பற திருவிசைநல்லூர் ஐயாவாள் வீட்டுக்குப் போய் தரிசனம் செய்தோம்.   அவர் பெயர் ஸ்ரீதர வெங்கடேச தீக்ஷிதர்.  பகவந்நாம போதேந்த்ராள், நெரூர் சதாசிவ ப்ரும்மேந்த்ராள் எல்லாம் சம காலத்தவர்கள் போல.  இந்த ஐயாவாள் சதா ஈஶ்வர த்யானத்துலேயே இருக்கறவர்.  யாரையும், எதிலயும் பரமேஶ்வரனைப் பாக்கறவர்.  இவர் மூதாதையர்களுக்காக ச்ராத்தம் (திதி) பண்ற நாள். ப்ராஹ்மணர்களில் பித்ருக்களை த்யானம் செய்து அவர்கள் உணவருந்தி சென்ற பின்பே நாம் அன்று சாப்பிட வேண்டும்.  இவர் அன்னைக்கு அந்த ப்ராஹ்மணர்களுக்கு ஆசாரமாக சமைத்த உணவை வாசலில் வந்த தாழ்ந்த ஜாதிக்காரனுக்கு பரிமாறி, அவனை த்ருப்தி செய்து, சந்தோஷப்படுகிறார்.  வந்த ப்ராஹ்மணர்களும், ஊர்க்காரர்களும் உடனே கோபித்துக் கொண்டு தீட்டாகி விட்ட அவர் வீட்டில் உணவருந்த மறுத்து விடுகின்றனர்.  அவர் எவ்வளவு வேண்டியும் பயனில்லை.   கடைசியில் கங்கையில் நீராடி வந்தாலே இந்த பாபம் கழியும், அதுவே ப்ராயஶ்சித்தம்.  அதன் பின்பே நாங்கள் உங்கள் இல்லத்திற்கு வருவோம் என்கின்றனர்.  இவர் இருப்பது கும்பகோணம் திருவிசைநல்லூர் காவிரிக்கரையில்,  பித்ரு கார்யங்களுக்கு அந்த நாள் (திதி) மிகவும் முக்யம்.  ஒரு தடவை பித்ருக்களுக்கு செய்ய வேண்டிய திதியைத் தவற விட்டால் அவ்வளவு பாபம் என்கின்றன ஶாஸ்த்திரங்கள்.  ஏற்கனவே லேட்டு,  காசிக்குப் போய் கங்கைல குளிச்சிட்டுத் திரும்பி வந்து காலம் தவறாம ஶ்ராத்தம் பண்ண இனி வழியேயில்ல.  பார்த்தார்.  ஸ்வாமி மேல பாரத்த போட்டுட்டு, கங்கா தேவிய ப்ரார்த்தனை செய்து ஒரு அஷ்டகம் (எட்டு ஶ்லோகங்கள்),  கிணத்து மேல பலன்.  ஆமா,  அவர் வீட்டு கொல்லைப்பக்கத்துல இருந்த கிணத்துலேந்து கங்கை ப்ரவாகமா பொங்கி, வீதியெல்லாம் ஓட ஆரம்பிச்சுட்டா.   எல்லாருக்கும் இவரோட பக்தியோட ஶ்ரத்தையும், பகவானுக்கும் இவருக்கும் இடைப்பட்ட தொலைவும் புரிஞ்சுது.  இன்னிக்கும் அந்த கிணத்துல  நிறையா பேர் போய் அந்த தீர்த்தத்த தெளிச்சிண்டு வரா.   அமைதியான க்ராமம், வீடு.

பாடல் பெற்ற ஸ்தலம்.  சௌந்தர நாயகி ஸமேத யோக நந்தீஶ்வரர்.   சூர்யனோட நிழலை வைத்து இந்தக் கோவில் ப்ராகார சுவற்றில் ஒரு கடிகாரம் அமைத்திருக்கிறார்கள்.  காலை ஆறு முதல் மாலை ஆறு வரை காண்பிக்க.

கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்த்ராள் அதிஷ்டானம்:  இந்த பகவந்நாம போதேந்த்ராள்  காஞ்சிபுரம் ஸ்ரீ சங்கர மடத்தின் ஆசார்ய பரம்பரையில் வந்தவா.  தினமும் லக்ஷக்கணக்கா ராம நாம ஜபம் பண்ணினவா.  இவாளோட ப்ருந்தாவனம் யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி காலத்தால் மறைந்திருந்தது இந்த காவிரிக்கரையில்.  பஜனை சம்ப்ரதாயத்துல மும்மூர்த்திகள்ல ஒருத்தரா போற்றப்படும் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் இந்த இடத்தைக் கால் பட்டுடாம கண்டு பிடிக்க, கால்களைக் கட்டிக்கொண்டு ராம, ராமான்னு சொல்லிண்டு அங்க ப்ரதக்ஷிணம் பண்ணினா. ஒரு எடத்துல திரும்பி ராம, ராமன்னு அவருக்குப் பதில் கிடைச்சுது.  அந்த இடம்தான் நாம இன்னிக்குத் தரிசனம் செய்த அதிஷ்டானம்.

Mar 9, 2018

பெண்கள் பாதுகாப்பு ?

சென்னை - மீண்டும் ஒரு கல்லூரிப் பெண் கழுத்தறுத்துக் கொலை

பெண்கள் குழந்தையாயிருக்கும் போது தகப்பன் பாதுகாப்பிலும், யுவதி கணவனின் பாதுகாப்பிலும், முதுமையில் மகனின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டியவர்கள், அவர்கள் சுதந்திரமாக விட்டு விடாதீர்கள் - மனு ஸ்ம்ருதி

இந்த வாக்கியம் இந்த  திருநாட்டில்  பக்கிகளால் நன்கு, சுயநலத்துடன் பரப்பி விடப்பட்டிருக்கிறது.  பெண்களும் வெளியே வந்து யூனியனாக சுதந்திரம், சுதந்திரம் என்று ஆரம்பித்து விட்டார்கள்.

செல்வந்தனுக்கு பத்து ரூபாய் பிக்பாக்கெட் திருடனிடம் பறி கொடுத்தால் கவலையில்லை.  உங்கள் விஷயமும் அப்படித்தான் என்றால், குஷ்புவின் கருத்துப்படி வாழ்பவர்கள் என்றால் சுதந்திரமாக இருக்கலாம், நாய், பூனைகளைக் கூட பாதுகாப்பாக பார்த்து, பார்த்து வளர்க்கிறார்கள்.  பெண் பிள்ளைப் பெற்று, இந்த கதி நேர்ந்தால், அல்லது இது போன்ற செய்திகளைக் கேட்கும் தாய்மையிலிருந்தால் இதன் விபரீதம் புரியும்.    நமக்கு நன்மை வேண்டுபவர்கள் சொல்வது சில சமயம் வருத்தமாகவும், இன்னும் வீம்பு கொள்ளச்செய்வதும் இயல்பே.   

திஹார் ஜயில்ல இருக்கறவன் ஸ்வீட் பாக்ஸ் பத்ரமா இருக்கனும்னா வீட்ல வெச்சிக்கோங்க, தெருவுல கொண்டு வந்து வெச்சா நாயும் நக்கி விட்டுப் போகும்னு திமிரா பேசற காலத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

இந்த சமூகம் இலக்கிய, காவியக் காதல், ஆன்மீக பாவ, புண்ணிய பயம், ஒழுக்கப் பாடங்களிலிருந்து வெளியேறி தலைமுறைகள் ஆகி விட்டன.     வீட்ல ஒருத்தர் பம்பரமா இருக்கனும், இன்னொருத்தர் அத சுத்தி விடும் கயிறா இருக்கனும், குடும்பம் உருப்படும்.

தற்போதைய செய்தியின் படி, காவல் துறையிடம் ஏற்கனவே கொடுத்த புகாரில் எச்சரித்து அனுப்பப்பட்டவன் இவன், தேடி வந்து பழி தீர்த்திருக்கிறான்.   நீ கராத்தே தெரிஞ்சிருந்து, துப்பாக்கி, கத்தி, , மிளகாய்ப்பொடியெல்லாம் வெச்சினு போக இதென்ன சண்டைக்குப் போறோமா, நம்ம தெருவுல நடக்கறோமான்னே தெரியல.  குழந்தை, கிழவியெல்லாம் கற்பழிக்கப்படுகிறார்கள்.  கடுமையான தண்டனைகள் கண்ணுக்கெட்டின தூரம் வரை இல்லை.  மிஞ்சிப் போனா ஜாதித் தலைவர்கள், பதவி, அரசியல், பணக்காரப் பின்னனி, மனித உரிமைக் கமிஷன்,  ஊர் பார்க்க வெளிச்சத்துல நடந்த ஒரு அநியாயத்துக்கு வருஷக் கணக்கில் கோர்ட் அலைச்சல்.  ஆறுதலும், 5-10 லட்சம் காசும் கிடைக்கலாம் லக்கிருந்தா.

படிச்சு, ஓரளவு சம்பளம், ஆனால் கெட்ட பழக்கங்கள் ஏதுமில்லாதவன், குடும்பத்திற்குத் தெரிந்தவன், சொந்தம் இதையெல்லாம் தள்ளி விட்டு வீடு இருக்கா, டிபெண்டென்ஸ் யாருமில்லையா, பேரெண்ட்ஸ் வேலைக்குப் போறாங்களா, விசா இருக்கா, எனக்குத் தெரிஞ்சு குழந்தையைத் தவிர மற்ற எல்லாம் இருக்கான்னு பார்த்து பெண் கொடுக்க ஆரம்பித்து விட்டோம்.   லோன்ல டிகிரி படிச்சு, செட்லாறேன், செட்டில் ஆறேன் சொல்லி இப்படி ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்கறதே 30-40 வயசுல தான் இப்பல்லாம்.  கொஞ்சம் பேருக்கு டப்பா குழந்தை,  அதிகம் பேருக்கு நண்டு மாதிரி அம்மா தொப்பையைக் கிழிச்சு குழந்தை, மீதி பேருக்கு நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை.  கண்ணுக்கெட்டாத சந்த்ரன், இந்த்ரன் கிட்ட போறதுக்கெல்லாம் ராக்கெட் வந்தாச்சு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் குழந்தை வெளியே வர வழியில்லை.

பல தாரத் தலைவர், லிவ்விங் டுகெதெர், ஒரு மேல் ஜாதியாம், ஒரு கீழ் ஜாதியாம் கலப்புத் திருமணம் - இதெல்லாம் தான் இப்ப ட்ரெண்டு, ரோல் மாடல்.

அளவு தெரியாம நம்மூர்ல பாத்துப் பழக்கப்பட்ட ஆடைகள் அணிந்த காலம் போய், சைஸ் தெரியறா மாதிரி ட்ரெஸ், செத்த வீடு மாதிரி தலை விரி கோலம், கைலேந்து முட்டிக்கை வரை க்ளவுஸ் கறுத்துடக்கூடாது, மேனி பாதுகாப்புன்னு,  ஆனா கையில்லாத சட்டை, வேலைக்கு, படிப்புக்குன்னு வெளியூர்ல ஹாஸ்டல் வாசம், ஒரு கட்டுப்பாடும் இல்லாத சினிமாக்கள், செல்ஃபோன் வீடியோக்கள், லேட் நைட் ஷிஃப்ட்டுகள், பேலன்ஸ் பண்ணி ஓட்ட முடியாத வண்டில ஊட்டச்சத்து மிக்க உடல் வாகு, , ஆர்வத்தைத் தூண்டும் புதுப் பழக்கங்கள்.

பெண்கள் எங்கு கொண்டாடப்படுகிறாளோ அங்கு தேவதைகள் சந்தோஷிக்கிறார்கள் - மனு ஸ்ம்ருதி, 
எப்போது பெண் நகைகள் அணிந்து இரவில் தனியாக செல்கிறாளோ அதுவே உண்மையான சுதந்திரம் - காந்தி.  ஆனா இதெல்லாம் நடக்கறதில்ல இங்க.

சேத்துல இருந்து பன்றிக் கூட்டம் வந்தா, யானையும் ஒதுங்கித் தான் போகுது,  இதையெல்லாம் தாண்டி நீ உயரத்துல இருந்தா தான் வீட்டுக்கும், நாட்டுக்கும் சாதனை.  தீதும் நன்றும் பிறர் தர வாரா, 

Feb 28, 2018

ஜகத்குருவுடன் சில காலம்

ஜகத்குருவுடன் சில காலம்

- அவருக்குப் பணிவிடை செய்வதற்காக சிலர்.
- அவருடன் இருப்பதையே பாக்யமாகக் கருதி இருந்தவர் சிலர்.
- அவரிட்ட கட்டளைகளை பரதனைப் போல நடத்திக் கொண்டிருப்பவர் பலர்.
- பெரும் ப்ரச்னைகளாக அனுபவஸ்தர்களும், பதவியிலிருப்போரும் நினைத்துக் கொண்டிருப்பவைகளுக்கு, நிமிஷங்களல்ல, கேட்ட மாத்ரத்திலேயே நொடிகளில் அனாயாசமாக அவர் கூறும் தீர்வுகளை ரசித்து எப்போதும் ப்ரமித்துக் கொண்டிருப்பவர் சிலர்.

