Jun 27, 2017

ராமேஸ்வரம் டூர்

புதுக்கோட்டை கணபதிக்குக் கல்யாணம் ஜூன், 6, 2016 திங்கட்கிழமை, புதுக்கோட்டைல ஒரு பெரிய ஏசி கல்யாண மண்டபத்துல.  நல்ல பையன், மெக்கானிகல் இன்ஜினியர்,  கொஞ்சம் ரூல்ஸ், ப்ராஸஸ் ஃபாலோ பண்றவன்.  மெஜாரிடி பசங்க போல ஐ.டி ஃபீல்டுக்குத் தாவாம, அவன் ஃபீல்டுலயேதான் இருப்பேன்னு சாதிச்சும் காமிச்சவன்.  அவங்க வீட்ல அம்மா, தங்கைன்னு எல்லாருக்கும் எங்க மேல ஒரு ப்ரியம்.  இந்துக் குடும்பங்கள்ல, மெயினா ப்ராமின் குடும்பங்கள்ல எந்த ஒரு முக்ய கார்யத்துக்கும் முன்னாடி, அவங்க குடும்பத்துல சுமங்கலியா இறைவனடி சேர்ந்தவங்கள நினைச்சு ரொம்ப ஆசாரமா ஒரு ஃபங்க்ஷன் நடத்துவாங்க.  சொந்தத்துல இல்லாத ஒரு சுமங்கலி, ஒரு கன்யா குழந்தைய (பெரியவளாகாத பெண் குழந்தை) அழைச்சு, அவங்களுக்கு ட்ரெஸ்ஸு, மஞ்சள், மருதாணி, எண்ணெய்க் குளியல்னு ஏற்பாடு பண்ணி, அம்ருதமா ஒரு கல்யாண சாப்பாடும் செஞ்சு போட்டு மரியாதை பண்ணுவாங்க.  அந்த கௌரவத்துக்கு என் மனைவியும், பொண்ணும் செலக்ட் ஆகி இருந்தாங்க.  கூடவே எனக்கும் அட்டெண்டர் பாஸ்!!. 3 ஜூன் 2016, வெள்ளிக் கிழமை அந்த சுமங்கலி ப்ரார்த்தனை புதுக்கோட்டை அவங்க வீட்ல.

02 ஜூன் 2016, வ்யாழக்கிழமை, பொண்ணுக்கு இடது கை கொஞ்சம் ஃப்ராக்சர் மாவு கட்டு போட்டு இப்பதான் ரெண்டு வாரம் ஆகுது,  திருப்பி இன்னிக்கு செக்கப் க்குப் போகணும்.  இன்னும் ஒரு வாரம் இருக்கட்டும்னு சொல்லிட்டார் டாக்டர்,  பரவாயில்லன்னு கெளம்பியாச்சு படுத்துனு போற ஏசி பஸ்ல, நல்லா ஃபேமிலி ரூம் மாதிரி இருக்கு.  நாங்க மூணு பேரும் படுத்துக்கலாம்.  ராம் குட்டிக் குழந்தை, இன்னும் 2 வயசு கூட ஆகல, அட்ஜஸ்ட் பண்ணிப்பான்.

03 ஜூன் 2016, வெள்ளிக்கிழமை.  காலை 6 - 7 மணி போல புதுக்கோட்டை வந்து இறங்கியாச்சு.  கணபதி வந்து அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனார்.  முக்கனிகள் உட்பட செடிகள், மரங்கள் இருக்கு, சொந்த வீடு.  நல்ல உபசரிப்பு, குளிச்சு, பூஜையெல்லாம் முடிஞ்சு சாப்டாச்சு.  நாள்னிக்கு கல்யாணம், நாளை மாலை மாப்பிள்ளை அழைப்புக்குள்ள எங்கயாவது போய்ட்டு வந்துடலாம் டேக்ஸி தேடி போனோம்.  ரெண்டு, மூணு எடத்துல விசாரிச்சு, ஒரு அம்பாஸடர் ஏசி கார் புடிச்சோம்,  ரொம்ப வருஷங்களாச்சு அம்பாஸடர்ல போயி, 10 கி.மீட்டருக்கு ஒரு லிட்டர் போடனும், ட்ரைவர் பேட்டா, டோல், எல்லாம் தனின்னு ட்ரைவர் மாமா சொல்லி பேசி ஒரு 2.30 மணிபோல மதியம் கிளம்பினோம்.  புதுக்கோட்டை வெள்ளரிப் பிஞ்சு, நுங்கு ஃபேமஸ்.  இப்பதான் சாப்டிருந்தா, நுங்கு தோலோட சாப்டா வயித்துப் புண் ஆறும், உடம்புக்கு நல்லதுன்னு சொல்லி ரெண்ட திணிக்க, ஏசி கார்லயே வாந்தி என் பொண்ணு.  நல்லா வெச்சிருந்தார் கார, டர்க்கி டவல் போட்டு,   ஆனா கோவிச்சுக்கல ட்ரைவர் அண்ணா,  40-50 வயதிருக்கும், அவரும் கல்யாணம், குழந்தைகள்னு நல்லா பக்குவப்பட்டவர்,  தண்ணி எடுத்து, குழந்தைய க்ளீன் பண்ண ஹெல்ப் பண்ணினார்.  எனக்கும் மனைவி கிட்ட நல்லா திட்டு விழுந்துது.  கச்சேரி முடிஞ்சு கிளம்பினோம்.

