மன்னார்குடில முகுந்தன், முகுந்தன்னு ஒரு நண்பர். அவருக்கு கல்யாணம் 04.07.2008 வெள்ளிக்கிழமை அன்னிக்கு. அவன் பேட்ச் M.C.A பசங்களுக்கு 'பஞ்ச பாண்டவர்கள்' னு பேரு. (ஏன்னா அவிங்க க்ளாஸ்ல மொத்தமே அவ்ளோ பேர்தான் !!). அவரு கல்யாணத்துக்குத்தான் மிச்ச நாலு பேரு, நான், என் மனைவி எல்லாரும் போகலாம்னு ப்ளான். இந்த பசங்களப் பத்தி ஒரு அறிமுகம்.
சுப்ரமணியன்: இவர்தான் தர்மர். திருநெல்வேலி கிட்ட அரிசி அப்பளத்துக்கு பேர் போன கல்லிடைக்குறிச்சி தான் இவர் ஊரு. ஐயர் பையன். கொஞ்சம் ஆசார சீன் போடுவார். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
கமலநாதன்: இவர்தான் பீமசேன மஹராஜா. ஸைஸும் அப்டியேதான் இருப்பார். பவர் இல்லாத போலீசு (எல்லாம் ட்ரைனிங் ஸ்கூல் போலீஸ்)! தண்ணி இல்லாத ஆறு!!(பாலாறு)! ராஜா இல்லாத கோட்டை ! இப்டி ரொம்ப புகழ் பெற்ற வேலூர் கிட்ட இருக்கற பள்ளிகொண்டா இந்த ராசாவோட ஊர். அந்த ஊர்ல இருக்கற பள்ளி கொண்ட பெருமாள் ரொம்ப ஃபேமஸ். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
கார்த்தி: இவர் அர்ஜுனன். ராமேஸ்வரத்த சேந்தவர். இப்போ மெட்ராஸ்ல இருக்கார்.
முகுந்த்: நகுலன். இவுருக்குதான் இப்போ கல்யாணம். இப்போ பெங்களூர்ல இருக்கார்.
வினோத் சர்மா: ஸஹதேவன். கல்கத்தாவ சேந்தவர். இப்போ பெங்களூர்ல இருக்கார்.
நான் இவுங்களுக்கெல்லாம் ஒண்ணு, ரெண்டு பாடத்துக்கு வாத்யார் M.C.A ல.
வடுவூர் ராமர்
ஆலங்குடி குரு
திருவாரூர் த்யாகேஸர்
நாகப்பட்டிணம் சௌந்தரராஜப் பெருமாள்
சிக்கல் சிங்காரவேலர்
மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி
திருபுவனம் ஸரபர்
திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமி
கோவிந்தபுரம் போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ப்ருந்தாவனம்
ஒப்பிலியப்பன் கோவில்
திருநாகேஸ்வரம்
நாச்சியார் கோவில்
திருச்சேறை ருணவிமோசன ஸ்வாமி
பட்டீஸ்வரம் துர்கை
திருவலஞ்சுழி பிள்ளையார்
தாராஸுரம்
தஞ்சை ப்ரஹதீஸ்வரர்
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
ஸ்ரீரங்கம் ரங்கநாதப் பெருமாள்
திருப்பராய்த்துறை
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், தாயுமானவர்
- இது தான் 3 நாள்ல நாங்க பாத்துட்டு வந்த கோவில் லிஸ்ட்டு !!
இனிமே எங்க டூர் கதை:
03.07.2008 (வ்யாழக்கிழமை) நைட்டு ராக் ஃபோர்ட் எக்ஸ்ப்ரெஸ்ஸ புடிக்க ப்ளான் பண்ணினபடி நான் 7.50 க்கு ஸ்டேஷனுக்கு வந்தாச்சு. இந்த பசங்க 8.50 க்கு வந்தானுங்க. ஒழுங்கா V.L.R ல சாப்டுருக்கலாம். வெளில வஸந்த பவன் போய்ட்டு வந்ததுல ஒரு 900 ரூபா மொதல் வெடி.