- குழந்தைகளோடு குழந்தையாகவும்
- நிர்வாகஸ்தர்களோடு தலைவராகவும்
- மூடர்களுக்குக் கருணாமூர்த்தியாகவும்
- பல்துறை வித்தகர்களுக்கு ஆச்சர்ய ரூபமாகவும்
- வேதாந்திகளுக்கும், அவர்கள் கூறும் சிக்கலான வேதாந்த தத்வங்களைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு எளிய உதாரணங்களோடு அவைகளை சுருக்கமாக விளக்கி விடும் ஜகத்குருவாகவும்
- சர்வ மத சித்தாந்திகளுக்கும் உதார புருஷராகவும்,
- சமூக சேவகர்களுக்கெல்லாம் கலங்கரை விளக்காகவும்,
- கர்ம சன்யாசிகளுக்கெல்லாம் முன்னோடியாகவும்
- வேத பாடசாலைகள், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் மற்றும் நலிந்தோர், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம், மறுவாழ்வு, மருத்துவமனைகள் என எண்ணிலடங்கா திசைகளில் சேவைகள் செய்பவர்களுக்குக் காரண கர்த்தாவாகவும்,
- பல பாஷைகளில் நிபுணராகவும்,
- எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய  மடாதிபதியாகவும்,
- வேண்டி அழுது தொழுவோருக்கு தன்வந்த்ரியாகவும்,
- சமூக சீர்திருத்தவாதிகளுக்கு உறுதுணையாகவும்  இருந்தவர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

பாரம்பரிய மடத்தின் வழித்தோன்றலாக முழு பாரதத்தையும் தன் குருவோடு காலடியாக சென்று அலங்கரித்தது, ஆதி சங்கரர் நினைவுக் கூடங்கள், வேத, சாஸ்த்ர, சம்ஸ்க்ருத, தமிழ் இலக்கிய பரிபாலனம்,  கடுங்குளிர், மழை, வெயில் காலங்களைப் பொருட்படுத்தாத ஓய்வறியாத உழைப்பு.

இதெயெல்லாம் இவரோட பதவிக்கும், சன்யாஸ ஆஸ்ரம தர்மத்துக்கும் செஞ்சிருக்க வேண்டியதே இல்ல.  கேக்கறதுக்கும் யாருமில்ல.  பாரதத்துல க்ருஷ்ணன், "நான் செய்ற எந்த நித்ய கர்மாவாலயும்  எனக்கு ஒன்னும் ஆகப்போறதில்ல.  ஆனா க்ருஷ்ணனே கடை பிடிக்கலையேன்னு பேச்சு வந்துடக்கூடாது" ன்னு சிரிப்பானாம்.  இவர் அவன் தான்னு சொல்லுவேன்.  மஹா பெரியவாங்க்ற ஞான ஸூர்யனோட எல்லா கனவுகளையும் எல்லைகளையும், தாக்குதல்களையும் அசகாயமாக எளிதில் தாண்டி, முடிச்சு வெச்ச வைராக்யம் கொண்ட பெரும் கர்ம யோகி.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஒரு குண வரிசையைக் கூறி இப்படி யாராவது இருந்திருக்கிறார்களா என்று வால்மீகி முனிவர் கேட்டதற்கு, "இவை யாவும் ஒரே மனிதனிடத்தில் காண்பது மிகவும் அரிது.  ஆனாலும் அப்படி ஒருவன் இப்போதே அயோத்தியில் தசரதச் சக்ரவர்த்தித் திருமகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்" என்று நாரதர் பதில் கூறுவார்.

ஸ்ரீமத் வ்யாஸ பாரதத்திலும் "நல்லவைகளைக் காக்கவும், தீயவைகளை அழிக்கவும் நான் அவ்வப்போது அவதரிக்கிறேன்" என்று க்ருஷ்ணன் வாக்குறுதி கொடுத்திருக்கிறான்.

என்னைப் பொறுத்தவரை அப்படி ஒரு அவதாரம் தான் இந்த இருள் நீக்கியும்.

என் பணிப்பயணம் இவர் காலடியிலிருந்தே தொடங்கியது.
காலம்பற எழுந்திருக்கறது, மடத்துக்குள்ளேயே வாக்கிங் போறது, வாக்கிங்கோட கடைசி ரவுண்டுல தானே எல்லா லைட் ஸ்விட்ச்களையும் அணைக்கறது,  மஹா பெரியவா ப்ருந்தாவனத்துக்குப் பூஜை, சந்த்ரமௌளீஶ்வரர் பூஜை, பாஷ்ய பாடம் ன்னு எல்லாத்துலயும் பெரியவாளோட பன்ச்சுவாலிட்டி,  தண்டத்தைக் கைல வெச்சிண்டு பெரியவா நடக்கற ஸ்பீடு (சான்ஸே இல்ல, கூட ஓடித்தான் போகனும் எல்லாரும்) , காலை 4 மணிலேந்து ராத்ரி ஒரு பத்து, பதினோறு மணிவரை பெரியவா டைம் டேபிள் மனப்பாடம் எனக்கு அப்போதெல்லாம்.

எங்க தாத்தா அமரபாரதி நடராஜ ஶர்மா ஸ்ரீமடத்துல பெயர்.  மஹாபெரியவா சொன்னான்னு எங்க பாட்டியோட 100 பௌணுக்கு மேல சீரா இருந்த நகைகள் எல்லாத்தையும் வித்து ஸம்ஸ்க்ருதத்துக்குன்னு யுனிவர்சிட்டி திருச்சி சிந்தாமணில ஆரம்பிச்சு நடத்தி, பின்னாடி அதே பெரியவா சொன்னான்னு ஒரு வார்த்தை, ப்ரச்னை பண்ணாம வெளில வந்த மஹான்.  அவர் பையன்  RSS மனைவியோட பி.டபிள்யூ.டி இஞ்ஜினியர் வேலைய விட்டுட்டு முழு நேர ஸ்வயம்சேவக் - பெரியப்பா, பலதரப்பட்ட வேலைகளைப் பாத்துட்டு 14ஆவது வேலையா போலீஸ்ல கீழ் நிலைல சேந்து, முதலமைச்சர் விருது வாங்கிய இன்ஸ்பெக்டர் வேலைய விட்டுட்டு நம்ம க்ராமத்துக்கு, குழந்தைகளுக்கு நல்லதை விதைத்து, நல்ல எதிர்கால தலைவர்களாக்கனும்னு ஸ்கூல் நடத்தற எங்கப்பா, லிப்டன் டீ கம்பெனி வேலைய விட்டுட்டு கதாகாலக்ஷேபம்,  பக்திக்கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கும் சித்தப்பான்னு குடும்பத்தோட அடையாளம் தான் எனக்கு.  தனியா ஒரு சுக்கும், தகுதியும், அடையாளமும் கிடையாது.

யுனிவர்சிட்டில டீச்சர் வேலை, ரெண்டு, மூணு ஹாஸ்டல் பசங்களையும் இவன் பாத்துப்பான்னு வார்டன் பொறுப்பு  இதெல்லாம் பெரியவா என்னையும் மதிச்சு, நம்பிக் கொடுத்த வாய்ப்புகள்.
நான் தினமும் அந்த க்ராமத்துலேந்து மடத்துக்கு ராத்திரி வேதபாடத்துக்கு சைக்கிள்ல வந்துட்டுப் போறேன்னு, என்னையும், என்னோட குரு கருப்பத்தூர் ஸ்ரீ சந்த்ரசேகர கனபாடிகளையும் அழைத்து இன்னிக்கு ராத்ரி, நாளைக்கு காலம்பற 4 மணிக்குன்னு இவனுக்குப் பாடம் நடத்துங்கோ, என் கிட்டயே ஒரு ரூம் இவனுக்குக் குடுத்துடறேன், தினமும் வந்துட்டுப் போக வேண்டாம்னு அனுக்ரஹித்த தாயுள்ளம், ஐடியா ரத்னம்.

நான் தான் சம்பாதிக்கறேனே, நானும் மத்த மதங்கள்ல குடுக்கறாமாதிரி மாசா, மாசம் ஏதாவது சேவை கார்யத்துக்கு உபயோகமா மடத்துக்குக் காணிக்கை தரேன் சொன்னதுக்கு, நீ இங்க பாடம் படி, யுனிவர்சிட்டில பாடம் சொல்லிக் குடு, வேறெதுவும் பண்ண வேண்டாம்ன தகப்பன்.

வந்து சேந்த புதுசு.  மடத்துலயும், மடத்து நிறுவனங்கள், நிலங்கள்லயும் நெறையா தப்பு பண்றா நம்ம மனுஷாளேன்னு ஒரு தடவ பெரியவா கிட்ட சொன்னேன்.  "இது தர்ம ஸ்தாபனம், கவர்மெண்ட்  ஆபீஸ் மாதிரிதான்.  அவா, அவா வேலைய அவாளேதான் பாக்கனும்.   ஒருத்தர் 10 சதவீதம் தப்பு பண்ணுவா, இன்னொருத்தர் 20-30 சதவீதம் பண்ணுவா.  வேலைகள் இன்னும் நிறையா இருக்கு, மனுஷாள் 100 சதவீதம் சுத்தமானவாளா கிடைக்க மாட்டா.  அவா, அவா கிட்ட என்னென்ன கார்யம் நடக்குமோ, அதுதான் நடக்கும்.  சூர்யன்ட்ட போகும்போதும், கடினமான மலைல ஏறும் போதும் மேலப்போக, போக உஷ்ணம் தாங்காம இதெல்லாம் தானாவே உதிர்ந்து விழுந்துடும்.   ஸத்யமானவாலால மட்டும் தான் மேல வரைக்கும் போக முடியும்.  நீ இதையெல்லாம் பாத்துக் கொழப்பிக்காம, உன் வேலைய மட்டும் பாரு,  எதாவது சொல்லனும்னா சந்த்ரமௌளீஶ்வரர் கிட்ட போய் சொல்லிடு" ன்னு எனக்கும் கீதோபதேசம் செய்த ஆச்சார்யாள்.  அத பின்னாடி அனுபவத்துலயும் பாத்தேன்.

ஒரு தடவ பெரியவா வாக்கிங் போற பாதை கிட்ட  ஒக்காந்து காலை சந்த்யாவந்தன ஜபம் பண்ணிண்டு இருந்திருக்கேன்.  பெரியவா வரும் போது மரியாதையில்லாம, தெரியாம ஒக்காந்துண்டு இருக்கானேன்னு கூட வந்தவா கண்ண மூடிண்டு இருந்த என்ன எழுப்ப போறான்னு தெரிஞ்சதும், அவாளைத் தடுத்துட்ட பெரியவா, பூச்சிகள் ஒதுங்கனும்னு எப்பவும் பாத நுனியை சத்தப்படுத்திண்டு நடக்கற தன் பழக்கத்தையும் நிறுத்தி, சத்தப்படுத்தாம என்னைத் தாண்டிப் போனான்னு தெரிஞ்சுது.

வேதாந்த பாடம் நடந்துண்டிருந்த போது, பாஷ்ய வாத்யார் உப்புக் கரைஞ்ச தண்ணில உப்பு கண்ணுக்குத் தெரியரதில்ல, ஆனா ருசிக்கும் போது புலப்படறதுன்னு சொல்லிண்டு போறார்.  பெரியவா "அத குடிச்சதும், சுத்தமான தண்ணில ஆசமனம் (குடிச்சிட்டு) பண்ணிட்டு வா ன்னு ஏன் சொல்லியிருக்குன்னு" கேட்டா.  ஒருத்தர் அது ஆசாரம்னார், மத்தவால்லாம் ஒன்னும் விளக்கம் சொல்ல முடியல.  எதோ பெரிசா இருக்கும்னு ஆர்வமா பெரியவா கிட்டயே கேட்டா.  உப்பு தண்ணிய குடிச்சதும் அதும் உப்பு இருக்குன்னு தெரிஞ்சுப்பான்.  ஆனா சுத்தமான தண்ணில ஆசமனம் பண்ணினதும் மூளைல அந்த பதிவு அனுபவ வித்யாசத்தால இன்னும் ஸ்திரமா பதியும்னா.   மஹா பெரியவாளோட ப்ரதான சிஷ்யர் இப்படி வேதாந்தத்துக்கு ஒரு எளிய விளக்கம் குடுத்திருக்காளேன்னு ஆச்சர்யப்பட்டா, அது நிலா அழகா, குளிரா இருக்கேன்னு ஆச்சர்யபடறா மாதிரிதான்.

