May 6, 2009

புரசை அருணகிரி பாடல்கள் - 1

சென்னை புரசைவாக்கத்துல E. அருணகிரி ன்னு ஒரு தாத்தா இருக்கார். கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு ரொம்ப புடிச்சவர். அவர்கிட்டயும், வேற நெறையா பேர்கிட்டயும் நல்ல பாராட்டுகளைப் பெற்றவர். திருப்புகழ், அநுபூதி ன்னு நெறையா பொக்கிஷங்களை இன்றைய தலைமுறைக்குப் போய் சேரும்விதம் மெட்டுப் போட்டு நல்லா பாடி, கேசட், சிடி க்களா வெளியிற்றிருக்கார்.

TMS, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களூர் ரமணியம்மா, பித்துக்குளி முருகதாஸ் இப்படி பல பேரோட பக்திப் பாடல்கள நாம கேட்டு லயிச்சதுண்டு. அந்த மார்கத்துல இவரும் தெய்வத் திருவருள் பெற்றவர்களின் பாடல்களோடு நடுப்பர, நடுப்பர ஜாலியான காவடி பாட்டுகளையும் பாடி இருக்கார். நான் கேட்ட இவரோட பாடல் வரிகளை இந்த கலெக்ஷன்ல போடலாம்னு இருக்கேன். அர்த்தம் போடல. அதுல கவனம் இல்ல இப்போ. அர்த்தம் தெரிஞ்சா அனுபவிச்சுப் பாடலாம் தான். கொழந்தைங்க நாம சொல்ற சாமான் என்னென்னே தெரியாம போய் கேட்டாலும், கடைக்காரன் தரத்தான் போறான். இப்போதைக்கு நம்ம நெலையும் அதான். இந்தப் பாடல்கள கேசட், சிடி யோட ஈஸியா ப்ராக்டிஸ் பண்ணி தூள் கெளப்புங்க. கஷ்டம் வந்தா கந்தன கூப்டுங்க, கவலையப் போக்கி, இஷ்டத்தப் பூர்த்தி பண்ணுவான்.


யூ ட்யூப் ஆடியோ சாம்பிள் லிங்க்:
https://www.youtube.com/watch?v=giZEp5YYJF8

மொதல் கலெக்ஷன்:

1. வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
பொருள்: சிவந்த மேனியையுடைய (துப்பு = சிவப்பு, பவளம்) தும்பிக்கையானின் பாதங்களை பூக்கொண்டு தவறாமல் பூஜிப்பவர்க்கு, வாக்கு, நல்ல மனம், லக்ஷ்மி கடாக்ஷம், வாட்டமில்லாத உடம்பு ஆகியன உண்டாகும்.

2. ஆடும் பரிவேல் அணி சேவலெனப்
பாடும் பணியே பணியா யருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியானை சகோதரனே

3. உம்பர்தரு தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகி பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே

தம்பி தனக்காக வனத்தணைவோனே
தந்தை வலத்தா லருள்கை கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் பெருமாளே.

4. மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனை சென்று கண்டுதொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.

5. பக்தியால் யானுன்னை பலகாலம்
பற்றியே மாத்திருப் புகழ்பாடி
முத்தனா மாறனைப் பெருவாழ்வில்
முக்தியே சேர்வதற் கருள்வாயே

உத்தம தான சத்குண நேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே

வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வா வா முருகா வடிவேல் அழகா

கந்தா முருகா கடம்பா முருகா
கதிர்வேல் முருகா கதிர்காம முருகா

குமரா முருகா குஹனே முருகா
மயில்வேல் முருகா மயூர முருகா

திருத்தணிகை முருகா திருச்செந்தூர் முருகா
ஸ்வாமியே முருகா ஸ்வாமிமலை முருகா
சரவண முருகா சரணம் முருகா

சரவண முருகா சரணம் முருகா
ஷண்முக முருகா ஷடாக்ஷர முருகா

6. வந்த வினையும் வருகின்ற வல்வினையும்
கந்தனென்று சொல்லக் கலங்குமே
செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.

7. வசன மிகவேற்றி மறவாதே
மனது துயராற்றி லுழலாதே
இசைபயில் ஷடாக்ஷர மதாலே
இகபர சௌபாக்ய மருள்வாயே

பசுபதி சிவாக்ய முணர்வோனே
பழனிமலை வீற்றருளும் வேலா
அசுரர் கிளைவாட்டி மிகவாழ
அமரர் சிறைமீட்ட பெருமாளே

8. உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
பின்னை ஒருவரை யான்பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா! செந்தி வாழ்வே.