1. குன்னக்குடி: குன்றக்குடி ஆறுமுகன் வள்ளி, தெய்வானையோடு இருக்கிறார்.  சின்ன மலை தான்.  ஓடிப்போய் பாத்துட்டு வந்தோம்.

2. பிள்ளையார்ப் பட்டி பிள்ளையார்: குன்றக்குடிலேந்து ஒரு 5 கி.மீட்டர்ல மலையக் குடைஞ்சு இந்த உட்கார்ந்திருக்கற பிள்ளையார 6 அடி உயரத்துக்கு செஞ்சிருக்காங்க.

3. திருத்தளி நாதர், திருப்பத்தூர் - பாடல் பெற்ற ஸ்தலம், தரிசனம் முடித்தோம்.

4. திருவாடானை:  பாடல் பெற்ற ஆதிரத்னேஶ்வரர், போன தடவை கும்பாஷேகம் நடந்த போது, வேத பாராயணத்துக்கு நானும் போயிருந்தேன்.  இப்போது மீண்டும் குடும்பத்தோடு,  நாங்க உள்ள ஓடிப் போய் பள்ளியறை தரிசனம் ஆனதும், இரவு கோவில் நடை  சாத்தப்பட்டது.

5. திருவெற்றியூர்:  இது சென்னைல இருக்கற திருவொற்றியூரில்லை.  இது திருவெற்றியூர்.  பக்கத்துல இருக்கற குளத்தூர் க்ராமம் தான் எங்க அம்மாவோட பூர்வீகம்,  அவங்க ஒரு பெரிய ஜமீன்தார் குடும்பத்துப் பெண்.  க்ராமம் கணக்குல நிலங்கள், இவங்க பொறந்த வருஷம் மழை பொழிஞ்சு, விளைச்சல் அமோகமா இருந்ததாலயே இவங்களுக்கு தான்ய லக்ஷ்மி ன்னு ஒரு பெயர்.  சின்னக் குழந்தையா இருக்கும் போதே இந்த ஊரைக் காலி பண்ணி சென்னை, அங்க, இங்கன்னு மொத்த குடும்பமும் பிரிஞ்சுப் போச்சு.  40-50 வருஷமா பாக்காம விட்டு, இப்ப ஒரிஜினல் பத்திரங்கள் மட்டும் இன்னமும் தாத்தா R.S. மஹாலிங்கம் பேர்ல இருக்கு,   ஒன்னும் முறையா பதில்கள் இல்ல குத்தகைக் காரங்க கிட்டேந்து.  அவங்களுக்கு ஏப்பம், சொந்தக் காரங்களுக்கு ஏக்கம், மாமா ஒரு கோவில்ல வேலை பாத்திட்டு இருக்கார், இவங்க கிட்டேந்து எதாவது கிடைக்குமாங்கறது ஆண்டவன் கட்டளை.

சரி, கோவிலப் பத்திப் பாப்போம்.  பாடல் பெற்ற ஸ்தலம், மொத்த சிவகங்கைச் சீமைக்கும் பாகம் பிரியாள் கோவில்னா ரொம்ப ப்ரசித்தம்,   மஹாபலியக் காலால மிதிச்சதால மஹாவிஷ்ணுவுக்கு கால்ல புற்று நோய் வந்தது,  பல கோவில்கள்ல சிவபூஜை செஞ்சு, கடைசியா இங்க வந்து வாசுகி தீர்த்தம் ங்கற கோவிலுக்கு எதிர்க்க இருக்கற குளத்துல குளிச்சு, பழம்புற்று நாதரைப் பூஜை பண்ணி, தன் நோயைப் போக்கிக் கொண்டார்.