ஒரு முறை மடத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பசங்களும் தெரிஞ்சிக்கட்டும், சேவை பண்ற பழக்கம் வரட்டும்னு ஸ்டூடண்ட்ஸ் கொஞ்சம் பேரக் கூட்டிண்டு போயிருந்தேன்.  அப்ப அங்க எங்களப் பாத்த பெரியவா ஆசிர்வாதம் பண்ணிட்டு, இன்னிக்கு லீவு இல்லியே, எங்க இங்க வந்தேள் எல்லாரும்னு கேட்டா.  நான் விஷயத்தை சொன்னேன்.  உடனே வார்டன் மாதிரி, "மடத்துல இப்படி தினமும் எதாவது நடந்துண்டேதான் இருக்கும், லீவு நாள்ல வந்து பாத்து, சர்வீஸ் பண்ணினா போறும், படிக்கறத விட்டுட்டு இங்கெல்லாம் வரக்கூடாது" ன்னு தீர்க்கமா சொல்லிட்டா.

அப்பா நடத்தற ஸ்கூலுக்குப் பணம் போதலைன்னு யுனிவர்சிட்டி வேலைய விட்டுட்டு ஐ.டி. கம்பெனி வேலைக்குக் கிளம்பி, ராஜினாமாவ வைஸ் சான்ஸ்லரும் அங்கீகரிச்ச போது, பெரியவா யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தா.  நண்பர்கள் யோசனைப்படி நான் டவுனுக்குப் போயிருந்தேன், பெரியவா பேசி, போக விடமாட்டான்னு.  எல்லா உயரதிகரிகள், ஸ்டூடண்ஸ், அலுவலர்கள் ன்னு பேசிட்டு எல்லார் முன்னாடியும் என்னை எங்கன்னு கேட்டிருக்கா.  எல்லாரும் கேம்பஸ் முழுக்கத் தேடி, விட்லயும் தேடறா, உன்னைப் பாக்கறதுக்காக ஒக்காந்திருக்கான்னு நண்பர்கள் ஃபோன் பண்ண, பதறியடிச்சிண்டு ஓடி வந்து, நமஸ்காரம் பண்ணி, அழுதேன்.  எல்லாரையும் வெளில இருக்கச் சொல்லிட்டு, என் கூட யுனிவர்சிட்டி லைப்ரரி கண்ணாடி ரூம்ல கும்பகர்ணன், விபீஷணன் கதைய சொல்லி, குழந்தைகளை வெளில அனுப்பு, நீ போய்டாதன்னு சொல்லி, வைஸ் சான்ஸ்லர் பி.ஏ வ கூப்டு, அந்த ரெஸிக்னேஷன் லெட்டர கிழிச்சிப் போட்டுடு, அவன் எங்கயும் போகலன்னு உத்தரவு இந்த ஃபவுண்டர் அண்டு பேட்ரன்.

அழைத்தும் எங்கும் எளிதில் வந்து விடாத இந்த இந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் கம்பரசன்பேட்டை எங்க இல்லத்துக்கு ரெண்டு, மூணு தடவ கூப்டாமலேயே, எதிர்ப்பார்க்காத இன்ப அதிர்ச்சி இன்ஸ்பெக்ஷன், எழுந்தருளினது, குழந்தைகளை ஆசிர்வதித்தது, எங்காத்து விக்ரஹங்களுக்குப் பூஜை செய்ததெல்லாம் நாம் இன்னும் நெறையா எதிர்பார்ப்பில்லாத, எதிர்ப்புகள மீறின சேவைகளைத் தொடர்ந்து செய்யனும்க்ற உத்வேகத்தைக் கொடுக்கும் அங்கீகாரமே.

திரும்பி ஒரு தடவ பெரியவா கிட்டயே பர்மிஷன் வாங்கிண்டு, படிச்ச படிப்பு அனுபவத்துல எங்க, எப்படி உபயோகப்பறதுன்னு பாத்துட்டு, இன்னும் கத்துண்டு வந்துடறேன்னு வெளில வந்திருக்கேன்.  மேய்ச்சல் நிலத்துல மேஞ்சிண்டிருக்கற மாட்ட கட்டியிருந்த கொம்ப இப்ப காணோம்.  சிவன் இனிமே யார, எப்ப அனுப்பிச்சு, திரும்பி வழி நடத்தப் போறான்னு தெரியல.  இவாகிட்டேந்து எப்ப இதையெல்லாத்தையும் கத்துக்கறது,  நடைமுறைப்படுத்தறது ?  இந்த மாதிரி இவாளோட விஶ்வரூபத்தோட பல முகங்களைக் கூட இருந்து ரசிச்ச த்ருப்தி மட்டும் தானோ ! ! !

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.- திருமூலர் திருமந்திரம்

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகரில்லாத தனித் தலைமை தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடி என் சென்னிமிடை வைத்த பெரும் தெய்வம் - ராமலிங்க அடிகள் திருவருட்பா

என்று தோன்றினை என்று கூறவும் இயலா
தொன்மை வாய்ந்தவா இறைவா தொழுதழுகின்றோம்
எந்த நாளும் உந்தன் புகழ் ஓங்கி உயர்ந்திட - குருவே
உந்தன் பாதத்தில் இன்று நானே அர்ப்பணம்.

ஜய ஜய பகவா குருவே ஜய ஜய பகவா
ஜய ஜய பகவா கொடியே ஜய ஜய பகவா

Oct 15, 2017

தீபாவளி

தீபாவளி - தீப + ஆவளி - தீபங்களின் வரிசை

நம் உள்ளும் புறமும் இருக்கும் இருளை அகற்றி, எங்கும் அறிவான, மகிழ்வான, ப்ரகாசமான ஒளி பரவ வேண்டும் என்பதைக் கொண்டாடும் நாள், இதற்கடுத்த கார்த்திகை மாதத்தில் தினமும் எல்லா க்ராமங்களிலும் மாலை வீட்டு வாசல்களில் சிறப்பாக விளக்கேற்றுவர், மார்கழியில் விடிகாலை அப்படி செய்வார்கள்.

பரமேஶ்வரன் தவத்தின் பலனாக அம்பிகைக்குத் தன் இட பாகத்தைக் கொடுத்து, அர்த்த நாரீஶ்வரனான நாள்

காமரூபம் - ப்ராக்ஜோதிஷம் (இன்றைய அஸ்ஸாம்) நாட்டை ஆண்டு கொண்டிருந்த பௌமன் என்ற அஸுரனைக் கொன்று அவன் அன்னை விருப்பப்படி மக்கள் துயரம் தீர்ந்து, அவன் இறந்த அந்த நாளை அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் நாள்.  அவன் செயல்பாடுகளால் அவனுக்கு நரகாஸுரன் என்று பெயர்,  நாம் படும் நரகங்களிலிருந்து விடுபட பண்டிகைக்குப் பெயரும் நரக சதுர்த்தசி தான், நரகாஸுர சதுர்த்தசி இல்லை.  இந்த நாளில் விடிகாலை நாம் தேய்த்துக் குளிக்கும் எண்ணையிலும், நீரிலும், மற்ற பொருள்களிலும் லக்ஷ்மியும், கங்கையும், மற்ற தேவதைகளும் வாசம் இருப்பார்கள்.

தீர்க்கதமஸ் என்ற முனிவர் ஏற்கனவே கஷ்டங்களில் இருக்கும் மக்கள் மேலும் தங்களை வ்ரதங்களாலும், சாப்பிடாமல் உபவாசங்களாலும் கஷ்டப்படுத்திக் கொண்டுதான் இறைவனை அணுகி, அவன் அனுக்ரஹம் பெற வேண்டுமா என்று கேட்டதற்கு, சனாதனர் என்ற ரிஷி அருளிய பூஜை முறையே இந்த தீபாவளி.

பகீரதன் தேவலோகத்துக் கங்கையை பூமிக்கு வருவித்த நாள்

க்ருஷ்ணன் கூறியதைக் கேட்டு கோபர்கள் கோவர்த்தன கிரிக்கு பூஜை செய்த நாள்

இராவணேஶ்வரனை அவன் செய்த தவறான பிறன் மனை நோக்கல் என்ற குற்றத்திற்காகக் கொன்று, சீதையோடும், இராமானுஜனாம் லக்ஷ்மணனோடும் (அனுஜன் - தம்பி), விபீஷணன், சுக்ரீவன் தலைமையிலான ராக்ஷஸ, கரடி, குரங்குக் கூட்டத்தோடு அயோத்தி திரும்பிய நாள்.

மஹாவீரர் முக்தியடைந்த நாள்

சீக்கியர்களுக்கு முக்யமான நாள்

புத்தாடை உடுத்தி, துயரங்கள் தீர்ந்த மகிழ்ச்சியின் வெளிப்பாட்டில் பட்டாசு, மத்தாப்பு கொளுத்தி, கூட்டுக் குடும்பங்கள்ல எல்லாரும் சேந்து செஞ்ச பக்ஷணங்களை வெளுத்துக் கட்டி, ப்ரச்னை வராம இருக்க தீபாவளி லேகியம் உண்ணும் நாள்.

குழந்தைகளுக்கு, அடுத்த தலைமுறையினருக்கு இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி இந்த நாட்களிலாவது கூடி வாழும் முறையையும், பகிர்தலையும், சந்தோஷத்தையும் கொண்டாட வேண்டிய நாள்.  நிச்சயமாக நாள் முழுக்க டிவி முன்னாடியே ஒக்காந்து இருக்க வேண்டிய நாள் இல்ல.

ஷேர் அண்டு கேர் கூட்டுக்குடும்பங்களுக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.   மீண்டும் சந்திப்போம்.  ஜய் ஹிந்த்.

Aug 2, 2017

தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்

மனைவி உடையான் விருந்துக்கு அஞ்சான்
வாஹனம் உடையான் வழிக்கு அஞ்சான்
ஆடை உடையான் அவைக்கு அஞ்சான்
கல்வி உடையான் பேச்சுக்கு அஞ்சான்
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - வாரியார் சொற்பொழிவு

Jul 7, 2017

பாண்டிச்சேரி டூர்

17 ஜூன் 2017, சனிக் கிழமை.

பாண்டிச்சேரில ரெண்டு நாளைக்கு என்ன இருக்கு, பீச், மணக்குள வினாயகர், பக்கத்துல ஸ்ரீ அரவிந்தர் ஆச்ரமம்.  மொத்தம் 4 மணி நேரம் போறாதா,  வேற எதையாவது இந்த டூர்ல சேக்கமுடியாதா ன்னு இன்டர்னெட்ல சிவன் கோவில்களைத் தேடி கொஞ்சம் சேர்த்துண்டது தான் இந்த டூர்.  பெஸ்ட்.

1.  மதுராந்தகம்:  இப்பயும் காலை 6.30 மணிக்குப் போனோம், போன தடவை ராத்திரி 8.10 க்குப் போனோம்,  மூடியே இருக்கு ஏரி காத்த ராமர் கோவில்.  எப்ப தரிசனம் கிடைக்கும்னு தெரியல.  என் பையன் பேரும் ராம ஶர்மா.  கோவில் வாசல்ல அவன பாத்துட்டு, கோபுர தரிசனம் பண்ணிட்டுக் கெளம்பினோம்.

இந்த தடவ, மனைவி இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் செஞ்சு கைல எடுத்துண்டு வந்திருக்காங்க,  அதனால எப்ப வேணும்னாலும் சாப்டுக்கலாம்னு அடுத்த ஊருக்குப் பயணமானோம்.    ஆஸ்தான ட்ராவல்ஸ், ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர், ட்ரைவர் டைசன்,  பாண்டிச்சேரி தானேன்னு எட்டியோஸ் காரையே இன்டிகா ரேட்டுக்குக் கொண்டு வந்திட்டார்.  8 ₹ கி.மீக்கு, 250 கி. மீ மினிமம் பயணிக்கனும் ஒரு நாளைக்கு,  இல்லாட்டியும் அதுக்கான காச குடுத்துடனும், ட்ரைவர் பேட்டா 350 ₹ ஒரு நாளைக்கு.