நான், என் மிஸஸ், கமலு, சுப்ரி நாலு பேருக்கு தான் டிக்கெட் ரிஸர்வ் பண்ணினதே. அதுவும் RAC. கார்த்திக்கு ஓப்பன் டிக்கெட் வாங்கி, TTR கிட்ட ரிக்வெஸ்ட் பண்ணி, எக்ஸ்ட்ரா 90 ரூபா கட்டி, கடைசில (வண்டி கடைசி இல்ல !!) எல்லாருக்கும் பெர்த்து கெடச்சாச்சு. யார், யார் எங்கெங்க படுத்துக்கரதுன்னு பேசி, பிரச்ன பண்ணி, முடிவெடுத்து படுத்து ஜோரா ஒரு தூக்கத்த போட்டோம்.
காலையிளங்கதிரில் தஞ்சை காட்சி தெரியுது. பிளாட்ஃ பார்ம் வேல நடந்ததுனு இருக்கு. வெளில வந்து, கொஞ்சம் ஃபோட்டோல்லாம் எடுத்துனு (பஸ் வரலியே), மன்னார்குடில வந்து இறங்கினோம். ஒரு ஹோம்லி மண்டபம். பொண்ணோட வீட்ல யாருக்கோ அரசியல் தொடர்பு. வெளில ஒரே பேனர், கீனர்னு கலர், கலரா ஒரே அமக்களம். குளிச்சோம். மெட்ராஸ் மேன்ஷன் பழக்கம், பசங்க ரெண்டு, ரெண்டு பேரா குளிச்சாங்க. முகுந்த் பெரியப்பா ரூம் கீய தர்றதா இல்ல. எல்லாரும் மேக்-அப் பண்ணினு வர்ற வரைக்கும் கூடவே இருந்து உதவி !! பண்ணினார்.
இட்லி, சட்னி, சாம்பார், பொங்கல், கொத்ஸு, பூரிக் கெழங்கு - காலை டிஃபன் இது. பூரி கொஞ்சம் தீஞ்சு இருந்துது. நண்பர் கல்யாணம். அதுனால மொய்யும் குடுக்க முடியாது!! (இது வேற). இப்பத்தானே கல்யாணத்துலெல்லாம் பூரி, தோசையெல்லாம். நல்லா சாப்டோம். நல்லதொரு ஐயங்கார் வீட்டு கல்யாணம். ரொம்ப நாளைக்கப்பறம் ஒரு பழைய, கலாச்சாரத்து, க்ராமத்து கல்யாணம். முஹூர்த்தம் ஆயாச்சு. M. B. A கார்த்திக்கு இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம். அவரும் காசியும் வந்தார்கள், பத்திரிக்கை குடுத்தார்கள், தின்றார்கள், சென்றார்கள்.
இனிமே லஞ்ச்சுக்கு தான் மண்டபத்துல வேல. கெளம்பியாச்சு டூருக்கு. மாப்ள அண்ணா அவரோட கார எங்களுக்கு அரேஞ்ஜு பண்ணி குடுத்தார் வடுவூர் ராமர தரிசனம் பண்ணிட்டு வரச்சொல்லி. ட்ரைவர் அண்ணாவ அட்ஜஸ்ட் பண்ணி, ஆலங்குடி குரு கோவிலையும் தரிசனம் பண்ணிட்டு வந்துட்டோம். ராமர் ஸ்டைலா சாஞ்சு நின்னுண்டு, சிரிச்சபடி அஸத்தலா போஸ் குடுக்கறார். காஞ்சிபுரம் கிட்ட கோவிந்தவாடி அகரம்னு ஒரு ஊர். சமீபத்துல அங்க குரு சிலைய மாத்தியிருக்காங்க. அது ஆலங்குடிய விட நல்ல ஒசரம்.
