Jul 7, 2017

பாண்டிச்சேரி டூர்

17 ஜூன் 2017, சனிக் கிழமை.

பாண்டிச்சேரில ரெண்டு நாளைக்கு என்ன இருக்கு, பீச், மணக்குள வினாயகர், பக்கத்துல ஸ்ரீ அரவிந்தர் ஆச்ரமம்.  மொத்தம் 4 மணி நேரம் போறாதா,  வேற எதையாவது இந்த டூர்ல சேக்கமுடியாதா ன்னு இன்டர்னெட்ல சிவன் கோவில்களைத் தேடி கொஞ்சம் சேர்த்துண்டது தான் இந்த டூர்.  பெஸ்ட்.

1.  மதுராந்தகம்:  இப்பயும் காலை 6.30 மணிக்குப் போனோம், போன தடவை ராத்திரி 8.10 க்குப் போனோம்,  மூடியே இருக்கு ஏரி காத்த ராமர் கோவில்.  எப்ப தரிசனம் கிடைக்கும்னு தெரியல.  என் பையன் பேரும் ராம ஶர்மா.  கோவில் வாசல்ல அவன பாத்துட்டு, கோபுர தரிசனம் பண்ணிட்டுக் கெளம்பினோம்.

இந்த தடவ, மனைவி இட்லி, சட்னி, சாம்பார் எல்லாம் செஞ்சு கைல எடுத்துண்டு வந்திருக்காங்க,  அதனால எப்ப வேணும்னாலும் சாப்டுக்கலாம்னு அடுத்த ஊருக்குப் பயணமானோம்.    ஆஸ்தான ட்ராவல்ஸ், ஃபேமிலி ட்ராவல்ஸ், பெருங்களத்தூர், ட்ரைவர் டைசன்,  பாண்டிச்சேரி தானேன்னு எட்டியோஸ் காரையே இன்டிகா ரேட்டுக்குக் கொண்டு வந்திட்டார்.  8 ₹ கி.மீக்கு, 250 கி. மீ மினிமம் பயணிக்கனும் ஒரு நாளைக்கு,  இல்லாட்டியும் அதுக்கான காச குடுத்துடனும், ட்ரைவர் பேட்டா 350 ₹ ஒரு நாளைக்கு.

2. அச்சிறு பாக்கம்:   தாருகன், கமலாக்ஷன், வித்யுன்மாலி அப்டீன்னு மூணு அசுரப்பசங்க, பயங்கரமா தவம் பண்ணி, இரும்பு, வெள்ளி, தங்கத்துல நினைக்கற எடத்துக்குப் பறக்கற ஊர் கேட்டு வாங்கிட்டாங்க,  இந்த மூணு ஊரும் ஒரு எடத்துல சேரும் போது ஒரே ஆயுதத்தால மூன்று புரங்களையும் அழிச்சா தான் நாங்க அழியனும்னும் வரத்த வாங்கிட்டாங்க.  அவ்ளோதான், ஒருத்தர விடாம எல்லா உயிர்களையும் துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி ரொம்ப அராஜகம் பண்ணிட்டு இருந்தாங்க.  தேவர்கள், முனிவர்கள்னு எல்லாரும் யாராலயும் இவங்கள ஒன்னும் பண்ண முடியல, நீங்க தான் எங்களக் காப்பாத்தனும் நமஸ்காரம் பண்ணினாங்க.  அவரும் ஒரு தெய்வீகத் தேர்ல கெளம்பினார்.  தேர்ல குறை, நேரத்துல குறைங்கறது கவனிச்ச பிள்ளையார பூஜிக்கவே இல்ல,  தேர் அச்சு முறிஞ்சுது,   தேர் சக்ரங்கள்ல அச்சாணியா இருந்த வாயு மற்றும் அக்னி தேவதைகளை, மஹாவிஷ்ணு தண்டாக இருக்கும் அம்போட பின்பக்கத்துலயும், முன்பக்கத்துலயும் இருக்கப் பண்ணினார்.  காஷ்டை, முஹூர்த்தம் ன்னு நேரத்தைக் குறிக்கும் தேவதைகளைத் தேர்ச் சக்ரங்களுக்கு அச்சாக இருக்கச் சொன்னார்,   ஸ்வாமியும் பிள்ளையார பூஜை பண்ணிட்டு புறப்பட்டுப் போயி சண்டைல ஜெயிச்சார்.  அந்த அச்சு முறிச்ச வினாயகர் சன்னதி சிவன் கோவில் ராஜ கோபுரத்துக்கு எதிர்க்க சின்ன கோவிலா இருக்கு,  ராஜ கோபுரத்துக்கு எதிரில் நீரில்லா குளம், தேரடி.  ஸ்வாமி ஆட்சீஸ்வரர்,  பாடல் பெற்ற ஸ்தலம்.   சூப்பர் கோவில்.