2. அச்சிறு பாக்கம்:   தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி அப்டீன்னு மூணு அசுரப்பசங்க, பயங்கரமா தவம் பண்ணி, இரும்பு, வெள்ளி, தங்கத்துல நினைக்கற எடத்துக்குப் பறக்கற ஊர் கேட்டு வாங்கிட்டாங்க,  இந்த மூணு ஊரும் ஒரு எடத்துல சேரும் போது ஒரே ஆயுதத்தால மூன்று புரங்களையும் அழிச்சா தான் நாங்க அழியனும்னும் வரத்த வாங்கிட்டாங்க.  அவ்ளோதான், ஒருத்தர விடாம எல்லா உயிர்களையும் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருந்தாங்க.  தேவர்கள், முனிவர்கள்னு எல்லாரும் யாராலயும் இவங்கள ஒன்னும் பண்ண முடியல, நீங்க தான் எங்களக் காப்பாத்தனும் நமஸ்காரம் பண்ணினாங்க.  அவரும் ஒரு தெய்வீகத் தேர்ல கெளம்பினார்.  தேர்ல குறை, நேரத்துல குறைங்கறது கவனிச்ச பிள்ளையார பூஜிக்கவே இல்ல,  தேர் அச்சு முறிஞ்சுது,   தேர் சக்ரங்கள்ல அச்சாணியா இருந்த வாயு மற்றும் அக்னி தேவதைகளை, மஹாவிஷ்ணு தண்டாக இருக்கும் அம்போட பின்பக்கத்துலயும், முன்பக்கத்துலயும் இருக்கப் பண்ணினார்.  காஷ்டை, முஹூர்த்தம் ன்னு நேரத்தைக் குறிக்கும் தேவதைகளைத் தேர்ச் சக்ரங்களுக்கு அச்சாக இருக்கச் சொன்னார்,   ஸ்வாமியும் பிள்ளையார பூஜை பண்ணிட்டு புறப்பட்டுப் போயி சண்டைல ஜெயிச்சார்.  அந்த அச்சு முறிச்ச வினாயகர் சன்னதி சிவன் கோவில் ராஜ கோபுரத்துக்கு எதிர்க்க சின்ன கோவிலா இருக்கு,  ராஜ கோபுரத்துக்கு எதிரில் நீரில்லா குளம், தேரடி.  ஸ்வாமி ஆட்சீஸ்வரர்,  பாடல் பெற்ற ஸ்தலம்.   சூப்பர் கோவில்.



3. மைலம் முருகன் கோவில்: மயில் சத்தம் எங்க பாத்தாலும், 7-8 மயில்களையும் பாத்தோம்.  30-50 படிகள் இருக்கும், மலை மேல ஏறி, இறங்க தனித் தனி ரோடுகள் போட்டிருக்காங்க.  20₹ அதுக்கு டிக்கெட்.  கும்பல் விசேஷ நாட்கள்ல இருக்கும் போல,  முருகன் சன்னிதில தூரத்துலேந்தே தரிசனம் பண்ண சௌர்யமா படிக்கட்டுகள் அமைச்சிருக்காங்க.  ரொம்ம அமைதியா, ரம்யமா இருந்துது கோவிலும், கோவிலைச் சார்ந்த இடங்களும்,  ஃப்ரீ டாய்லெட் கோவிலுக்கு வெளில இருக்கு தனித்தனியா, க்ளீனா, தண்ணி வசதியோட.  பொம்மபுரம் (ப்ரஹ்மபுரம்) ஆதீன ஸ்வாமிகளோட பராமரிப்புல இருக்கு இந்தக் கோவில்.  ஸ்வாமிகளும் தீபாராதனையின் போது சன்னிதில இருந்தார், அவரையும் தரிசிச்சோம்.



4. திருவக்கரை:  பாடல் பெற்ற ஸ்தலம்.  சந்த்ரஶேகரர் ஸ்வாமி பேர்.  லிங்கத்துலயே மூன்று முகங்கள் புடைப்புச் சிற்பமா மூலஸ்தானத்துல இருக்கார், மும்மூர்த்தி ஸ்வரூபம்னு குருக்கள் சொன்னார்.  திருவானைக்காவல் அகிலாண்டேஶ்வரி அம்பாள் சன்னதி கிட்ட இருக்கற வாசல் வழியா வெளில வந்தா, அங்க எதிர்க்க வேதபாடசாலை இருக்கு,  அதுக்குள்ள பஞ்ச முகேஶ்வரர் (அஞ்சு முகங்களோட) இதே மாதிரி தான் இருப்பார்.  ஒவ்வொரு முகத்தையும் பார்க்க ஜன்னல் இருக்கும்.  தரிசனம் பண்ணினோம்.

- துர்முகி ன்னு ஒரு ராக்ஷஸி,  அம்பாள் எட்டுக்கையோட காளி ரூபத்துல அவ கூட சண்டை,  அவ கர்ப்பமா இருக்கறத பார்த்த அம்பாள் கருணையோட அந்தக் குழந்தைய அவள்டேந்து எடுத்து, தன் காதுல குண்டலம் மாதிரி போட்டுண்ட்டு, அவள மட்டும் அழிச்சா இந்த ஸ்தலத்துல.  அந்த அஷ்ட புஜ வக்ரகாளிகாம்பாள பக்கத்துலேந்து பாத்தோம்.   பின்னாடி இருக்கற சுதைல இந்த உருவம் அழகா தெரியறது.

இப்பெல்லாம் பாடல் பெற்ற சிவன் கோவில்லல்லாம் கூட பெரிசா ஒண்ணும் கும்பல் இல்ல, ப்ரதோஷ காலத்துல கொஞ்சம் பேர் வராங்க.  இந்த மாதிரி பணம் குடுக்கிற பெருமாள், படிப்பு குடுக்கற ஹயக்ரீவர், நமக்கு எதிரா இருக்கறவங்கள அழிக்கற உக்ரமான காளி, ப்ரத்யங்கரா, சரபர், க்ரஹ நிலைகள சரி பண்ற நவக்ரஹங்கள், எக்சிபிஷன், தீம் பார்க் கோவில்கள், கெடுபிடிகள் இருக்கற கோவில்கள் இப்படி ஏதாவது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் இருந்தா தான் சாமிக்கே கும்பல் வருது,  ஒன்னுமில்லாட்டி மினிமம் 10 அடிக்கு மேல ஒசரமாவாவது இருக்கனும்.  அலையட்டும், மனஸு அலைஞ்சு முடிஞ்சு அவங்களே சிவனேன்னு வருவாங்க. ! !  சுந்தரன், ஆசுடோஷ், சௌலப்யன்,  ஈசியா ஞாபகம் வெச்சுக்கறா மாதிரி லிங்க வடிவத்துலயும் வருவான்,  சித்தத்துல டான்ஸ் ஆடற அம்பலத்தரசனாகவும் வருவான்.

- இந்த ராக்ஷஸியோட அண்ணன் வக்ரனை அழிச்ச கோலத்துல மஹாவிஷ்ணு ப்ரயோகம் பண்ற ஸ்டைல்ல சக்ரத்தைக் கையில புடிச்சிண்டு இந்த கோவில் ப்ராகாரத்துல இருக்கார்.  பட்டர் அண்ணாவும் அன்பா துளசி, புஷ்பம், கேசரி ப்ரஸாதம் குடுத்தார்.  சாப்டு அங்கயே பைப்புல கை அலம்பிண்டோம்.

- பழமையான காலத்தில் புதைந்து அழிந்த மரங்கள் இந்த ஏரியால கற்கள், பாறைகளா மாறி அங்கங்க கிடக்கு,  அப்படி வலிமையான கரையைக் கொண்டதாலும், இதற்கு வக்கரைன்னு பெயர்.  கோவில்லேந்து ஒரு 1-2 கி.மீட்டர்ல இந்திய புவியியல் துறை இந்த கல்மரங்கள் நிறைந்த பூங்காவை பராமரிச்சிட்டு இருக்காங்க.  குழந்தைகள் நிச்சயம் போய், பார்த்து, தொட்டு தெரிஞ்சுக்க வேண்டிய இடம்.




5. சுத்தி, சுத்தி ஒரு வழியா பாண்டிச்சேரி வந்து சேந்தோம்.  வண்டிக்கு 300 ₹ க்குப் பெர்மிட் வாங்கிட்டு,  3-4 ஹோட்டல்கள் நெட், நேர்ல பாத்து, கேட்டு, பேசிப் பாத்தோம்.  மினிமம் 1500-2000.  நாங்க வர்றதுக்குள்ள பூஜை முடிஞ்சு பாண்டிச்சேரி ஸ்ரீ வேத புரீஶ்வரர் கோவில் நடை சாத்தியாச்சு.  அந்த கோவில் குருக்கள் அரசு அண்ணா தருமபுரம் சிவாகம பாடசாலைல படிச்சவர்,  சகஜமா பேசினார்.   மணக்குள வினாயகர் கோவில் யானை பின்னாடி தான் இருக்கு, கொஞ்ச நேரம் பாத்துட்டு, பக்கத்துல சற்குரு வெஜிடேரியன் ஹோட்டல்லயே தங்கிடுங்கோ.  நன்னா இருக்கும்னார்.  2500₹ 24 மணி நேரத்துக்கு, ஃப்ரீ வை-பை இன்டர்னெட், காலை காம்ப்லிமென்டரி பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  ரூம் அருமையா மெயிண்டெய்ன் பண்றாங்க,  சுகாதாரமா இருக்கு, வென்னீர், தண்ணீர், குடி நீர், கரெண்ட் ப்ரச்னை இல்ல, கார் பார்க்கிங் இருக்கு.  ட்ரைவர்ஸ் தங்க ஒரு ஹால் இருந்துது.  பாத்ரூமோட,  ஆனா அங்க பராமரிப்பு நல்லாவே இல்லைன்னார் டைசன்.  நாங்க லஞ்ச் முடிச்சிட்டு 2.00 மணி போல ரிசெப்ஷன்ல போயி நாங்க நாளைக்கு சாயந்தரம் 4 மணி போல தான் ரூம் காலி பண்ணுவோம்.  26 மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களான்னு ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  மேனேஜர் ஓகே சொல்லிட்டார்,  சென்ட்ரலைஸ்டு ஏசி,

நாலு மணிக்கு எழுந்து கோவில், பீச், ஷாப்பிங் போலாம்னு நெனைச்சோம்,  எழுந்திருக்கும் போது மணி 5.30.  ரெடியாகி, வேதபுரீஶ்வரர் கோவில் தரிசனம் பண்ணினோம்,  மதியம் ஒரு அரை மணி நேரம் போல மணக்குள வினாயகர் கோவில் லக்ஷ்மி யானை கூட விளையாடியாச்சு.  பாகன் அண்ணா நெறையா விஷயங்கள் லக்ஷ்மியோட டைம் டேபிள், என்னென்ன, எப்பப்ப, எவ்வளவு சாப்பிடும், முதுமலை யானைகள் முகாம் உபயோகமா இருக்கா, இது பரம்பரை தொழிலா, இல்ல யார் வேணும்னாலும் ட்ரை !! பண்ணலாமான்னு கேட்டுனே போனோம்,  அவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு.  இப்ப திருப்பி மணக்குள வினாயகர் கோவில் வாசல்ல யானை மேல என் பொண்ணையும், பையனையும் ஏத்தி வைச்சு சந்தோஷப்பட்டோம்.   பாஹுபலி பார்ட் 2 படம் வந்திருக்கு, பல போஸ்கள் அந்தப் படத்தோட சாயல்ல போட்டோஸ்ல பதிவாச்சு.  மணக்குள வினாயகர் வேதபுரீஶ்வரர் கோவில் மாதிரி இல்ல, கொஞ்சம் மாடல், லக்சுரி லுக்கு.  பாண்டிச்சேரி வி.ஐ.பி இல்ல, சும்மாவா.

பக்கத்துலயே அன்னை (அன்னை மிர்ரா அல்ஃபாஸா) ஆச்ரமத்துக்குப் போனோம்.  ஸ்ரீ அரவிந்தர் சமாதி, மேலயே அன்னை சமாதியும் உள்ளது,  குழந்தைகள் அனுமதி கிடையாது, ஃபோன் சைலண்ட்ல போட்டு கூட எடுத்துட்டுப் போகக் கூடாது,  ஆஃப் பண்ணி தான் எடுத்துட்டுப் போகனும், அப்படி, இப்படி நிற்கக் கூடாதுன்னு கொஞ்சம் பயமுறுத்தறாங்க.  ஃபாரினர்ஸ் இருக்கறதாலையோ என்னமோ தெரியல,  சமாதி தவிர வேறொரு இடமும் பார்வைக்கு இல்லை,  2-3 நிமிஷம் ஆச்சு, உள்ள போயி சமாதியை தரிசிச்சிட்டு வந்தோம்.  வறுகடலை வாங்கி சாப்டோம், இள நீர் குடிச்சோம்,  ரோடெல்லாம் அகலமே இல்ல, ரெண்டு பக்கத்துலயும் டூ வீலர், கார்ன்னு எல்லா எடத்துலயும் வண்டிகள் நிறுத்தி இருக்கு எல்லா இடத்துலயும்,  நம்ம ஊரா இருந்தா திடீர்னு ஒரு நாள் வந்து லாரில அள்ளிட்டுப் போயிருப்பாங்க, இங்க எப்படின்னு தெரியல.