அம்பாள் கோவில் நடை சாத்தியாச்சு, ஏற்கனவே செஞ்சிருந்த ஏற்பாட்டின் படி, கோவில் குருக்கள், மணிகண்டன் அண்ணா ஆத்துல ராத்திரி சாப்டுட்டுத் தூங்கினோம்,  பசங்க அண்ணா பசங்களோட நல்ல விளையாட்டு.  பூரணமா சைவ ஆகம முறைகள, முறையா படிச்சவர்.  சித்திரை மாசம் நடக்கற 10 நாள் கோவில் உற்சவங்களும் எங்க அம்மா வழி தாத்தா, அவங்க குடும்பமும் தான் பண்ணிட்டு இருந்தாங்க.    ரொம்ப பழக்கம் அதனால.  நைட்டு தூக்கம் மொட்டை மாடில.

04 ஜூன் 2016, சனிக் கிழமை,  காலை 5 மணிக்கு எழுந்து வாசுகி தீர்த்தத்துல ஒரு நீச்சல் குளியல், பாகம்பிரியாள், வல்மீகனாதர் (பழம்புற்று நாதர்) தரிசனம்.  புறப்பாடு.

6. உப்பூர் வெயிலுகந்த வினாயகர்:  தக்ஷ யாகத்தில் கலந்து கொண்டதற்குப் பரிகாரமாக, ஸூர்யன் பூஜை செய்த வினாயகர்.  ரோடு மேலயே இருக்கு, மூலஸ்தானத்துக்கு கூரை கிடையாது, வெயில் மேலே படும்படி அமைந்திருக்கிறது.

7. தேவிப்பட்டிணம்:  இந்த லிஸ்ட்ல வர்ற கோவில்கள் நிறையா ராமாயணத்தோடு தொடர்புடையவை,  ஸீதையைத் தேடிச் செல்லும் வழியில் ராமரால் பூஜை செய்யப்பட்டவை.  இந்த ஊரில் நவக்ரஹங்களும் கடல்ல மூழ்கி இருக்கு,   ட்ரெஸ்ஸு தண்ணில நனையாம சுத்தி வர ப்ளாட்ஃபார்ம் போட்டு இருக்காங்க, இறங்கி, கடல் தண்ணியிலும் ப்ரதக்ஷிணம் செய்து வழிபடலாம்.  நாங்க கடல்ல இறங்கி ப்ரதக்ஷிணம் செய்தோம்,  காலை சிற்றுண்டிய அங்கயே முடிச்சிட்டு கிளம்பினோம்.

8. உத்திரகோச மங்கை:  இங்க அம்பாளுக்கு ஆடிக்காமிச்ச தன் நடனத்தை தான் பின்னர் பதஞ்சலி முதலானோருக்கு சிதம்பரத்துல சிவபெருமான் ஆடிக் காண்பித்தார்.
- பெரிய கோவில்
- ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் தனித்தனி ராஜ கோபுரங்கள்.
- ஆறடி உயரத்துக்கு ஒரு மரகத நடராஜர் இங்க இருக்கார்.  வருஷம் முழுக்கப் பாதுகாப்புக் கருதி, சந்தனக் காப்பிட்டு வெச்சிருக்காங்க.   மார்கழி மாசம் திருவாதிரை நக்ஷத்ரம் அன்னிக்கு ஒரு நாள் மட்டும் அலங்காரத்தக் கலைச்சு, தடபுடலா அபிஷேகம், பூஜையெல்லாம் முடிச்சு, திருப்பியும் சந்தனக் காப்புல வெச்சிடுவாங்க.  நாங்க பார்க்கும் போது, கொஞ்சம் ப்ரமிச்சுப் போயிட்டோம்.
- அம்பாள் (மங்கை) கேட்ட கேள்விகளுக்குப் பதிலாக (உத்தரம்) வேத ரஹஸ்யங்களை (கோசம்) இறைவன் எடுத்து விளக்கிய தலமாதலால், உத்திரகோசமங்கை என்று ஊர்.
- இராமனாதபுரத்திலிருந்து 10 கி.மீ.