3. மைலம் முருகன் கோவில்: மயில் சத்தம் எங்க பாத்தாலும், 7-8 மயில்களையும் பாத்தோம்.  30-50 படிகள் இருக்கும், மலை மேல ஏறி, இறங்க தனித் தனி ரோடுகள் போட்டிருக்காங்க.  20₹ அதுக்கு டிக்கெட்.  கும்பல் விசேஷ நாட்கள்ல இருக்கும் போல,  முருகன் சன்னிதில தூரத்துலேந்தே தரிசனம் பண்ண சௌர்யமா படிக்கட்டுகள் அமைச்சிருக்காங்க.  ரொம்ம அமைதியா, ரம்யமா இருந்துது கோவிலும், கோவிலைச் சார்ந்த இடங்களும்,  ஃப்ரீ டாய்லெட் கோவிலுக்கு வெளில இருக்கு தனித்தனியா, க்ளீனா, தண்ணி வசதியோட.  பொம்மபுரம் (ப்ரஹ்மபுரம்) ஆதீன ஸ்வாமிகளோட பராமரிப்புல இருக்கு இந்தக் கோவில்.  ஸ்வாமிகளும் தீபாராதனையின் போது சன்னிதில இருந்தார், அவரையும் தரிசிச்சோம்.



4. திருவக்கரை:  பாடல் பெற்ற ஸ்தலம்.  சந்த்ரஶேகரர் ஸ்வாமி பேர்.  லிங்கத்துலயே மூன்று முகங்கள் புடைப்புச் சிற்பமா மூலஸ்தானத்துல இருக்கார், மும்மூர்த்தி ஸ்வரூபம்னு குருக்கள் சொன்னார்.  திருவானைக்காவல் அகிலாண்டேஶ்வரி அம்பாள் சன்னதி கிட்ட இருக்கற வாசல் வழியா வெளில வந்தா, அங்க எதிர்க்க வேதபாடசாலை இருக்கு,  அதுக்குள்ள பஞ்ச முகேஶ்வரர் (அஞ்சு முகங்களோட) இதே மாதிரி தான் இருப்பார்.  ஒவ்வொரு முகத்தையும் பார்க்க ஜன்னல் இருக்கும்.  தரிசனம் பண்ணினோம்.

- துர்முகி ன்னு ஒரு ராக்ஷஸி,  அம்பாள் எட்டுக்கையோட காளி ரூபத்துல அவ கூட சண்டை,  அவ கர்ப்பமா இருக்கறத பார்த்த அம்பாள் கருணையோட அந்தக் குழந்தைய அவள்டேந்து எடுத்து, தன் காதுல குண்டலம் மாதிரி போட்டுண்ட்டு, அவள மட்டும் அழிச்சா இந்த ஸ்தலத்துல.  அந்த அஷ்ட புஜ வக்ரகாளிகாம்பாள பக்கத்துலேந்து பாத்தோம்.   பின்னாடி இருக்கற சுதைல இந்த உருவம் அழகா தெரியறது.

இப்பெல்லாம் பாடல் பெற்ற சிவன் கோவில்லல்லாம் கூட பெரிசா ஒண்ணும் கும்பல் இல்ல, ப்ரதோஷ காலத்துல கொஞ்சம் பேர் வராங்க.  இந்த மாதிரி பணம் குடுக்கிற பெருமாள், படிப்பு குடுக்கற ஹயக்ரீவர், நமக்கு எதிரா இருக்கறவங்கள அழிக்கற உக்ரமான காளி, ப்ரத்யங்கரா, சரபர், க்ரஹ நிலைகள சரி பண்ற நவக்ரஹங்கள், எக்சிபிஷன், தீம் பார்க் கோவில்கள், கெடுபிடிகள் இருக்கற கோவில்கள் இப்படி ஏதாவது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் இருந்தா தான் சாமிக்கே கும்பல் வருது,  ஒன்னுமில்லாட்டி மினிமம் 10 அடிக்கு மேல ஒசரமாவாவது இருக்கனும்.  அலையட்டும், மனஸு அலைஞ்சு முடிஞ்சு அவங்களே சிவனேன்னு வருவாங்க. ! !  சுந்தரன், ஆசுடோஷ், சௌலப்யன்,  ஈசியா ஞாபகம் வெச்சுக்கறா மாதிரி லிங்க வடிவத்துலயும் வருவான்,  சித்தத்துல டான்ஸ் ஆடற அம்பலத்தரசனாகவும் வருவான்.