6. வில்லியனூர் கோகிலாம்பா சமேத காமேஶ்வரர் கோவில்:  நல்ல குளம், நெறையா மீன்கள், பாத்துட்டு ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ இருக்கும்.  சத்குரு ஹோட்டல் காஸ்ட்லி,  மெட்ராஸ் சரவண பவன் ஆரம்பிச்சு வச்ச பழக்கம், தரம்ங்கிற பேர்ல காஸ்ட்லியா கொஞ்சூண்டு சாப்ட தராங்க இப்ப எல்லா ஹோட்டல்லயும்.  நாங்க வெளில ஒரு தரம் குறைந்த ஹோட்டல்லயே டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

18 ஜூன், 2017, ஞாயிறு

காலை வெஜிடேரியன் பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  நாங்க தான் முதல் ஆளா போயி, கடைசி ஆளா வெளில வந்திருப்போம்னு நெனைக்கறேன்.  ஜூஸ், பால், டீ, காபி, கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரட், பட்டர், ஜாம் (டோஸ்டருடன்!!), இட்லி, வடை, பொங்கல், வெஜிடபிள் ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி, கிழங்கு, சாம்பார், சட்னி வகைகள், தயிர்... நல்லா சாப்டோம்.  ஒன்னும் கெடுதல் பண்ணல.



7. திருக்காஞ்சி கங்கை வராக நதீஶ்வரர்:  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ குள்ள இருக்கு, வில்லியனூர் போயி போனோம் நாங்க.  மஹாவிஷ்ணு வராக அவதாரம் செஞ்சப்ப, அவர் கொம்பால கீறின போது தோன்றின நதி, அதனால வராக நதி,  அகஸ்த்யர் பூஜை பண்ணின இடம்,  இப்ப கும்பாபிஷேகம் ஆகி இருக்கு,  நேத்து ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சு,  இது ஊருக்குள்ள விசாரிச்சுப் போகனும், கோவிலும் திறந்திருக்குமான்னு சந்தேகம் தான்னு சொன்னாங்க, வில்லியனூர் கோவில்ல, அதான் காலைல வந்தோம்.  இப்ப கட்டியிருக்கற சன்னதிகள்ல அகஸ்த்யருக்கும் தனியா ஒரு சன்னிதி, அவர் கையில குட்டி சிவலிங்கத்தை வெச்சிட்டிருக்கார், பக்கத்துலயே மனைவி லோபாமுத்திரை.  குருக்கள் டீம் பொறுப்பெடுத்து நல்லா செய்றாங்க.

வெள்ளம் வந்த போது ஸ்வாமி இந்த கரைலயும், அம்பாள் எதிர்க் கரைலயும் சேந்திட்டாங்க,  அவங்களுக்கு அங்கயே விஶ்வ நாதர் புதுசா ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில், வராக நதீஶ்வரருக்கு  இந்தக் கரைல காமாக்ஷி, மீனாக்ஷி ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில்.  கோவிலுக்கு எதிர்ல இருக்கறவங்களுக்குக் கூட ஸ்வாமி பேர சொன்னா தெரியல.  சிவன் கோவில்னு சொன்னதும், தோ ! ! ன்னு காமிச்சாங்க.

தரிசனம் முடிச்சிட்டு சுண்ணாம்பாறு போட்டிங் போனோம்.  புதுவை அரசு நிர்வாகம், 200₹ ஒரு டிக்கெட், பொண்ணுக்கு 130 ₹. போட்டுல சூப்பரா போனோம், ஒரு 5-10 நிமிஷப் பயணம்,  ஒரு தீவுல பாரடைஸ் பீச்சுன்னு இறக்கி விட்டாங்க.  பீச்சு தண்ணி சூப்பரா இருந்துது,  நானும், பொண்ணும் நல்லா ஆட்டம் போட்டோம்,  கரைலயே ஓசில ரெண்டு, மூணு ஷவர் பைப் இருக்கு,  நல்ல தண்ணில குளிக்க,  திரும்பி அங்கயும் குளிச்சோம்.  வெஜிடேரியனுக்கு சாப்ட ஒன்னும் இல்ல.  வெயில்,  ஷவர் தண்ணி நல்லா இருந்துது, குடிச்சோம்.  பாட்டு போட்டு, மழையில நனையறா மாதிரி ஒரு ஏற்பாடு,  ரெண்டாளடி ஒசரத்துக்கு உள்ள பெல்ட்ல கட்டி, உருட்டிட்டு போக ஒரு பெரிய காத்தடைச்ச பந்து,  வேடிக்கை பாத்துட்டு இன்னொரு போட்டுல ஏறி இக்கரைக்கு வந்தோம்.  போகும் போது லோயர் டெக்கு, வரும் போது அப்பர் டெக்கு பயணம்.  சுத்தி தென்னை மரங்கள்.


எங்கள ரூம்ல சாப்டு, தூங்க வெச்சிட்டு, மனைவி நைஸா வெளில ஷாப்பிங் போய்ட்டு வந்திட்டாங்க,  ஏக குஷி.

9. இரும்பை மாகாளம்:  மாலை 4 மணிக்குக் கெளம்பினோம்,  பாண்டிச்சேரி பீச் ரோடு நான் சின்னப் பையனா இருந்தப்ப, அப்பா கூட போனது.  அப்பாவோட நண்பர் சின்னப்பன் மாமா வீட்டுக்குப் போயிருந்தோம்,  அவங்க எங்களுக்கு முழு பாத்திர செட்டும் புதுசா வாங்கி இருந்தாங்க, நாங்க அவங்க வீட்டு சமையல் சாப்பிடனும்னு.  ஊர் சுத்தி காமிச்சாங்க.  இப்ப பீச் ரோடு இன்னும் அகலம் பண்ணியிருக்காங்க.  கப்பல்ல மணலைக் கொண்டு வந்து கொட்டி, இன்னும் அகலம் பண்ணிட்டு இருக்காங்க.  சுண்டல் சாப்டு, சறுக்கு மரம் வெளையாடிட்டு, கப் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு கார்ல ஏறிட்டோம்.

கடுவெளிச் சித்தர் ஒரு சித்தர்,  அவர் தொண்டை நாட்டு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஏரியாக்கள்) சிவ ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்த போது, இந்த இடத்தில் வந்து தவம் செய்து கொண்டே இருந்தார்,  தவத்தின் உக்ரத்தால் மழையுமின்றி தவித்த மக்கள், மன்னனிடம் பயத்தால் முறையிட்டனர்.  மன்னனும் முனிவரை எப்படி தவத்திலிருந்து கலைப்பது என்று யோசித்து, கோவிலில் நாட்டியமாடும் தேவதாசியான வள்ளியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தான்.  புற்றுக்குள் இருந்த முனிவர் தினமும் அவர் கையில் விழும் அரச இலையை மட்டும் உண்டு கொண்டிருப்பதைக் கண்ட வள்ளி, அதற்குப் பதிலாக மாவில் செய்த அப்பளங்களைத் தினமும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.  நாளடைவில் உடல் கொஞ்சம் பெருத்த சித்தர், புற்று உடைந்து, தவம் கலைந்து எழுந்தார்.  மன்னனோடு, வள்ளியும், மக்களும் வறட்சியைப் போக்குமாறு வேண்ட, அவர் அருளால் மழை பொழிந்தது.

மன்னன் இதைத் திருவிழாவாகக் கொண்டாடி, கோவிலில் வள்ளியின் நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.  சித்தர் அவளை சிவ ஸ்வரூபமாகவும், நடராஜரின் நாட்யமாகவும் அனுபவித்து, லயித்திருந்தார்.  அப்போது அவள் காலில் இருந்து சிலம்பு கழன்று விழுந்தது,  உடனே பதறிப்போன சித்தர் ஓடிப்போய் மீண்டும் அதை எடுத்து அணிவித்து விட்டார்.  தாசியின் காலை சித்தர்  பிடித்ததும், பார்த்துக் கொண்டிருந்த மக்களும், மன்னனும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவரின் தூய்மையில், ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டு, கோபித்தனர்.  சித்தர் உடனே சிவனைப் பார்த்து உனக்கு நடந்ததெல்லாம் தெரியாதா ?  என்று ந்யாயம் கேட்டார்.  சித்தருக்காக மனம் குளிர்ந்த சிவபெருமான், மக்களிடமும், மன்னனிடமும் கோவம் கொண்டார்.  சிவ லிங்கம் மூன்றாகத் தெரித்து விழுந்தது.  உடனே தங்கள் தவறை உணர்ந்து அனைவரும் சித்தரிடம் மன்னிப்பு கேட்டனர்.  அவரும் அவர்களுக்காக உடைந்த பாகங்களை ஒன்று சேர்த்து, தாமிரப் பட்டையால் கட்டியுள்ளார்.  இன்றும் இந்த மஹா காளேஶ்வர் அப்படியே உள்ளார்.

இந்த கதைகளெல்லாம் கோவிலில் இப்போது அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  குருக்கள் அழகாக பூஜை செய்து வைக்கிறார்.   ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.





10. ஒழிந்தியாம்பட்டு:  இரும்பையிலிருந்து இந்த கோவில் அருகில் உள்ளது,  இதும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  ராஜா வேட்டையாடும் போது மானொன்றைத் துரத்திச் சென்றார்.  அது ஓடி ஓடி ஒளிந்தது.  அப்படி ஒளிந்திருந்த போது அம்பை ஒரு முறை எய்தார்.  மான் மறைந்து இரத்தம் ஒழுக சிவ லிங்கமாக மாறியது.   அதுவே ஒளிந்தியாம்பட்டு என்று மருவியது.  வாமதேவர் என்ற முனிவர் இங்கு ஓரிரவு அரச மரத்தடியில் துயிலிருந்தார்.  மறு நாள் காலை, அயர்ந்து உறங்கியதை நினைத்து,  நமக்கு ஒரு நாள் இந்த மரத்தடியில் உறங்கியதே இவ்வளவு சுகமாக இருக்கிறதே,  இந்த இடத்தில் எப்போதும் சிவபெருமான் இருந்தால் அவருக்கு எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைக்க, அவருக்கு அருள்வதற்காக அரசலீஶ்வரராக ஸ்வாமி இங்கு தோன்றினார்.






11. மரக்காணம்: ஒழிந்தியாம்பட்டிலிருந்து க்ராமங்களின் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சேர்ந்தோம்,  ரோடு ஓஷன் ஸ்ப்ரே ரிசார்ட்க்கு எதிரில் போய் சேர்ந்தது.  மரக்காணம் பூமீஶ்வரர் கோவில் சோழர் காலத்தைச்  சேர்ந்தது.  வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை சிவ பூஜை செய்து விட்டு தான் சாப்பிடுவேன் என்றாராம்.  அவருக்காக சிவ லிங்கம் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த மரக்கால் (அளக்கும் கருவி) ஒன்றை கவிழ்த்து வைத்து, சிவலிங்கம் போல் செய்து, அவரை அழைத்து, பூஜையை முடித்து, உணவளித்தார்கள்.  அதன் பின் அந்த மரக்கால் அந்த இடத்தில் இல்லை,  ஒரு ஸ்வயம்பு சிவலிங்கம் தோன்றி இருந்தது அங்கு.  மரக்கால் காணோம் என்றது நாளடைவில் மரக்காணம் என்றானது.

தரிசனம் முடித்து தாம்பரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இரவு 10.00.  நாளை ஆஃபிஸ். பை பை.


Jul 3, 2017

வடலூர் டூர்

தங்கை வசுந்தரா தேவிக்குக் கல்யாணம் செய்து இன்றைய சூழலின் இயல்பின்படி வருடங்களுக்குப் பிறது குழந்தை பிறந்திருக்கான், சந்த்ரசேகரன்.  தாயும், சேயும் நலம்.  தர்மபுரி கிட்ட பெரியாம்பட்டி ங்கிற ஊர்ல பரம்பரை வீட்ல இப்ப மாமனார், மாமியார் கூட இருக்கா.  சொந்தத்துல தான் கல்யாணம்.  எங்களுக்கும் நாள் வித்யாஸத்துல ரெண்டாவது குழந்தை, ராம ஶர்மா பிறந்திருக்கான்.  அதனால் இன்னும் குழந்தைங்க ரெண்டு பேரும் பாத்துக்கல.  இப்ப அங்க போறது தான் முக்ய நிகழ்ச்சி, மத்ததெல்லாம் அத சுத்தி.