9. திருப்புல்லானி:   ராமர் சீதையைத் தேடிச் செல்லும் போது, சமுத்ரம் வழி விட வேண்டி, இங்கு தர்ப்பைப் புற்களைப் பரப்பி அதிலேயே நாட்கணக்கில் வாசம் செய்தார்.  இங்குள்ள ஜகன்னாதப் பெருமாளை வழிபட்டே, பின் புறப்பட்டார்.

மணி மதியம் 2.00, சரியான டயர்டு, காலைலேந்து சுத்தி, ராமனாதபுரத்துல ஒரு ஹோட்டல்ல சாப்டுட்டு, ராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டோம்.  வழில பாம்பன் பாலத்துல கொஞ்ச நேரம் வண்டிய நிறுத்தி, ரயில்வே பாலம், கடல் எல்லாத்தையும் வேடிக்கை பாத்துட்டு, ஃபோட்டோ எடுத்துண்டு கிளம்பினோம்,  பாலம் தாண்டி கொஞ்ச தூரத்துல ஒரு பார்க் வெச்சிருக்காங்க உருப்படாத, ஒடஞ்சு போன பொம்மை, சறுக்கு மரம் எல்லாம் வெச்சு, அங்க கொஞ்ச நேரம் வேஸ்ட் பண்ணிட்டு, எதிர்க் கரைல கண்ணாடி போட்டுல கூட்டிட்டுப் போயி, பவளப்பாறை காமிக்கறோம்னாங்க.  800 ₹ குடுத்து அதையும் போய் பாத்துட்டு வந்தோம்.  பவளப்பாறை இருக்கற கடல் கொஞ்சம் கூட அலையே இல்ல, அவ்ளோ அமைதி, எதிர்க் கடல் சரியான ஆக்ரோஷம்.

10. ராமேஸ்வரம் ராமனாதரைத் தரிசனம் செஞ்சிட்டு, தனுஷ்கோடிக்கு வேன்ல போனோம்.  ஒருத்தருக்கு 150₹.  ரெண்டு கடல் சேர்ற எடத்துக்கெல்லாம் கூட்டிட்டுப் போகல, முழுக்க அமைதியா இருக்கற கடல் பக்கமாவே தான் பயணம்,  நம்ம தான் பயந்து, பயந்து போறோம், சபிக்கப்பட்ட ஊர் மாதிரி இன்னும் ஒரு அமைதி,  ட்ரைவர் அசால்டா ஓட்டிட்டுப் போறாரு.  ரெண்டு கடலுக்கும் நடுப்பற ஒசத்தி ரோடு போடற வேலை நடந்திட்டு இருக்கு,  அடுத்த தடவையெல்லாம் வண்டிய உள்ள விட்டுடுவாங்கன்னு நினைக்கறேன்.  இப்பயே டூ வீலர் ஓட்டிட்டுப் பசங்க போய்டறாங்க.  ப்ளான் பண்ணி ரிலாக்ஸா போயிருந்தா இன்னும் கொஞ்ச நேரம் அந்த ஆக்ரோஷ கடல, இங்கயோ இல்ல அந்த பாம்பன் பாலத்துக்கிட்டயோ என்ஜாய் பண்ணி அனுபவிக்கலாம்.  மாலை நேரத்துக்கு ரெண்டு இடமுமே சூப்பரா இருக்கு.  டின்னர் ஒரு கடைல சாப்டுட்டு, ராமேஸ்வரம் கார்த்தின்னு ஒரு நண்பர், என்னோட எம்.சி.ஏ ஸ்டூடெண்ட்.  இப்ப சென்னைல ஹெச். பி ல டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டரா இருக்கார்.  அவர் வீட்டுல போய்த் தங்கினோம்.  புள்ளையோட சார் வரார்னு அவங்க அம்மா, அண்ணி ரெண்டு பேரும் ரொம்ப உபசரிப்பு,  சாப்டு வந்திட்டோம்னு ஒரு சொம்பு முழுக்க பால் குடுத்திட்டாங்க.  எங்களுக்கு ஏசி ரூம் குடுத்திட்டு, அவங்க ஹால்லயே படுத்திட்டாங்க.  கார்லயே அடைஞ்சிருந்தாங்களா, பசங்க ரெண்டும் அவங்களோட சரியான ஆட்டம், வாய்க்கு வாய் வம்பு, டி.வி, முடிச்சி ராத்திரி 12 மணிக்குத் தான் தூங்கினோம்.