இந்த டூர்ல ரெண்டு விஷயம்
1. குரு கோவில், சிக்கல் சிங்காரவேலர், திருபுவனம் ஸரபர், பட்டீஸ்வரம் துர்கை இப்படி எல்லா ஸ்தலங்களுமே மேக்ஸிமம் சிவஸ்தலங்கள் தான். ஆனா, கோவில் நிர்மாண லக்ஷணப்படி அமைஞ்ச ப்ராகார சன்னதிகள் பேர் வாங்கியிருக்கு.
2. எங்களோட எல்லா டூர்களுமே கொஞ்சம் ஃபாஸ்ட் தான். இருக்கற காசுல, டயத்துல நெறைய்யா எடம் கவர் பண்ணனும். அதுனால, ஒவ்வொரு எடத்துலயும் முக்யமான விஷயங்கள பாத்துட்டு வண்டீல ஏறவேண்டியதுதான். பாதி எடம் ஃபோட்டோவ பாத்து தான், ஞ்யாபகப்படுத்திக்கவேண்டியிருக்கும். கல்யாணத்துல காண்ட்ராக்ட் சாப்பாடு சாப்டா மாதிரி. ஒரு கோவில் மெனு பாத்தா மாதிரி இருக்கும்.
திரும்பி மன்னார்குடி வந்து தம்பதிகளோட ஒக்காந்து (நிஜமான மாப்ள பெஞ்ச்), லஞ்ச் சாப்டோம். நல்ல விருந்து. உபசரிப்பு. கொஞ்ச நேரம் மாப்ள கூட இருந்துட்டு, பஸ்ல திருவாரூர் போய் சேந்தோம். த்யாகேஸர் நித்ய பிரதோஷத்துல ஒக்காந்து, நச்சுனு நாலு பாட்டு பாடினோம். அருமையான, ஸுகமான அனுபவம். மனுநீதிச் சோழன் கல் தேர், ஆழித் தேர் பாத்துட்டு, சங்கு தீர்த்தத்தையும் பாத்தோம். இந்த கொளத்துத் தீர்த்தத்த வச்சு விளக்கேத்தி, நமிநந்தி அடிகள் ஜைனத்துக்கு எதிரா சைவத்த நிரூபிச்சதா வரலாறு. பொழுது விடிஞ்சுட்டதால பூதங்கள் அப்பிடியே விட்டுட்டு போன கட்டிட வேலைகளையும் பாத்தோம். இந்த மாதிரி இடங்கல்லேந்து எடுத்துண்டு போன தூண்கள், பகுதிகளை வெச்சுதான் VGP கோல்டன் பீச் உண்டாச்சு. இந்த கோவில்ல நெறையா தேவர்கள், ரிஷிகள் வழிபட்ட சிவ சன்னதிகள் நெறைய்யா இருக்கு. கார்த்தி மாங்கா மடையன் காணாமப் போய், கெடச்சான், முக்கால் மணி நேரம் வேஸ்ட் ஆச்சு.