02 ஃபிப்ரவரி 2017, வியாழக் கிழமை, வழக்கம் போல ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர் பசங்கள்ட ஒரு இண்டிகா எடுத்தாச்சு.  ட்ரைவர் ஜெய், சின்னப் பையன், ஆனா ஸ்பீடு ப்ரேக்கர், ஹை வேஸ் னு எல்லாத்துலயும் பொறுப்பா ஓட்டினார்.  செல் நம்பர் தான் நாதஸ்வர வித்வான் மாதிரி மாத்திட்டே இருந்தாரு.  இன்னும் எங்கெங்க போறது, எத்தன நாள் ரெஸ்ட், எதுவும் ப்ளான் பண்ணல.    பூந்தமல்லி, வண்டிக்கு பெட்ரோல் போட்டு, மோட்டல் ஹைவே ல லஞ்ச் முடிச்சுட்டு,  மாலை 6 மணிக்கு வேலூர் ஸ்ரீ புரம் தங்கக் கோவில் தரிசனம் செஞ்சோம்.  கோமாதா பூஜை, அம்பாள் தரிசனம்னு ஒருத்தருக்கு 300₹ டிக்கெட் வாங்கினோம்.  நல்ல திமிளோட இருக்கற நாட்டுப் பசுவுக்கு வேத மந்திரங்களை சொல்லி அரை மணி நேரம் போல பூஜை.  முடிஞ்சு அம்பாள் தரிசனம்.  போன், பை எல்லாம் வெளிலயே கவுண்டர்ல வாங்கி வெச்சிக்கறாங்க.  மூலஸ்தானம், அதற்கடுத்த மண்டபங்கள்ல இன்னும் சிட்டுக் குருவிகள நெறையா பாக்க முடியுது,  போன ஜன்மத்துப் புண்யமா, இல்ல ரிஷி, முனிவர்களான்னு தெரியல!!, தங்க வேளைப்பாடுகளுக்கு நடுவுல இவங்க விளையாடல்கள், கீச்சுக் குரல்கள்,  ரம்யமா இருந்துது.  தங்க வீடு, அதுவும் ஓசில எல்லாருக்கும் கிடைக்குமா என்ன ?  மூலஸ்தானத்த சுத்தி இருக்கற தண்ணி குளத்துல நம்ம மக்கள் நெறையா காசு போட்டிருக்காங்க,  தங்கக் கோவில் அம்பாளுக்கே!!

சேலத்துல ஸ்ரீ சரவண பவன்ல டின்னர் முடிச்சோம்.  பெரிய ஹோட்டல் க்ரூப் சேலத்துல, ஏற்காட்டு மலைமேல இருக்கற ப்ராஞ்ச்ல பாத்தோம்.  இட்லிய ப்ளாஸ்டிக் பேப்பர்ல மாவு ஊத்தி செய்றாங்க.  கடை முழுக்க போர்டுகள்,  நாங்க வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தரமான பொருள்கள பயன்படுத்தி உணவு வகைகளத் தயார் பண்றோம்னு.   ப்ளாட்ஃபார்ம், தள்ளுவண்டில கடை போடறவங்க கூட துணி பயன்படுத்தறாங்க, இல்ல இட்லி குக்கர்ல எண்ணெய ஊத்தி பண்றாங்க.    புலம்பியாச்சு, ஓகே, நைட் ஏற்கனவே புக் பண்ணியிருந்தபடி ஓகேனகல் தமிழ் நாடு டூரிஸம் ஹோட்டல்ல போய், ரூம்ல தூங்கியாச்சு, க்ளீனா இருந்துது,  நைட் 11-12 ஆய்டுச்சு, குடி தண்ணி குடுக்கத்தான் அங்க, இங்க ஓடினாங்க.  பெரிய இடம், நூறு கார் கூட நிறுத்தலாம்.  நல்லா தூங்கினோம்.

03 பிப்ரவரி, 2017.  காலை அருவிக்குப் போனா தண்ணி கம்மியா இருந்துது,  பரிசல் 12 வயதுக்குள்ள இருக்கற குழந்தைகள ஏத்திக்க மாட்டாங்கன்னு சொன்னாங்க.  ஜென்ட்ஸ் குளிக்கற எடத்துல நல்லா தண்ணி கொட்டிச்சு, போயி நானும், பொண்ணும் ஆட்டம் போட்டோம்.  லேடீஸ் குளிக்கற எடத்துல பைப்புல வர்றா மாதிரி தண்ணி விடறாங்க,   தண்ணி கம்மியா இருக்குன்னு பரிசல்ல போறதையும் நிறுத்திட்டாங்க.  குளிக்க தண்ணி இல்ல, பரிசல் இல்ல, வெஜிடேரியன் ஹோட்டல் ஒன்னு கூட இல்ல மொத்த ஒகேனகல்ல.  ஸ்னாக்ஸ் வாங்கினா குரங்கு பிடிங்கிட்டுப் போய்டுச்சு, தணைவி கொஞ்சம் அப்செட்.  நான்வெஜ் கடைகள், மீன் வெரைட்டி தான் எங்க பாத்தாலும்.  100₹ க்கு மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் வாங்கினோம்,  தமிழ் நாடு ஹோட்டல் வாசல்லயே ஒருத்தர் நீட்ட வாக்குல சூப்பரா போட்டுட்டு இருந்தாரு.  நேத்து ராத்திரி சேலத்துல சாப்டது.  குழந்தை ஹோட்டல்லயே அட்ஜஸ்ட் பண்ணி இட்லி, தோசை சாப்டா.  இனிமே இங்க இருக்கக் கூடாது, நை ட் டின்னர் முழுச்சாப்பாடு ஆர்டர் குடுத்தாச்சு தங்கச்சி கிட்ட.  சரியான பசி, டிஃபன் வேண்டாம்னு சொல்லியாச்சு.

இந்த அருவிக்கு எங்கிருந்து தண்ணி வருதோ, அங்க எங்கயாவது போய்க் காவிரி ஆத்துல குடும்பத்தோட குளிக்கலாம்னா,  ஒரு இடமும் தெரியல.  அப்பறம் ஒருத்தர் கிட்ட நடந்ததெல்லாம் சொல்லி ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  அவர் வீட்டுக்குப் பின்னாடியே கார மறைவா விட்டுட்டுப் போய்க் குளிச்சிட்டு வரச் சொல்லி, கதவத் திறந்து விட்டாரு.   வண்டிய அப்படியே விட்டுட்டு, அவர் வீட்டு பின்னாடி பாறைகளைத் தாண்டிப் போனோம்.  காய்ஞ்சி போன பாறைகளைத் தாண்டினா, ஒரு இருபது அடி அகலத்துக்கு காவிரியாறு அசைவில்லாம ஓடிட்டு இருந்துது,  இடுப்பளவு ஆழம், இழுப்பும் இல்ல, ஒண்ணும் இல்ல.  ஒரு மணி நேரத்துக்கும் மேல நல்லா ஆட்டம் போட்டோம்,  தண்ணிக்குள்ள மூழ்கி எண்ற வெளையாட்டு, தண்ணில பத்மாஸனம் போட்டு மெதக்கறது, ரொம்ப தூரம் மூழ்கிப் போறதுன்னு பல போட்டிகள் எனக்கும், என் பொண்ணுக்கும்.  முடிச்சு தண்ணிலேந்தே சந்த்யாவந்தனம்,  மாத்யாஹ்னிகம் (சூரிய பூஜை) செஞ்சு முடிச்சேன்.  அண்ணாதுரை ன்னு என் நண்பர் பக்கத்துல தான் ஊர்,  இப்போ காக்னிசன்ட்ல வேலை பாக்கறார்.  அவர் இங்க ஒன்னு, ரெண்டு இடங்களை சொல்லி இருந்தார்.  அதன் படி முதலைப் பண்ணைக்குப் போனோம்.  நம்ம வண்டலூர் பூங்கா, இன்னும் சில இடங்கள்ல இருக்கிற மாதிரி சிலையா இல்லாம கொஞ்சம் நகர்ந்து காண்பித்தன.  சைஸ் வாரியா, ஜாதி வாரியா வகைகள்.  தண்ணி கஷ்டம் கொஞ்சம்.  ஆனா ரொம்ம பக்கத்துல, கைக்கு எட்டற தூரத்தில்,  நமக்கும், அவைகளுக்கும் நடுவுல கம்பி, கண்ணாடி வேலி தான், ரொம்ப பக்கத்துல பாத்தோம்.  பக்கத்துல மீன் பூங்கா ஒண்ணும் இருந்துது.  5₹ டிக்கெட்.  மொத்தம் 2-3 மீன் தான் இருந்தது.  20-30 வெரைட்டி இருக்கும்னும், இப்ப இல்லன்னும் சொன்னாங்க.    அவ்ளோதான் ஒகேனகல் டூர்,  வந்த டயர்டுக்கு ரூம்லயே தூக்கம் போட்டோம்.  நா மட்டும் மதியம் ஒரு 3 மணி போல எழுந்து திரும்பவும் ஃபால்ஸ்ஸுக்குப் போயி, ஒரு மணி நேரம் சரியான குளியல், பூஜைகள்.    ராத்திரி சாப்பாட்டுக்கு பெரியாம்பட்டிக்குக் கெளம்பிட்டோம்.  வெளியே வர்ற வழில போலீஸ் நிறுத்தி, ட்ரைவர் போதைல இருக்காரான்னு செக் பண்றாங்க.  நம்ம பசங்கள்ட அந்த பழக்கம் எல்லாம் கிடையாது.  இன்னொரு க்ரூப்ப திரும்பவும் ஊருக்குள்ளயே அனுப்பிச்சிட்டாங்க.  நாங்க கெளம்பிட்டோம்.  இன்னும் மோடிஜீ யோட செல்லாக்காசுத் திட்டத்தோட பாதிப்பு குறையல.  பெரியாம்பட்டி ஏ.டி.ஏம் ல பணம் போட்ருக்காங்கன்னாங்க.  போயி நாலாயிரம் எடுத்துட்டு தங்கச்சி வீட்டுக்குப் போனோம்.  முழுச்சாப்பாடு, நல்ல வரவேற்பு.  சரியான தூக்கம்.

04 பிப்ரவரி 2017,  சனிக்கிழமை.  என் பையனுக்கும், தங்கை பையனுக்கும் ஒரே வயஸு, ரெண்டும் ஒரே அமர்க்களம்.   தங்கச்சி பொறுப்பா காலை டிஃபன், சாப்பாடு, பார்சல்னு தூள் கெளப்பிட்டா.  அத்தங்காவுக்கும், அத்தானுக்கும் நாங்க வந்ததுல ரொம்ப சந்தோஷம்.  எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துக் குடுத்தாங்க.  திரும்பவும் வந்து, தங்கிட்டுப் போகச் சொன்னாங்க.  ரெண்டு பேருமே இன்னும் எங்க வயஸுப் பசங்க மாதிரி நல்லா நட்பு பாராட்டினாங்க.  மாப்ளை ஹிமாலயா ப்ராடக்ஸ்ல அதிகாரியா இருக்காரு.  அப்பா, பையனுக்கு ஊருக்குள்ள நல்ல மரியாதை,  எல்லா வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், ஐயப்ப பூஜைகளுக்கும் இவங்க தான் அங்க எல்லாமே.   தொடர்ந்து ஐயப்ப மலைக்குப் போறவங்க.  மாப்ளையும் எங்க கூட வந்தாரு.  அவர் கார சேலத்துல சர்வீஸ்க்கு விட்டிருந்தாரு.  சேலம் வரைக்கும் அவரே ஓட்டிட்டு வந்தாரு.  ட்ரைவர் ஜெய்க்கு ரெஸ்ட்டு,  பொதுவா வண்டிய யாருக்கும் குடுக்க மாட்டாங்க ட்ரைவர் எல்லாரும்.   பழக்கத்தால நம்பி குடுத்தாரு ஜெய்.  மாப்ளையும் அவர் நம்பிக்கைய காப்பாத்திட்டாரு.  அவர சேலத்துல எறக்கி விட்டுட்டு, நாங்க ஏற்காட்டுக்குப் போனோம்.  வீக் எண்டு,  ரூம் ஒன்னும் உருப்படியா கெடைக்கல,  மனைவி மெனக்கெட்டு இன்டர் நெட்டுல தேடி, ராயல் ரிசார்ட் ன்னு ஒரு எடத்தக் கண்டு பிடிச்சாங்க.  1000₹ ஒரு ஏசி டபுள் ரூம் 24 மணி நேரத்துக்கு.  நல்ல மேனேஜர்,  நல்ல சர்வீஸ் பாய்ஸ்,  போட் ஹவுஸ், சேர்வராயன் சினிமா தியேட்டர் கிட்ட தான் ரூம்,  வெஜ் சாப்பாடு வெளில சாப்டுக்கங்க சார் ன்னு மேனேஜர் ரிக்வெஸ்ட் பண்ணினாரு.  வெளிய ஒரு ரெண்டு ஒக்காந்துக்கறா மாதிரி ஊஞ்சல் போட்டிருக்காங்க.  நாங்க செட்டிலாயிட்டு,  தங்கச்சி குடுத்திருந்த பார்சல் எல்லாத்தையும் காலி பண்ணி, ஒரு குட்டி தூக்கம் போட்டோம்.  மாலை தெருப்பண்டங்கள் சாப்டுட்டு, பெடல் போட்டிங் போனோம்.  அந்த எடத்துக்குப் போக ஒரு டிக்கெட்டு, போட்டிங்க்கு தனியா ஒரு டிக்கெட்டு,  பெடல் போட்டிங் போகும் போதே கரைல புள்ளி மான்கள் வேடிக்கைப் பார்த்தோம்.   முடிஞ்சு 20 ₹ பஞ்சு மிட்டாய் குச்சில சுத்தி, சுத்தி ஃப்ரெஷ்ஷா ஒருத்தர் போட்டிட்டிருந்தார்.  2 வாங்கி சாப்டோம்.   போட்டிங் கரையிலயே ஒரு க்ரூப் டி-சர்ட்ல போட்டோ ப்ரிண்ட் பண்ணி சூடா தராங்க.  ஒரு டி-சர்ட் முன்னூறு ரூபாய்ன்னு ஞாபகம்.  ஒரு ஃபேமிலி போட்டோ புடிச்சி, ரெண்டு குழந்தைகளுக்கும் டி-சர்ட்ல ப்ரிண்ட் போட்டு வாங்கினோம்,  