05 ஜூன் 2016, ஞாயிறு - காலை 5 மணிக்குப் போயிருந்தா ஸ்படிக லிங்க பூஜை பாத்து இருக்கலாம், தூங்கிட்டோம்.  ஏழு மணி போல எழுந்து கோவிலுக்குள்ள இருக்கற 23 தீர்த்தங்கள்ல குளிக்கலாம், பசங்களுக்கும் ஜாலியா இருக்கும்னு பாத்தா, டிக்கெட் கௌண்ட்டர்ல அவ்ளோ கும்பல், 25₹ ஒருத்தருக்கு, கைல கட்டிக்கணும் டிக்கெட்ட.  குழந்தைகள வெச்சிட்டு அந்த ஞாயிற்றுக் கிழமை கும்பல்ல அங்க போயி, டிக்கெட் வாங்க முடியும்னு தோணல,  ஏற்கனவே டயர்டா இருக்காங்க,  இந்திய முறைப்படி ஒருத்தருக்கு 100 ₹ லஞ்சம் குடுத்து, ப்ரோக்கர் கிட்ட வாங்கினோம்,  நிறையா பேர் ஒளிவு, மறைவின்றி எங்கும் நீக்கமற இருக்காங்க அப்படி,   கைல கட்டிட்டு, குழந்தைகள இறுக்கமா புடிச்சிட்டு, க்யூவுல போனோம்.  முதல் 2 கிணத்துல தண்ணி இல்லன்னு மூடி வெச்சிருக்காங்க, கடைசி 3-4 பக்கத்துலயே போக முடியாத அளவு கும்பல்.  மிச்ச கிணத்துல எல்லாம் அந்த ப்ரோக்கர்ஸ் (தண்ணி எடுத்து வீசறதும் அவங்க தான்)  வந்து, தண்ணி எடுத்து வீசறாங்க பளிச், பளிச்னு, ஓடி, ஓடி குளிச்ச, குளிக்காத கிணறுன்னு 23க்கும் மேல திரும்ப, திரும்ப போய்க் குளிச்சோம்.  நான் பொண்ணத் தூக்கிண்டேன், மனைவி முடியாததோட குழந்தையத் தூக்கிண்டா.  வழியெல்லாம் போர்டு வெச்சிருக்காங்க அடுத்தடுத்த கிணறோட நம்பர் போட்டு.  ம்ஹூம்,  காசிக்குப் போயிட்டு வந்தவங்க, போகப் போறவங்கன்னு மொத்தக் கும்பலும் அங்க தான் இருக்கு.  சென்னை, பெங்களூர் மாதிரி சிட்டில இருந்து குழந்தைகளோட போறவங்களுக்கு இந்த 23 தீர்த்த ஸ்னானம் ஒரு விபரீத, வித்தியாசமான அனுபவம்.  ட்ரெஸ்ஸு மாத்திக்க தனித்தனி இட வசதிகள் இருக்கு,  கோவில்ல ஏதோ சாமி கட்டாயப்படுத்திக் கேட்டா மாதிரி எல்லாரும் பொதுவா ஈரத் துணியை அங்கயே போட்டுட்டுப் போய்டறாங்க.  கோவில் ஊழியர்கள் அப்பப்ப வந்து மூட்டை, மூட்டையா கட்டி இதையெல்லாத்தையும் வண்டில வெச்சி, தள்ளிட்டுப் போயி, க்ளீன் பண்ணிடறாங்க.  துணி போனா பிணி போகும்ங்கறது பழைய காலத்துலேந்து நம்பிக்கை,  வேற, வேற வேண்டுதல்களோட வராங்க,   இராமனாதர் எல்லாத்தையும் பொறுமையா, வெளையாட்டா,  ஏத்துக்கறார்,   ஈரத்தோட சாமி பாக்கலாம்னு போனா, மொத்த கும்பலும் அங்க க்யூவுல இருக்கு.  நேத்திக்கு தரிசனம் பண்ணினது போறும்னு வெளில வந்தோம்.    பொண்ணு கையில மாவு கட்டு முழுக்க ஈரமாயிருக்கு,  அக்னி தீர்த்தத்துல (கடல்) ஆரம்பிச்சு, இவ்ளோ குளியல்.  சாமி இனிமே பாத்துப்பார்னு, மொத்த மாவு கட்டையும் கத்தியால நறுக்கிப் போட்டாச்சு.  அவளும் கொஞ்சம் நிம்மதியானா.