அங்கேந்து பஸ்ஸுல நாகப்பட்டிணம் போய் சௌந்தரராஜப்பெருமாள், பள்ளிகொண்ட பெருமாள்லாம் தரிசனம் ஆச்சு. இந்த கோவில்ல கருடனத் தவிர, கருடியும் உண்டு. நாங்க போயிருந்த அன்னிக்கு பெருமாளும், தாயாரும் கருடன், கருடில பொறப்பாடு. சூப்பர் தரிசனம். ஏற்பாடு N. J. கார்த்தியும், அவர் அப்பாவும். புளியோதரை, சக்கரப்பொங்கல் ப்ரஸாதம் சாப்டோம். இந்த பெருமாள் கைலயும் 'மாம் ஏக சரணம் வ்ரஜ' இருக்கு. ஆட்டோல வேகமாப்போயி சிக்கல் சிங்காரவேலரத் தரிசிக்கறோம். இங்க அஸுரர்கள வதைக்க, அம்மாகிட்டேந்து, முருகர் வேல் வாங்கின நாள ரொம்ப விசேஷமா சொல்றாங்க. அப்ப அங்க இருக்கற தூண், செவுரு, முருகர் சிலை எல்லாம் ரெண்டு, மூணு மணி நேரத்துக்கு வேர்க்குமாம். நைட்டு 1.30 மணிக்கு மண்டபத்துக்கு வந்து சேந்தோம். பசிக்கு பழமும், கல்கண்டு பாலும் மன்னார்குடி பஸ் ஸ்டாண்ட்ல வாங்கி சாப்டோம். காலம்பர சுப்ரி வெற்றிகரமா பெரியப்பாகிட்டேந்து சாவிய வாங்கிட்டு வந்தார். 5.7.2008 சனிகெழம காலைல ஆறு மணிக்கு மண்டபத்துலேந்து கெளம்பி, மாப்ள வீட்ல பக்ஷணம், வேஷ்டி, பொடவ வச்சு குடுத்தா. வாங்கிண்டோம். மன்னார்குடி கொளத்துக்கு பேரு ஹரித்வா நதின்னு சொல்றாங்க. காவேரி தண்ணி உள்ள வர்றதுக்கும், வெளில போறதுக்கும் அந்த கொளத்துல ஏற்பாடு இருக்கறதால நதின்னு சொல்றாங்க. அதன் கரைல மாப்ளைக்கு இன்னொரு வீடு இருக்கு. கொளத்துல குளிச்சுட்டு, அந்த வீட்ல ட்ரெஸ் சேஞ் பண்ணிண்டு, ராஜகோபாலஸ்வாமிய தரிசனம் பண்ணி, கொழந்த சந்தான கோபாலர் விக்ரஹத்த கைல வாங்கி, கொழந்த வரம் வேண்டி பூஜ பண்றதுக்கு மாப்ள வீட்ல ஏற்பாடு பண்ணியிருந்தாங்க.
இந்த சுப்ரி பையன் சொன்னத கேட்டு அந்த கொளத்துல இருக்கற நடு மண்டபத்த நீச்சலடிச்சு ரீச் பண்ணலாம்னு குதிச்சாச்சு. நல்ல, பெரிய செவ்வகமான கொளம். வேற ஒரு உள்ளூர் பயலும் நீச்சலடிச்சு பாக்கக் காணோம். சுப்ரி முக்காவாசி க்ராஸ் பண்ணின ஒடனே, டயர்டு ஆய்ட்டாரு. நான் மண்டபத்த புடிச்சுடுவேன். ஆனா வேற யாருக்கும் உதவி பண்ற நிலைமைல நானும் இல்ல. நீச்சல நிறுத்திட்டு, சுப்ரிய தண்ணி குடிக்காத, மூஞ்சில தண்ணி படறா மாதிரி நீச்சல் அடிக்காத, இப்டி சில ஐடியா குடுத்து ஒரு வழியா மண்டபத்த புடிச்சு ஏறி, ஒக்காந்துட்டோம். திரும்பி போக, இப்போதைக்கு தெம்பு இல்லேங்கரதுல ஐயா ரொம்ப தெளிவா இருந்தார். அது மண்டபம் இல்ல. கர்பக்ரஹம், அர்த்த மண்டபம், ராஜகோபுரம், ஒத்த ப்ராஹாரத்தோட இருக்கற ஒரு முழுக் கோவில். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தோம். அர்த்த மண்டபத்துல ஏற்கனவே அந்த எடத்துக்கு போயிருந்த வீரர்களோட கை வண்ணக் கருத்துக்களையும் பாத்தோம். கரைல இருக்கற பெடல் போட்ட எடுத்துண்டு வர சொல்லலாமா, எந்த கரைய பாத்து நீச்சல் அடிக்கலாம், என்ன டெக்னிக்க பயன்படுத்தி எனர்ஜிய மிச்சப்படுத்தலாம், இப்டி பல யோசனைகள். மண்டைல நெறையா நக்ஷத்ரங்கள்!! குதிச்சு தண்ணிக்குள்ளேயே கொஞ்ச தூரத்த க்ராஸ் பண்ணனும், அப்பறம் கொஞ்ச தூரத்த மல்லாக்க நீச்சலடிச்சு க்ராஸ் பண்ணலாம், மூஞ்சில தண்ணி படாம, வாயத் தொறக்காம கொஞ்ச தூரம், தூரம் கம்மியா இருக்கற கரைய நோக்கி ஆரம்பிக்கலாம் , இதெல்லாம் எங்களோட திட்டங்கள் சுப்ரிக்கு. கொஞ்ச தூரத்த தண்ணிக்குள்ளேயே க்ராஸ் பண்றேன்னு ஐயா குதிச்சாரு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் எழுந்தாரு, ஆனா அதே எடத்துலேயே!! ஆண்டவா!! அந்த மடையன நாலு திட்டு திட்டிட்டு, அண்ணாந்து நீச்சலடிக்க சொல்லிட்டு நானும் குதிச்சேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அவனக் காணோம். ஐயா அண்ணாந்து படுத்துனு திசை தெரியாம, ரெண்டு பக்கத்து கரையையும் உட்டுட்டு, ரெண்டு கரை சேர்ற மூளைய நோக்கி நீச்சலடிச்சுனுருக்கார். அவன் மூஞ்சில தண்ணி அடிச்சு அவன கரை எங்க இருக்கு, நீ எங்க போயினுருக்கன்னு பாருன்னு திட்டினேன். பாத்த ஒடனே, அவரு கடைசி ஆசையெல்லாம் ஞாபகப்படுத்திண்டாரு. கொஞ்சம் பயம் ஜாஸ்தியாயாச்சு. கொஞ்ச நேரத்துல படியத் தொட்டுட்டோம். திருநெல்வேலியிலிருந்து ஒரு குற்றாலீஸ்வரன். கார்த்தி தண்ணீலையே படல. தண்ணி கிட்ட இருக்கற படியில பள்ளிகொண்ட பெருமாள் மாதிரி படுத்துண்டு, ஒரு கையால தண்ணிய வாரி, வாரி தன் மேல எறச்சிண்டே, குளிச்சு முடிச்சுட்டாரு. ட்ரெஸ் மாத்திண்டு, கோவிலுக்கு போயி, தரிசனம் பண்ணி முடிச்சோம். சந்தான கோபாலர் விக்ரஹம் நல்ல வெயிட்டு. காலஞ்சென்ற ஸ்ரீ. பாலசுப்ரமணியன் வருஷக்கணக்குல ஒழச்சு, ப்ராஹார செவுர்ல ராமாயண, பாரத காட்சிகள சித்திரமா தீட்டியிருக்கார்.
அடுத்ததா, கம்ப்யூட்டர் இஞ்சிநீயரிங் படிக்கற கும்பகோணம் சிவராமன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி, ஒரு கார் ஏற்பாடு பண்ணி, அவர் தம்பியையும் எங்களோட வந்து கும்பகோணம் கோவில்களையெல்லாம் சுத்திக் காமிக்க உதவி கேட்டோம். சிவராமன் அப்பா வி.ஏ.ஓ வா இருக்கார். கும்பேஸ்வரர் மற்றும் சில பெரிய கோவில்ல எல்லாம் அவங்க பரம்பர, பரம்பரையா பூஜ பண்றவங்க. நாங்க ஃபோன் பண்ணினபோது வீட்ல பூஜ பண்ணிண்டு இருந்தார். சிவராமன் தம்பிக்கும் ஜொரம். சிவராம அம்மா எங்கள வீட்டுக்கு வரச்சொல்லி மோரு, தட்டை, காஃபி -னு ஒரே ஏற்பாடு. எனக்கும், என் மிஸஸுக்கும் ட்ரெஸ் வச்சுக் குடுத்தா. சிவராம அப்பா ரெண்டு, மூணு ஃபோன் பண்ணி, ஒரு அம்பாசிடர் காரும், கணேசன் -னு ஒரு நல்ல ட்ரைவரையும் ஏற்பாடு பண்ணி கொடுத்தார். 11 மணிக்கு வலங்கைமான்லேந்து அடுத்த டூருக்கு நாங்க கெளம்பறோம்.