- இந்த ராக்ஷஸியோட அண்ணன் வக்ரனை அழிச்ச கோலத்துல மஹாவிஷ்ணு ப்ரயோகம் பண்ற ஸ்டைல்ல சக்ரத்தைக் கையில புடிச்சிண்டு இந்த கோவில் ப்ராகாரத்துல இருக்கார்.  பட்டர் அண்ணாவும் அன்பா துளசி, புஷ்பம், கேசரி ப்ரஸாதம் குடுத்தார்.  சாப்டு அங்கயே பைப்புல கை அலம்பிண்டோம்.

- பழமையான காலத்தில் புதைந்து அழிந்த மரங்கள் இந்த ஏரியால கற்கள், பாறைகளா மாறி அங்கங்க கிடக்கு,  அப்படி வலிமையான கரையைக் கொண்டதாலும், இதற்கு வக்கரைன்னு பெயர்.  கோவில்லேந்து ஒரு 1-2 கி.மீட்டர்ல இந்திய புவியியல் துறை இந்த கல்மரங்கள் நிறைந்த பூங்காவை பராமரிச்சிட்டு இருக்காங்க.  குழந்தைகள் நிச்சயம் போய், பார்த்து, தொட்டு தெரிஞ்சுக்க வேண்டிய இடம்.




5. சுத்தி, சுத்தி ஒரு வழியா பாண்டிச்சேரி வந்து சேந்தோம்.  வண்டிக்கு 300 ₹ க்குப் பெர்மிட் வாங்கிட்டு,  3-4 ஹோட்டல்கள் நெட், நேர்ல பாத்து, கேட்டு, பேசிப் பாத்தோம்.  மினிமம் 1500-2000.  நாங்க வர்றதுக்குள்ள பூஜை முடிஞ்சு பாண்டிச்சேரி ஸ்ரீ வேத புரீஶ்வரர் கோவில் நடை சாத்தியாச்சு.  அந்த கோவில் குருக்கள் அரசு அண்ணா தருமபுரம் சிவாகம பாடசாலைல படிச்சவர்,  சகஜமா பேசினார்.   மணக்குள வினாயகர் கோவில் யானை பின்னாடி தான் இருக்கு, கொஞ்ச நேரம் பாத்துட்டு, பக்கத்துல சற்குரு வெஜிடேரியன் ஹோட்டல்லயே தங்கிடுங்கோ.  நன்னா இருக்கும்னார்.  2500₹ 24 மணி நேரத்துக்கு, ஃப்ரீ வை-பை இன்டர்னெட், காலை காம்ப்லிமென்டரி பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  ரூம் அருமையா மெயிண்டெய்ன் பண்றாங்க,  சுகாதாரமா இருக்கு, வென்னீர், தண்ணீர், குடி நீர், கரெண்ட் ப்ரச்னை இல்ல, கார் பார்க்கிங் இருக்கு.  ட்ரைவர்ஸ் தங்க ஒரு ஹால் இருந்துது.  பாத்ரூமோட,  ஆனா அங்க பராமரிப்பு நல்லாவே இல்லைன்னார் டைசன்.  நாங்க லஞ்ச் முடிச்சிட்டு 2.00 மணி போல ரிசெப்ஷன்ல போயி நாங்க நாளைக்கு சாயந்தரம் 4 மணி போல தான் ரூம் காலி பண்ணுவோம்.  26 மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிப்பீங்களான்னு ரிக்வெஸ்ட் பண்ணினோம்.  மேனேஜர் ஓகே சொல்லிட்டார்,  சென்ட்ரலைஸ்டு ஏசி,