அப்துல் கலாம் இல்லத்துக்குப் போனோம்.  சின்னூண்டு வீடு,  கீழ அவங்க குடும்பம் இருக்காங்கப் போல, மேல ரெண்டு மாடி முழுக்க அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், பரிசுகள், விருதுகள், விபரங்கள்னு வெச்சிருக்காங்க.  எல்லாம் புரியல.  ஆனாலும் அவரோட நினைவுகளோட, அவர் அடைஞ்ச உயரங்கள், சாதனைகள், உபதேசங்கள்னு எல்லாத்தையும் பாத்தோம்.

பக்கத்துல ஒரு ஆஞ்சனேயர் கோவில்ல ராமர் இலங்கைக்குப் பாலம் கட்டப் பயன்படுத்தின மிதக்கும் பாறைகள், மாதிரிக்குத் தொட்டில விட்டிருந்தாங்க.  அமுத்தி விட்டாலும் பெரிய, பெரிய பாறைகளும் முங்கி, முங்கி மீண்டும் மேலயே வந்துது.  பாத்துட்டு, திரும்ப ஊருக்குக் கெளம்பியாச்சு, மாலை மாப்பிள்ளை அழைப்பு புதுக்கோட்டைல.  வழில சீதையின் தாகம் தணிக்க, ராமர் தன் வில்லை ஊன்றி, ஏற்படுத்திய வில்லூண்டி தீர்த்தம் பாத்தோம்.  குட்டி பக்கெட் பத்து ரூபாய்க்கு வாடகைக்குக் கெடைக்குது.  வாங்கி, தண்ணிய இறைத்து, குடித்துப் பார்த்தோம், கடலுக்குள்ள ஒரு கிணறு, சுத்தி உப்பு நீர், கிணத்துல மட்டும் உப்பு கரிக்காத குடிநீர்.  என் பொண்ணு கீழ இறங்கிப் போய்க் கடல் தண்ணியையும் உடனே குடிச்சுப் பாத்துட்டு வந்தா.

விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுக்குப் போய்ட்டு, வர இராமனாதபுரம் சேதுபதி மஹாராஜா ரொம்ப உதவி பண்ணினார்னு, விவேகானந்தர் திரும்பி கப்பல்ல வரும்போது, ராமேஸ்வரத்துல இறங்கி, அவரப் பாக்கனும்னு ஆசைப்பட்டார்.  அதுக்கும் பலத்த ஏற்பாடுகள பண்ணி அசத்திட்டார் ராஜா.  விவேகானந்தர் எறங்கினதும் ராஜா குந்துக்கால் (மண்டியிட்டு) போட்டு வரவேற்றார்.  அந்த இடத்துல குந்துக்கால் துறைமுகம்னு இப்போ, ஒரு நினைவகம்  அமைச்சு பராமரிக்கராங்க.  மெயின் ரோடுலேந்து ஒரு 5-7 கி.மீ உள்ள போகனும்.  ரோடு முழுக்க ஜல்லி பரப்பி வெச்சிருக்காங்க அப்பத்தான்.  ட்ரைவர் கார நெனைச்சு ரொம்ப  நொந்து போயிட்டார்.  ஒரு வழியா போய் சேந்தோம்.  உச்சி வெயில்.  விவேகானந்தர், சேதுபதி ராஜா சிலை, உபதேசங்கள், சுற்றுப் பயணங்கள்னு நிறையா வரைஞ்சும், எழுதியும் வெச்சிருக்காங்க.  ஏசி போட்டு ஒரு த்யான ரூம் இருக்கு.  எல்லாத்தையும் பாத்தோம்.  என் மனைவிக்கு விவேகானந்தர ரொம்ப பிடிக்கும், நல்லா சுத்திப் பாத்தாங்க, எல்லாத்தையும் படிச்சி, உள் வாங்கிண்டாங்க.  ராமேஸ்வரத்துல இந்த எக்ஸ்ட்ரா இடங்கள் எல்லாத்தையும் பத்தின விஷய உபயம் இன்னொரு கார்த்தி, அவர் இப்ப கல்யாணமாகி பெங்களூர்ல டெக்னிகல் லீடரா இருக்கார்.