9. காமியத் தழுந்தி யிளையாதே
காலர்கைப் படிந்து மடியாதே

ஓமெழுத்தி லன்பு மிகவூறி
ஓவியத்தி லந்த மருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற் புயர்ந்த மயில்வீரா
ஏரகத் தமர்ந்த பெருமாளே.

10. யாமோதிய கல்வியும் எம்மறிவும்
தாமேபெற வேலவர் தந்ததினால்
பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர்
நாமேல் நடவீர் நடவீர் இனியே

11. காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி
கண்கொள்ளா காட்சிதரும் கடம்பனுக்குக் காவடி

வேல்முருகன் நாமத்திலே விதவிதமாய்க் காவடி
காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி

வெற்றிவேலன் காவடி வீரவேலன் காவடி
சிங்கார வேலனுக்குச் சின்ன சின்னக் காவடி

வண்ணமயில் தோகையோடு ஆடிவரும் காவடி
காவடியாம் காவடி கந்தன் வேலன் காவடி

பழனிமலை பாலனுக்குப் பால்குடத்தால் காவடி
தென்பழனி வேலனுக்குத் தேன்குடத்தால் காவடி
ஸ்வாமிநாத வேலனுக்கு சந்தனத்தால் காவடி
பாலஸுப்ரமண்யனுக்குப் பஞ்சாமிர்த காவடி
ஆறுமுக வேலனுக்கு அழகுமயில் காவடி

வண்ண வண்ணக் காவடி வெற்றிவேலன் காவடி
மயூரநாதனுக்கு மச்சத்தால் காவடி
குன்றக்குடி குமரனுக்குக் குறைவில்லாத காவடி
பக்தரெல்லாம் கொண்டாடும் காவடியாம் காவடி

பாமாலைப் பாடியாடி நாடிவரும் காவடி
கண்கொள்ளாக் காட்சிதரும் கந்தவேலன் காவடி
காவடியாம் காவடி காணவேண்டும் கண்கோடி

12. காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே

13. பாதி மதிநதி போது மணிசடை
நாத ரருளிய குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா

காது மொருவிழி காகமுற அருள்
மாய னரிதிரு மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
காலில் வழிபட அருள்வாயே

ஆதி அயனொடு தேவர் சுரருல
காளும் வகையுறு சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
சூழ வலம்வரு மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி லுறைவோனே

சூரனுடலற வாரி சுவறிட
வேலை விடவல பெருமாளே.

14. பாழ் வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே

15. கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.

16. அன்பருக்கு அன்பனே நீ ஹரஹர முருகா
ஆறுபடை வீடுடையாய் ஹரஹர முருகா
இன்பமய ஜோதியே நீ ஹரஹர முருகா
ஈசனுமை பாலகனே ஹரஹர முருகா

உலகநாதன் மருகனே நீ ஹரஹர முருகா
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் ஹரஹர முருகா
எட்டுகுடி வேலவா நீ ஹரஹர முருகா
ஏறுமயில் ஏறிவா நீ ஹரஹர முருகா

ஐங்கரனுக் கிளையவனே ஹரஹர முருகா
ஒய்யார வள்ளிலோலா ஹரஹர முருகா
ஓம்கார தத்துவமே ஹரஹர முருகா
ஔவைக்குப தேஸித்தவா ஹரஹர முருகா

ஹரஹர முருகா ஸ்வாமி ஹரஹர முருகா

திருத்தணிகை வேலனுக்கு ஹரஹர முருகா
திருமாலின் மருகனுக்கு ஹரஹர முருகா

திருப்போரூர் முருகனுக்கு ஹரஹர முருகா
திருப்பழனி செல்வனுக்கு ஹரஹரோஹரா

குன்றிலாடும் குமரனுக்கு ஹரஹர முருகா
குறவள்ளிக் காந்தனுக்கு ஹரஹர முருகா

2 comments:

Bakthipages said...

வணக்கம் நான் புரசை அருணகிரி அவர்களின் பாடல் கேசட் கேட்டு உள்ளேன். ஆனால் இப்போது சங்கீதா கம்பெனி மூடபட்டு விட்டதால், எனக்கு அவருடைய வேல் வேல் முருகா கேசட் எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமா?

seetharaman. j said...

ஹலோ bakthipages!! seetharamanjkpt@gmail.com கு ஒரு மெயில் அனுப்புங்க. வழி சொல்றேன்.