நாலு மணிக்கு எழுந்து கோவில், பீச், ஷாப்பிங் போலாம்னு நெனைச்சோம்,  எழுந்திருக்கும் போது மணி 5.30.  ரெடியாகி, வேதபுரீஶ்வரர் கோவில் தரிசனம் பண்ணினோம்,  மதியம் ஒரு அரை மணி நேரம் போல மணக்குள வினாயகர் கோவில் லக்ஷ்மி யானை கூட விளையாடியாச்சு.  பாகன் அண்ணா நெறையா விஷயங்கள் லக்ஷ்மியோட டைம் டேபிள், என்னென்ன, எப்பப்ப, எவ்வளவு சாப்பிடும், முதுமலை யானைகள் முகாம் உபயோகமா இருக்கா, இது பரம்பரை தொழிலா, இல்ல யார் வேணும்னாலும் ட்ரை !! பண்ணலாமான்னு கேட்டுனே போனோம்,  அவரும் எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொன்னாரு.  இப்ப திருப்பி மணக்குள வினாயகர் கோவில் வாசல்ல யானை மேல என் பொண்ணையும், பையனையும் ஏத்தி வைச்சு சந்தோஷப்பட்டோம்.   பாஹுபலி பார்ட் 2 படம் வந்திருக்கு, பல போஸ்கள் அந்தப் படத்தோட சாயல்ல போட்டோஸ்ல பதிவாச்சு.  மணக்குள வினாயகர் வேதபுரீஶ்வரர் கோவில் மாதிரி இல்ல, கொஞ்சம் மாடல், லக்சுரி லுக்கு.  பாண்டிச்சேரி வி.ஐ.பி இல்ல, சும்மாவா.

பக்கத்துலயே அன்னை (அன்னை மிர்ரா அல்ஃபாஸா) ஆச்ரமத்துக்குப் போனோம்.  ஸ்ரீ அரவிந்தர் சமாதி, மேலயே அன்னை சமாதியும் உள்ளது,  குழந்தைகள் அனுமதி கிடையாது, ஃபோன் சைலண்ட்ல போட்டு கூட எடுத்துட்டுப் போகக் கூடாது,  ஆஃப் பண்ணி தான் எடுத்துட்டுப் போகனும், அப்படி, இப்படி நிற்கக் கூடாதுன்னு கொஞ்சம் பயமுறுத்தறாங்க.  ஃபாரினர்ஸ் இருக்கறதாலையோ என்னமோ தெரியல,  சமாதி தவிர வேறொரு இடமும் பார்வைக்கு இல்லை,  2-3 நிமிஷம் ஆச்சு, உள்ள போயி சமாதியை தரிசிச்சிட்டு வந்தோம்.  வறுகடலை வாங்கி சாப்டோம், இள நீர் குடிச்சோம்,  ரோடெல்லாம் அகலமே இல்ல, ரெண்டு பக்கத்துலயும் டூ வீலர், கார்ன்னு எல்லா எடத்துலயும் வண்டிகள் நிறுத்தி இருக்கு எல்லா இடத்துலயும்,  நம்ம ஊரா இருந்தா திடீர்னு ஒரு நாள் வந்து லாரில அள்ளிட்டுப் போயிருப்பாங்க, இங்க எப்படின்னு தெரியல.

6. வில்லியனூர் கோகிலாம்பா சமேத காமேஶ்வரர் கோவில்:  நல்ல குளம், நெறையா மீன்கள், பாத்துட்டு ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு வந்தோம்.  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ இருக்கும்.  சத்குரு ஹோட்டல் காஸ்ட்லி,  மெட்ராஸ் சரவண பவன் ஆரம்பிச்சு வச்ச பழக்கம், தரம்ங்கிற பேர்ல காஸ்ட்லியா கொஞ்சூண்டு சாப்ட தராங்க இப்ப எல்லா ஹோட்டல்லயும்.  நாங்க வெளில ஒரு தரம் குறைந்த ஹோட்டல்லயே டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.

18 ஜூன், 2017, ஞாயிறு

காலை வெஜிடேரியன் பஃபே ப்ரேக் ஃபாஸ்ட்,  நாங்க தான் முதல் ஆளா போயி, கடைசி ஆளா வெளில வந்திருப்போம்னு நெனைக்கறேன்.  ஜூஸ், பால், டீ, காபி, கார்ன் ஃப்ளேக்ஸ், ப்ரட், பட்டர், ஜாம் (டோஸ்டருடன்!!), இட்லி, வடை, பொங்கல், வெஜிடபிள் ஊத்தப்பம், சப்பாத்தி, பூரி, கிழங்கு, சாம்பார், சட்னி வகைகள், தயிர்... நல்லா சாப்டோம்.  ஒன்னும் கெடுதல் பண்ணல.