கணபதி கால் பண்ண ஆரம்பிச்சிட்டான், மாப்ள எவ்வளவு பிசியா இருக்கனும், எங்களுக்குப் ஃபோன் பண்ணிட்டே இருந்தான்,  கெளம்பியாச்சா, எங்க இருக்கீங்க, சாப்டாச்சா, எப்ப வரீங்கன்னு ஒரே கேள்வி.  2 மணி போல ஒரு கடைல லஞ்ச் முடிச்சோம்.  ராமனாதபுரம், தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டையையும் தாண்டிட்டோம்.

11. குடுமியான்மலை:  தினமும் இரவு பூஜை முடிந்ததும் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய புஷ்ப ப்ரசாதத்தை, அன்று அரசன் வரவில்லை என்று கோவிலில் நாட்டியமாடும் தேவதாசிக்கு சிவாச்சாரியார் குடுத்து விடுகிறார்.  சிறிது நேரத்தில் தாமதமாக அரசன் வந்து விடுகிறான்.  வழியொன்றும் அறியாது திகைத்த குருக்கள் தாசி சூட்டிக் கொண்ட ப்ரசாதத்தை வேண்டி வாங்கி, அரசனுக்குக் கொடுக்கிறார்.  அதில் தலை முடி இருப்பதைக் கண்ட அரசன் கோபிக்க, சிவாச்சாரியார் அது ஸ்வாமியின் தலையிலிருந்து எடுத்தது தான் என்று கூறி விடுகிறார்.  மேலும் கோபம் கொண்ட அரசன் ஸ்வாமிக்கு சிகை (குடுமி) இருக்கிறதோ என்று வேகமாகச் சென்று ஸ்வாமியின் தலையலங்காரத்தைக் கலைக்கிறார்.  தனக்கு நிதமும் பக்தியோடு பூஜை செய்யும் சிவாச்சாரியார்,  தேவதாசி இருவர் மேலும் கருணை கொண்ட சிவபெருமான் தன் தலை மேல் ஒரு குடுமியுடன் காட்சி அளிக்கிறார்.  அதையும் பொய் என்று நினைத்த அரசன் அதைப் பிடித்து இழுக்க, அங்கிருந்து இரத்தம் பீறிடுகிறது.  ஸ்வாமி காட்சி அளிக்க, அனைவரும் தங்கள் தவறுகளை உணர்ந்து மண்டியிருகின்றனர்.  இன்றும் இந்த மூலவருக்கு உச்சியில் குடுமி இருக்கிறது.

கோவில் மலையடிவாரத்தில் இருக்கிறது, மலையைச் சுற்றி க்ராமம்.  மலைமேல் படிகளின்றி ஒரு முருகன் கோவில்.  மற்ற கோவில்களில் இருப்பது போல் இங்கு 63 நாயன்மார்கள் சிலையும் தனித்தனியாக கோவிலில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கவில்லை.  அம்பாள் சன்னிதிக்கு மேல் வெளிச்சம் இருக்கும் போது நிமிர்ந்து பார்த்தால் மேலே மலைப்பாறையிலேயே 63 சிலைகளும் குடையலாக செதுக்கப்பட்டு இருக்கிறது.  அவர்களுக்கு மத்தியில் ரிஷபத்தில் அம்பாளுடன் ஸ்வாமி.  இது வேறெந்த கோவில்களிலும் காணக் கிடைக்காதது.  இதைத் தவிர ப்ரஹ்மாண்டமான பிள்ளையார், ஷண்முகர், ராவணன், நரஸிம்மர் என வெவ்வேறு சிலைகள் தூண்களிலேயே புடைப்பாக செதுக்கப் பட்டிருக்கிறது.    தொல்பொருள் இலாகாவின் பராமரிப்பில் இருக்கிறது இந்த கோவில்,   புதுக்கோட்டையிலிருந்து 10-15 கி.மீ தொலைவில் இருக்கும் இந்தக் கோவில் நிச்சயம் தரிசிக்கப்பட வேண்டியதொன்று.

இரவு ஒரு 8 மணி போல மாப்பிள்ளை அழைப்பில் கலந்து கொண்டு, இரவு உணவை முடித்துக் கொண்டு, 10 மணிக்கு ஸ்லீப்பர் ஏசி பஸ்ஸில் மீண்டும் சென்னை நோக்கிப் பயணித்தோம்.

சம்போ மஹாதேவ !! மீண்டும் சந்திப்போம்...


1 comment:

Unknown said...

megavum payanulla thagaval..... nandri