நைட்டு சேர்வராயன் ஹோட்டல்ல டின்னர் முடிச்சுட்டு,  ஒருத்தருக்கு 100 ₹ சேர்வராயன் த்யேட்டர்ல டிக்கெட்டு,  ஃபேமிலி ஷோஃபா போட்டு இருக்காங்க,  தனியாவும் சீட்டு இருக்கு,  எங்க வேணாலும் ஒக்காந்துக்கங்க சார்,  உங்க இஷ்டம்னு சொல்லிட்டாரு டிக்கெட் கவுண்டர்ல.   பெரிய த்யேட்டர்,  பகல்ல, சம்மர்ல ஏசி போடுவாங்க போல இருக்கு,  எங்களுக்கு இப்பவே குளிர் தான்,   சூப்பர் த்யேட்டர்,  வாரக்கடைசில டெய்லி 5 ஷோ போல இருக்கு.  படம் போடற வரைக்கும், இன்டர்வெல், படம் முடிஞ்சதும்னு அருமையா எம்.ஜி.ஆர் கொள்கைப் பாடல்கள் ஸ்பீக்கர்ல,  எங்க வீட்ல எல்லாரும் எம்.ஜி.ஆர் ஃபேன்ஸ், என் குழந்தைங்க உட்பட,  வீட்ல டெய்லி கேட்ட பாடல்கள இங்க த்யேட்டர் ஸ்பீக்கர்ஸ்ல கேட்டதும் சரியான குஷியாயிட்டோம்.  மொத்தமா த்யேட்டர்ல 50 பேருக்குள்ள தான் இருப்போம்.   போகன் படம் பார்த்தோம்.   ஏற்காடு போற எல்லாருக்கும் நைட் இந்த த்யேட்டர்ல ஒரு படம் ரெகமெண்ட் பண்றேன்.  நல்ல சூழ்நிலை,  நல்லா என்ஜாய் பண்ணினோம் ட்ரைவர், பசங்க எல்லாரும்.  நைட் ரூம்ல தூக்கம்.

05 பிப்ரவரி, ஞாயிறு,
- ஊட்டி, கொடைக்கானல் ஒரே கும்பல், போரடிச்ச இடம், போயி ரெஸ்ட் எடுக்கணும் நெனைக்கறவங்களுக்கு ஏற்காடு பெஸ்ட்,
- 28 ஹேர் பின் வளைவுகள்,  நல்ல க்ளைமேட், பழ வகைகள், வெஜ் சாப்பாட்டுக்கு உள்ளூர், அப்பறம் சேலம் ஸ்ரீ சரவணா மாதிரி ஹோட்டல்கள்.
- சேர்வராயன் பெருமாள் கோவில் (காலை 7-8 மணிக்கு திறப்பாங்க, ஒரு 10-20 அடி மலைக் குகைக்குள்ள போகனும்  இந்த பெருமாள் பேர்ல தான் இந்த ஊர், மலை எல்லாமே),
- ரஜினி தரிசனம் பண்ணின நாகலூர் ஸ்ரீ சக்ர மஹா மேரு கோவில் ! ! (மூலஸ்தானத்து கோபுரம் மேரு வடிவத்தில இருக்கு),
- தென் இந்தியால இங்க மட்டும் இருக்கற தேசிய தாவரவியல் பூங்கா (பொட்டானிகல் கார்டன், பூச்சி சாப்பிடற செடி, அப்படி, இப்படின்னு நெறையா இருக்கு),
- காபித் தோட்டங்கள், மிளகுக் கொடிகள், தொப்பு, தொப்புனு விழற காட்டு பலாக்கள், நார்மல் மழை, குளிர்.
- போட் ஹவுஸ், குழந்தைகள் விளையாட பார்க்
- போட் ஏரி ரொம்பினா ! ! தண்ணி வழிஞ்சு, கிள்ளியூர் அருவிங்கற பேர்ல விழுது.  நெறையா படிக்கட்டுகள் எறங்கிப் போகனும்,  சரியா இன்னும் டீம் ரெடியாகல, அங்க தண்ணியும் இல்ல, அதனால போகல.
- முக்யமான விஷயம், பொதுவா மொத்த ஊரும் 8 மணிக்குத் தூங்கிடும்,   நைட்டு சுத்தற கும்பலுக்கு, ஐ.டி கம்பெனில வேலை பாத்து, லேட் நைட் சாப்பிடற கும்பலுக்கும்.  டீ, பிஸ்கெட் கூட கெடைக்காது.

மதியம் லஞ்ச் சேலத்துல முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்திட்டு மறுநாள்  வேலைக்குப் போகனும்.   எங்க போறது,  கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தாண்டி வந்திட்டே இருந்தோம்.  அரசூர் ஜங்ஷன் ன்னு ஒரு இடத்துல போட்டாங்க ஒரு ட்விஸ்ட் என் துணைவி.  "வள்ளலார் கோவில் பாக்கனும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருக்கோமே, இப்ப பாத்துட்டுப் போய்ட முடியாதா ?" ன்னாங்க.  வண்டி நின்றது. என் பொறியைத் தட்டி விட்டேன்.  எனக்கும் ரொம்ப வருஷமா, குழந்தையா இருக்கச்சேலேந்தே !! இப்டி இந்த ரூட்ல அடிக்கடி மெட்ராஸ்க்கு வந்திட்டு, வந்திட்டுப் போறோமே, வழில எவ்ளோ பாடல் பெற்ற ஸ்தலங்கள், இந்த சிவன் கோவிலையெல்லாம் எப்ப பாக்கப் போறோம்னு ஒரு ஏக்கம்.  இப்ப போனா வடலூர் வள்ளலார் கோவில் பாக்கவும் முடியாது.  மணி மாலை 5-5.30.  ஜெய் கிட்ட இன்னும் ஒரு நாள் போலாமா ன்னேன்.  அவரும் ஓகே சொல்லிட்டாரு.  அப்டியே ஒரு லிஸ்ட் ரெடி.  வண்டிய லெஃப்டுல விட்டோம்.  ஏற்கனவே ஒகேனகல், ஏற்காடு ரெண்டு ஊரு முடிஞ்ச்சுதா, ஒரு 5-10 கி.மீட்டர் குள்ள, திருவெண்ணெய் நல்லூர்.

3. திருவெண்ணெய் நல்லூர்:  ஒரு ஃப்ளாஷ் பேக், எப்பப்பாத்தாலும் சுடுகாட்டுல டான்ஸ், ஒடம்பு ஃபுல்லா அந்த சாம்பல், யானை, புலித் தோலுன்னு ட்ரெஸ், விஷப்பாம்புகள், மண்டை ஓட்டுல அலங்காரம், சடை புடிச்ச முடி,  தலைல எப்பப்பாத்தாலும் தண்ணி,  காளை மாட்டுல பவனி - இப்படி ஒருத்தர் இருந்தா மனைவிக்கு எப்படி இருக்கும்,  அதுவும் பணக்கார வீட்டுல பொறந்த பொண்ணு.  இதான் சிவன் நிலைமையும்.  அவரும் உலகத்துக்காக ஒரே ஒரு நாள் மஹாவிஷ்ணு மாதிரி ஸர்வ அலங்காரத்தோட அழகு பண்ணிட்டு கண்ணாடில போய்ப் பாத்தாரு.  அவர் அழகுல அவரே சொக்கிட்டாரு.  சுந்தரா, வா!! ன்னார், கண்ணாடில இருந்த பிம்பம் உருவத்தோட வெளில வந்துது.  இவர் திரும்ப தன்னோட பழைய அலங்காரத்துக்கே போய்ட்டார்.  சுந்தரர் சிவ கைங்கர்யம் பண்ணிட்டு இருந்தாரு.  ஒரு நாள் அவருக்குப் பெண்ணாசை அரும்பியிருக்குன்னு தெரிஞ்சிட்ட, சிவ பெருமான் பூலோகத்துல போய் இல்லற தர்மத்தை அனுபவிச்சுட்டு வா! ன்னு கட்டளை போட்டுட்டார்.  ஸுந்தரர் இனிமே இந்த மாதிரி நடக்காது, என்ன மன்னிக்கனும்னு கேட்க, சிவன் முடியாதுன்னுட்டார்.   உடனே சுந்தரர், சரி, நான் பூலோகத்துல பிறக்கிறேன்,   ஆனா நான் அங்க குடும்ப வாழ்க்கைல முற்படும் முன் நீங்க வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ளனும்னு வரம் கேட்டார்.  அப்படி அவரை பூலோகத்துல தடுத்தாட்கொண்டு அருளின ஊர் தான் இந்த ஊர்,  அதற்குச் சான்றாக அங்க சிலைகள், சுதைகள் எல்லாம் இருக்கு,  ஏ.பி. நாகராஜன் இயக்கியபழைய திருவருட்செல்வர் படத்துல இந்தக் கதைய சுருக்கமா, அழகா படமாக்கியிருப்பாங்க.  சுந்தரர் சிவனைப் பார்த்து "பித்தா! பிறைசூடி!!" ன்னு பாடின திருத்தலம்.  ப்ரதோஷ காலத்துல இந்த ஸ்தல தரிசனம் முடிஞ்சு, திரும்பி பண்ருட்டி, நெய்வேலி வந்தோம்.

வடலூர் இன்னும் போனதில்ல, அங்க தங்க, தூங்க, திங்க எல்லாம் வசதிகள் எப்படி இருக்கும், தரிசன நேரங்கள் எதுவும் தெரியல.  கோவில் தொடர்புக்கும் ஒரு நம்பரும் உருப்படியா இல்ல.  ஒழுங்கா பதில் கிடைக்கல.  நண்பர் ரகுனாதன் திருவேங்கடாச்சாரிக்கு நெய்வேலி தான் ஊர்.   இப்ப, இந்த போஸ்ட் போடறதுக்கு முந்தின வாரம் தான் கல்யாணம் ஆகி இருக்கு அவருக்கு, சென்னைல பிசினஸ் அனலிஸ்ட்டா இருக்கார்.  இன்டஸ்ட்ரி, வெவ்வேற டொமைன்,  கொஞ்சம் டெக்னாலஜின்னு மனுஷன் பூந்து விளையாடுவாரு.   அருமையா க்ளையண்ட்ஸ ஹேண்டில் பண்ணுவாரு.  ஒன்னு, ரெண்டு ப்ராஜெக்ட்ல அவர் கூட வேலை பாத்திருக்கேன்.   அவருக்கு ஃபோன் போட்டு ஐடியா கேட்டோம்.   அவரு நெய்வேலிலேந்து வடலூர் 10-15 நிமிஷம் தான்.  இங்கயே தங்கிட்டு காலைல அங்க போயிக்கலாம்னு சொல்லிட்டு, நெய்வேலிலயே ரெண்டு, மூணு ஹோட்டல் சொன்னார்.  போயி விசாரிக்கறதுக்குள்ள 10-20 நிமிஷத்துல அவங்க அம்மா கிட்ட பேசி, அவங்கள எங்களோட பேச விட்டுட்டார்.    நெய்வேலி டவுன்ஷிப்ல தனி வீடு,  வீட்ட சுத்தி முக்கனிகளுடன் தோட்டம்.   இங்க வந்திட்டு, எங்க போய், ஏன் வெளில தங்கனும்னு சத்தம் போட்டு, வீட்டுல வந்து தங்கிட்டுப் போக சொல்லிட்டாங்க.  கொஞ்சம் கூட முன்னறிவிப்பில்லாம, வெறுங்கையோட அவங்க வீட்டுல போயி தூங்கினோம்.  நைட்டு எல்லாருக்கும் குடிக்க பால், உபசரிப்புகள்.  தாத்தா எங்களுக்காக முழிச்சிட்டு இருந்து எங்களோட பேசிட்டுத் தான் தூங்கப் போனார்.  பாட்டி காலங்காத்தால எழுந்து பெருமாளுக்குப் பூஜை, ஶ்லோகம் எல்லாம்.   அப்பா காலைல தான் மதுரைலேந்து வந்தார், வரும்போது, குழந்தைகள் வந்திருக்குன்னு பலகாரம் எல்லாம் வாங்கிட்டு வந்திட்டார்.