திருபுவனம் சரபர பாத்துட்டு, திருவிடைமருதூருக்கு போய் சேந்தோம். மஹாலிங்க ஸ்வாமிய தரிசனம் பண்ணினோம். இந்த கோவில், மூணு மருதூர்கள்ல இடை மருதூர். பட்டினத்தார், பத்ரகிரியார், 'சத்யம் அத்வைதம்', பெரிய சுதை நந்தி, சோழன் ப்ரம்மஹத்தி, இவைகள் சம்பந்தபட்டது. சதுர்வேத பாடசாலை இன்னிக்கும் இங்க நடந்துண்டு இருக்கு. அங்கேந்து
போதேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ப்ருந்தாவனம் போய் சேந்தோம். கட்டிட வேல நடந்துண்டு இருக்கு. வரத ஆஞ்சநேயர் தரிசனம் பண்ணி, தயிர் சாதம் ப்ரஸாதம் கெடச்சுது. ராம், ராம் சொல்லி சாப்டுட்டு ஒப்பிலியப்பன், திருநாகேஸ்வரம் கோவில் ரெண்டும் நடை சாத்தியாச்சு. சரின்னு கும்பகோணம் போயி (வழில சாரங்கபாணி, கும்பேஸ்வரர் கோபுர தரிசனங்கள்), ஐடியா மணி அம்புலி உபயத்துல ஒரு பாக்கெட் ஏழு ரூபான்னு கலந்த சாதம், ஸ்நாக்ஸ் வாங்கிண்டு, ட்ரைவர் அண்ணா "தாராஸுரம் கோவில சுத்தி புல்வெளி, நிழல் இருக்கும், நிம்மதியா சாப்டலாம்" னு சொன்னத கேட்டு அங்க போயி, சாப்டோம். 4 மணிக்கு கோவில் திறக்கும் போது ஒப்பிலியப்பன் கோவில்ல நாங்க தான் மொதல் தரிசனம். அங்கேந்து திருநாகேஸ்வரம் ராஹு தரிசனம். சுப்ரி சாயங்கால அனுஷ்டானத்த அந்த கோவில் கொளத்துல முடிச்சார்.
அப்பறம் நாச்சியார் கோவில் கல் கருடன் (எண்ணைக்காப்பு சாத்தியிருந்தது) , திருச்சேறை ருண விமோசனர், பட்டீஸ்வரம் துர்கை தரிசனங்கள் ஆச்சு. அங்க எங்க அண்ணாக்கு நால்ரை கிலோ வெய்ட்ல பெண் கொழந்தை பொறந்துருக்கறதா தகவல் வந்துது. எல்லாருக்கும் வெங்காய பக்கோடா ட்ரீட். இனிமே எல்லா கோயில்கள்லையும் பசங்க தான் தரிசனம். எங்களுக்கு கொழந்த பொறந்த தீட்டு. பசங்க கடல்நொரைல பண்ணின திருவலஞ்சுழி விநாயகர், தாராஸுரம் ரெண்டையும் முடிச்சிண்டு, தஞ்சை பெரிய கோவிலையும் பாத்தாங்க. அங்க டின்னர் ட்ரீட் சர்மாஜி குடுத்தார். தலையாட்டி பொம்மை வாங்கினோம். நாராயண மூர்த்தி ட்ராவல்ஸ் பஸ்ல கார்த்தி மெட்ராஸ் கெளம்பினார். ட்ரைவர் அண்ணா எங்களோட வேகமான தரிசனங்களையும், வழில நாங்க பேசிண்டு வந்த விஷயங்களையும் பாத்து ரொம்ப சந்தொஷமாயிட்டார். பசங்க தஞ்சாவூர் தரிசனம் போயிருந்த போது, என்கிட்டயும், என் மனைவிகிட்டயும் ரொம்ப நேரம் பேசிண்டு இருந்தார்.