06 பிப்ரவரி, 2017, திங்கட்கிழமை.

4. நெய்வேலி நடராஜர்:  ஐம்பொன்னாலான சிலைகளில் உலகில் பெரிய சிலைகளில் இங்குள்ள நடராஜர் சிலை குறிப்பிடத்தக்கது.  10 அடிக்கும் மேல் இருக்கும் ப்ரம்மாண்டமான நடராஜர் சிலை,  நெய்வேலி டவுன்ஷிப்ல இருக்கும் இந்தக் கோவில் இருக்கற ஏரியாவ சிவபுரம்னே அழைக்கின்றனர்.  63 நாயன்மார்களுக்குத் தனியா கோவில்.  காலங்காத்தால இப்படி ஒரு சிவ தரிசனம்.

5. வடலூர் வள்ளலார்:  நெய்வேலிலேந்து வடலூர் சத்ய ஞான சபைக்குப் போனா,  அங்க திருமுறை பாடிட்டு இருக்கறவங்க 11 மணிக்கும், மாலை 7 மணிக்கும் தான் நடை திறப்பாங்கன்னு சொன்னாங்க.  மணி இப்பத்தான் 9-9.30 ஆகுது.  ராமலிங்க அடிகள் காலத்துல வாழ்ந்த எங்க அப்பா வழி தாத்தாவும், அவரும் ரொம்ப நெருங்கின நண்பர்கள்.  எங்க தாத்தாவும் ரொம்ப ஆசார சீலர், வள்ளலார் அரூப வழிபாட்டுக்குப் போகும் முன் தான் பூஜித்த விக்ரஹத்த, தாத்தா கிட்ட கொடுத்துட்டு, பூஜையத் தொடர சொல்லிட்டுப் போயிருக்கார்.  இன்னும் எங்க வீட்டு பரம்பரை பூஜைல அந்த விக்ரஹம் முக்ய இடத்துல இருக்கு.   அதனால எங்களுக்கு வள்ளலார் மேல தனி இஷ்டம்.  அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம்ங்கிற ஊருக்குப் போனோம்.  3-4 கி.மீட்டர்ல இருக்கு அந்த வீடு,  அவர் த்யானத்துல இருந்து, சித்தி அடைஞ்ச ரூம் பூட்டி இருக்கு,  வருஷத்துல முக்ய நாட்கள்ல தான் திறக்கறாங்க.  அந்த நாட்கள் குறிச்சிருந்த காலண்டர் ஒன்னு 20₹, ரெண்டு வாங்கிக்கிட்டோம்.   இன்னும் ரெண்டு நாள்ல இந்த வருஷத்து தைப்பூசம், இந்த வீடு, அந்த சபைன்னு எல்லா இடமும் கோலாகலத்துக்குத் தயாராயிட்டு இருக்கு.  11 மணிவாக்குல திரும்பி சபைக்கு வந்தோம்,  பூஜை ஏற்கனவே ஆரம்பிச்சு நடந்திட்டு இருந்துது.  அடிகளார் முதல் கதவுகளைத் திறந்து வச்சு, அங்க இருந்த ஒரு அணையா தீபத்துக்குப் பூஜை, தீபாராதனை எல்லாம் பண்ணிட்டு இருந்தார்.  30 நிமிஷங்கள், இந்த பூஜைக்கே ஒரு 200-300 பேர் கூடி இருந்தாங்க.  ஆம்பள, பொம்பளன்னு நெறையா பேர் அடிகளார் கூடவே திருமுறைகளப் பாடிட்டு இருந்தாங்க.  பூஜை முடிஞ்சு எல்லாருக்கும் தூள் வெல்லம் ப்ரசாதமா குடுத்தாங்க.  வாங்கிட்டு, இன்டர்நெட், ஃபோன் எதுலயுமே சபை பூஜை காலங்கள் பத்தி நேரங்கள் சரியா கிடைக்க மாட்டேங்குது, கொஞ்சம் சரி பண்ணுங்க, எங்கள மாதிரி வெளியூர்லேந்து முதல் தடவ வர்றவங்களுக்கு உபயோகமா இருக்கும்னு சொல்லிட்டு வந்தோம்.

6. வ்ருத்தாசலம்:
- இந்த ஏரியால இருக்கற அருமையான பெரிய கோவில்
- ஊருக்கு ப்ரதானமா இருக்கு.
- வடலூர்-வ்ருத்தாசலம் ரோடு தைப்பூசத்துக்காக வழக்கம் போல டெம்ப்ரவரியா ரெடியாயிட்டு இருக்கு.  இப்படி எல்லாரையும் வாழ வைக்கறார் வள்ளலார் ! !
- வழி நெடுக மாமரங்கள் ரெண்டு பக்கத்துலயும்,  நெறையா மாவடு பொறுக்கி சாப்டோம்.
- அசலம் ன்னா மலை, வ்ருத்த - முதுமை,  எல்லா மலைகளையும் விடப் பழமையான தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- 18 படிகளுக்குக் கீழே இருக்கார் ஒரு பிள்ளையார் இங்க,  ஆழத்து வினாயகர் ன்னு.
- அருமையான சுதை, சிற்ப கோபுரங்கள்.
- சிவபூஜையில் முக்யமாக 28 முறைகள் உண்டு,  இங்கு அந்த ஒவ்வொரு முறைக்கும் ஒரு சிவன் என ப்ரதிஷ்டை செய்து, தகப்பனாரை வழிபட்டுள்ளார் வேலவர்.  அதற்கென்று தனி சன்னதியே உள்ளது பெயர்களோடு.
- ஆத்துல போட்டுட்டு, குளத்துல தேடின கதைன்னு ஒரு பழமொழி.  திருவாரூரில் கைங்கர்யம் செய்ய எல்லா இடத்துலயும் பொருள் வேண்டிப் பெற்றுக்கொண்டிருந்த சுந்தர மூர்த்தி ஸ்வாமிகள், இந்த ஊருக்கு வந்த போது, இந்த ஊர் ஸ்வாமி அவருக்கு ஆயிரக்கணக்குல பொன் குடுத்தார்.  சுந்தரருக்கு ஒன்னும் புரியல, இல்ல தலைகால் புரியல, ஒன்னு இது நெஜம்தானான்னு, இன்னொன்னு இத எப்படி திருவாரூர் வரைக்கும் திருடங்க கிட்ட மாட்டாம எடுத்திட்டு போறதுன்னு.   அப்ப திருடறதுக்குன்னு தனியாவே ஒரு கும்பல் இருந்திருக்கு!! ஸ்வாமி பிள்ளையார சாக்ஷியா வச்சிட்டு, தங்கத்தை உரசி, சுத்தத்தைக் காமிச்சார்,  மாற்றுரைத்த பிள்ளையார்னே இங்க ஒரு சன்னிதி இருக்கு.  திருடங்க ப்ரச்னைக்கும் ஸ்வாமி ஒரு வழி பண்ணி குடுத்தார்.  பக்கத்துல ஓடற மணிமுத்தாறு நதில அத்தனை தங்கத்தையும் போட்டு,  திருவாரூர் குளத்துல போய் எடுத்துக்கோ, அனுப்பிச்சி வைக்கறேன்னார்.   கொரியர், இல்ல கார்கோ !! அப்படியே செஞ்சார்,  அன்னிலேந்து வந்தது இந்த பழமொழி.

7. புவனகிரி: மாத்வ சம்ப்ரதாய முக்ய குருவான ஸ்ரீ ராகவேந்த்ரர் பிறந்த ஸ்தலம்.  அருமையா பழமை மாறாமல் வெச்சு, பராமரிக்கறாங்க.  தரிசனம் செஞ்சிட்டு, அங்கயே ஒரு ஹோட்டல்ல லஞ்ச் முடிச்சோம்.

8. பிச்சாவரம் தில்லை வனக் காடுகள்( மாங்க்ரோவ் ஃபாரஸ்ட், சதுப்பு நிலக் காடுகள், அலையாத்திக் காடுகள்):  இந்த தில்லை மரங்கள் நெறையா இருந்ததாலையே சிதம்பரத்துக்குத் தில்லைன்னு ஒரு பெயர்.   ரொம்ப அரிய காடுகள்,  இந்தியால ரெண்டு, மூணு எடத்துல தான் இருக்கு.  இந்தக் காட்டுகளுக்குள்ள போட்டிங் கூட்டிட்டுப் போறாங்க, தமிழக சுற்றுலாத் துறையினர்.  நாங்க துடுப்புப் போட்டுல போனோம்.  ஒரு மணி நேரம்னு நெனைக்கறேன்.  நல்ல அடர்த்தியான மரங்களுக்குள்ள பயணம்,   மருத்துவ குணம் கொண்டவை என 30, 40 க்கும் மேற்பட்ட தாவரங்கள், மரங்கள்.  வித, விதமான பறவைகள்,  இன்னும் கொஞ்சம் காசு, இன்னும் கொஞ்சம் தூரம்னு ஆசை காட்டினார் துடுப்பாளர்.  போனவரை போதும், குழந்தைங்க இருக்காங்கன்னு வந்துட்டோம்.  கோவில், கோவில்னு ஸ்தல புராணம் பாடினதுக்கு என் பொண்ணுக்கும் இந்த இடம் ஒரு த்ரில்லிங் அனுபவம்.

9. திருவதிகை:  கடலூர் ஏற்கனவே போயாச்சு, திரும்பி வந்த வழிலயே போனா திருவதிகை தரிசனம் பண்ணிட்டுப் போலாம்.  ஆனா மணி இப்பவே மாலை 4,  வேண்டாம், இன்னொரு சமயம் பாத்துக்கலாம்னுனு விழுப்புரம் நோக்கிக் கெளம்பினோம்.  பண்ருட்டி கிட்ட டேக் டைவர்ஶன், டேக் டைவர்ஶன்னு திருப்பித் திருப்பி விட்டிட்டிருந்தாங்க ஏதோ ரோடு வேலை நடக்குதுன்னு,  பாத்தா வழில திருவதிகை வீரட்டானேஶ்வரர் கோவில்னு போர்டு.  போட்டோம் ப்ரேக்க.
- பாடல் பெற்ற ஸ்தலம்
- அஷ்ட வீரட்டத் தலங்களில் ஒன்று (சிவன் கோபங்கொண்ட எட்டு இடங்கள்):  திரிபுர ஸம்ஹாரம் நிகழ்த்திய ஸ்தலம்.  தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களும் பெரும் தவத்தால் வரங்களைப் பெற்றனர்.  மனதால் நினைக்குமிடத்திற்கு உடனே பறந்து செல்லும் ஊர்களை  தங்கம், வெள்ளி, இரும்பால் முறையே அமைத்துக் கொண்டனர்.  இந்த திரி புரங்களும் சேரும் இமைப் பொழுதில், சிவனைத் தவிர வேறாராலும் அழிவில்லை என்ற இருமாப்பில் எல்லாரையும் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு துன்புறுத்தி ஆண்டு கொண்டிருந்தனர்.  தேவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் அவர்களை அவ்வாறே அழித்த இடம் இதுவே.
- மற்ற வீரட்டத் தலங்கள்: தஞ்சை கண்டியூர் - அகந்தை கொண்ட ப்ரஹ்மாவின் சிரத்தைக் கொய்த ப்ரஹ்ம சிர கண்டீஶ்வரர், விழுப்புரம் திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதைத்த வீரட்டேஶ்வரர், நாகை திருப்பறியலூர் (பரசலூர்)- தக்ஷன் தலையைக் கொய்த இடம்,  நாகை திருவிற்குடி - ஜலந்தராசுரனை வதைத்த இடம்,  நாகை திருவழுவூர் - தாருகா வனத்து முனிவர்கள் யாகத்தில் வெளிப்பட்ட யானையைக் கிழித்துக் கொன்று, அதன் தோலைப் போர்த்திக் கொண்ட கஜ ஸம் ஹார மூர்த்தி,, நாகை திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது, நாகை திருக்கடவூர் - காலனைக் காலால் உதைத்தது.
- சமண மதத்தில் தீராத வயிற்று வலியை,  திலகவதியார் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, அவரது தம்பி மருள் நீக்கியாருக்குத் (அப்பர், நாவுக்கரசர், வாகீசர்) தன் திருநீற்றால் தீர்த்து ஆட்கொண்ட ஸ்தலம்.

10. திண்டிவனம்: திந்திரி வனம் (புளியங்காடு) திரிந்து திண்டிவனம் என்றாயிற்று,  திந்திரிணீஶ்வரர்,

இந்த மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோவில் மட்டும் நைட் 8.15 க்குப் போனோம், பூட்டி இருந்துது,  அடுத்த டூர்ல காலை 6.30 க்குப் போனோம், பூட்டி இருக்கு,  பார்ப்போம்  எப்ப தரிசனம் கிடைக்கறதுன்னு.  மீண்டும் சந்திப்போம்.