பொன்னையா க்ரூப் கல்வி நிறுவனங்கள், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், REC, நான் படிச்ச உருமு தனலக்ஷ்மி காலேஜ், SIT, BHEL, திருவெறும்பூர் கோவில், பால் பண்ணை ரவுண்டானா, காந்தி மார்கெட், சத்ரம் பஸ் ஸ்டாண்ட், ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை கோவில்களோட இரவொளிக்காட்சிகள், குடமுருட்டி பாலம் இதையெல்லாம் காம்சிண்டு கம்பரசம்பேட்டை வந்து சேந்தோம். எங்க ஊர் காவேரி தீர்த்தத்த தலைல தெளிச்சுண்டு, குடிச்சுட்டு நைட்டு ஒரு மணிக்கு வீடு வந்து சேந்தோம் (அப்பாடா). ட்ரைவர் அண்ணாக்கு காச குடுத்து, நன்றி சொல்லி அனுப்சிட்டு, உள்ள வந்து, மறுநாள் திருச்சில பாக்கவேண்டிய இடங்களயும், வழி, நேரங்களையும் முடிவு பண்ணினோம். எங்க வீட்டு பழைய ப்ளாக் அண்டு வொயிட் புகைப்படங்கள (பழைய ஒடஞ்ச க்ராமத்து வீடு, எங்க குடும்பத்து ஆளுங்க) இஷ்டமில்லாம டயர்டா பாத்துட்டு பசங்க தூங்கிட்டாங்க.
காலம்பற திருவானைக்காவல், ஸ்ரீரங்கம் தரிசனம் பண்ணினாங்க. திருச்சிலேந்து பெங்களூருக்கு எங்க வீட்ல ஒழுங்கா சர்மாஜீக்கு டிக்கெட் ரிஸர்வ் பண்ணல. நானும், கணேஷ் சித்தப்பாவும் ஜங்க்ஷன் பஸ் ஸ்டாண்ட சுத்தி இருக்கற எல்லா ப்ரைவேட் பஸ்லயும் ட்ரை பண்ணினோம். ரிசல்ட் ஜீரோ. பாவம் சர்மாஜீ, உடனே கட் ஜர்னிக்கு கெளம்பிப்போயிட்டார். கமலும், சுப்ரமணியும் திருப்பராய்த்துறை, மலைக்கோட்டையை முடிச்சிண்டு வீடு வந்து சேந்தாங்க.
நைட்டு 1.30 முத்து நகர் எக்ஸ்ப்ரஸ புடிக்கத் தயாரா பத்து மணிக்கே திருச்சி ஜங்க்ஷன் -கு வந்துட்டோம். ட்ரைன்லயும் கரெக்ட் பொட்டிய பாத்து ஏறினோம். ஆனா எங்க எடத்துல வேற ஆளுங்க படுத்துனு இருந்தாங்க. அவங்க TTR செக் பண்ணின டிக்கெட்டையும் காமிச்சாங்க. நாங்களும் TTR கிட்ட போனோம். அவர் டீ குடிச்சிண்டே கூலா, "இது நேத்தி டிக்கெட்" -னுட்டார். தூக்கு மூட்டைய, நாளைக்கு ஆபீசு. ஓடு பஸ் ஸ்டாண்டுக்கு. கோவில், டூர், சாமி எல்லாம் மறந்து போச்சு. சிரிப்பு ஒரு பக்கம், அவமானம் ஒரு பக்கம். ஒருத்தர ஒருத்தர் ஓட்டிண்டும், நக்கலடிச்சுண்டும், நடந்த தவறு (தப்பில்லே, தவறு, ஆமாம்) எப்டி நடந்துருக்கும்னு ஆராய்ச்சியும் பண்ணிண்டும் பஸ் ஸ்டாண்ட்ல டயத்த போக்கினோம். பஸ்ஸக்காணோம். வந்தா எடத்தக் காணோம். ஆளுக்கு ஒரு பக்கம், திருடன்-போலீஸ் மாதிரி செல் ஃபோனக் கைல வச்சிண்டு, சுத்தினு இருந்தோம். கமலு ஒரு M.G.R பஸ்ஸ (விழுப்புரம் ரெஜிஸ்ட்ரேசன்) இருட்டுல கண்டு புடிச்சு எடத்தப் போட்டு, எங்களுக்கு ஃபோன் பண்ணினாரு. 07.07.2008 காலை 10.30 மணி, தாம்பரத்துல வந்து இறங்கியாச்சு. ட்ரைன் எல்லாம் அன்னிக்கு மூணு மணி நேரம் லேட்டாம்!! கொஞ்சம் பேர் பேசிண்டு இருந்தாங்க. என் தம்பியும் அத கன்ஃபாம் பண்ணினான். எல்லாம் சிவன் செயல். ஆபீசுக்கு பெர்மிஷன் போட்டு போய்சேந்தோம்.
- மூணு நாள். இருபதுக்கும் மேற்பட்ட கோவில்கள், கல்யாண சாப்பாடு. கூத்து, கும்மாளம், கொழப்பம், கொண்டாட்டம், கேலி,....
- பசங்க தான் சீக்ரம் டயர்ட் ஆயிடறாங்க,
- நல்ல வெய்யல், தண்ணி கூசாம நெறையா எடுத்துண்டு போணும்.
- லூஸ் ட்ரெஸ்ஸா எடுத்துண்டு போகணும்.
- ஒழுங்கான டாய்லெட்ட ஒழுங்கா பயன் படுத்தணும் - கோவில் டூரு.
- பழம், ஸ்நாக்ஸ் ஒரு ஹோல் சேல் கடைல வாங்கி போட்டுக்கணும்
- ஏ. சி கார் கூட புக் பண்ணிக்கலாம். இன்னும் சில நூறுகள் தலைக்கு.
- இந்த மாதிரி யார் வீட்டு ஊரு, விசேஷம் சமயம்னா இன்னும் நல்லது. நல்ல சாப்பாடா ஓசியில கெடைக்கும்
- ஃபோட்டோ, வீடியோ நிச்சயம் எடுக்கணும்
- நம்மல மட்டும் ஃபோட்டோ எடுக்காம, உள்ளூர்ல நமக்கு ஏற்பாடு, உதவி பண்றவங்களையும் எடுக்கணும்.
- டூர் முடிஞ்சதும் உதவி பண்ணினவங்களுக்கு நல்லபடியா முடிஞ்சதையும், வந்து சேந்ததையும் சொல்லணும்.
- எட்டாந்தேதி கமல் ஃபோட்டோஸ் ரெடி பண்ணிட்டாரு. எல்லாருக்கும் அனுப்பியாச்சு. கணக்கு, வழக்கு சரிபண்ணி ஓ. கே ஆச்சு.
நிகழ்ச்சி ஏற்பாடுகள்:
- மன்னார்குடி முகுந்தன் குடும்பத்தார்
- நாகப்பட்டினம் கார்த்தி குடும்பத்தார்
- கும்பகோணம் சிவராமன் குடும்பத்தார்
பண உதவி:
- ராமேஸ்வரம், ACS, TCS புகழ் கார்த்தி
- கல்கத்தா, பெங்களூர் மைண்ட் ட்ரீ புகழ், "தாமரை இலைத் தண்ணீர்" வினோத் சர்மாஜீ
ஒளிப்பதிவு:
- "தங்கத் தாய் மாமன்" கமல் (எ) கமல்காந்த் (எ) கமலேஷ்
தொகுப்பு:
- பள்ளிகொண்டா கமல்
உதவி:
-வாத்யார் சீதாராமன்,
நிகழ்ச்சியில் உறுதுணை:
- நெல்லையார் சுப்ரி என்கிற சுப்ரமணி அனந்தராம சுப்ரமணிய அனுஷ்டான ஐயர்
Dec 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Nice writeup. It was a nice reading of all your postings. Keep blogging man..
Kalakal write-up, Officer :)
Got your blog on a random search.
--S.K.Ramachandran, GPACS
Post a Comment