7. திருக்காஞ்சி கங்கை வராக நதீஶ்வரர்:  பாண்டிச்சேரிலேந்து ஒரு 10 கி.மீ குள்ள இருக்கு, வில்லியனூர் போயி போனோம் நாங்க.  மஹாவிஷ்ணு வராக அவதாரம் செஞ்சப்ப, அவர் கொம்பால கீறின போது தோன்றின நதி, அதனால வராக நதி,  அகஸ்த்யர் பூஜை பண்ணின இடம்,  இப்ப கும்பாபிஷேகம் ஆகி இருக்கு,  நேத்து ராத்திரி எட்டு மணி ஆய்டுச்சு,  இது ஊருக்குள்ள விசாரிச்சுப் போகனும், கோவிலும் திறந்திருக்குமான்னு சந்தேகம் தான்னு சொன்னாங்க, வில்லியனூர் கோவில்ல, அதான் காலைல வந்தோம்.  இப்ப கட்டியிருக்கற சன்னதிகள்ல அகஸ்த்யருக்கும் தனியா ஒரு சன்னிதி, அவர் கையில குட்டி சிவலிங்கத்தை வெச்சிட்டிருக்கார், பக்கத்துலயே மனைவி லோபாமுத்திரை.  குருக்கள் டீம் பொறுப்பெடுத்து நல்லா செய்றாங்க.

வெள்ளம் வந்த போது ஸ்வாமி இந்த கரைலயும், அம்பாள் எதிர்க் கரைலயும் சேந்திட்டாங்க,  அவங்களுக்கு அங்கயே விஶ்வ நாதர் புதுசா ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில், வராக நதீஶ்வரருக்கு  இந்தக் கரைல காமாக்ஷி, மீனாக்ஷி ப்ரதிஷ்டை பண்ணி ஒரு கோவில்.  கோவிலுக்கு எதிர்ல இருக்கறவங்களுக்குக் கூட ஸ்வாமி பேர சொன்னா தெரியல.  சிவன் கோவில்னு சொன்னதும், தோ ! ! ன்னு காமிச்சாங்க.

தரிசனம் முடிச்சிட்டு சுண்ணாம்பாறு போட்டிங் போனோம்.  புதுவை அரசு நிர்வாகம், 200₹ ஒரு டிக்கெட், பொண்ணுக்கு 130 ₹. போட்டுல சூப்பரா போனோம், ஒரு 5-10 நிமிஷப் பயணம்,  ஒரு தீவுல பாரடைஸ் பீச்சுன்னு இறக்கி விட்டாங்க.  பீச்சு தண்ணி சூப்பரா இருந்துது,  நானும், பொண்ணும் நல்லா ஆட்டம் போட்டோம்,  கரைலயே ஓசில ரெண்டு, மூணு ஷவர் பைப் இருக்கு,  நல்ல தண்ணில குளிக்க,  திரும்பி அங்கயும் குளிச்சோம்.  வெஜிடேரியனுக்கு சாப்ட ஒன்னும் இல்ல.  வெயில்,  ஷவர் தண்ணி நல்லா இருந்துது, குடிச்சோம்.  பாட்டு போட்டு, மழையில நனையறா மாதிரி ஒரு ஏற்பாடு,  ரெண்டாளடி ஒசரத்துக்கு உள்ள பெல்ட்ல கட்டி, உருட்டிட்டு போக ஒரு பெரிய காத்தடைச்ச பந்து,  வேடிக்கை பாத்துட்டு இன்னொரு போட்டுல ஏறி இக்கரைக்கு வந்தோம்.  போகும் போது லோயர் டெக்கு, வரும் போது அப்பர் டெக்கு பயணம்.  சுத்தி தென்னை மரங்கள்.


எங்கள ரூம்ல சாப்டு, தூங்க வெச்சிட்டு, மனைவி நைஸா வெளில ஷாப்பிங் போய்ட்டு வந்திட்டாங்க,  ஏக குஷி.

9. இரும்பை மாகாளம்:  மாலை 4 மணிக்குக் கெளம்பினோம்,  பாண்டிச்சேரி பீச் ரோடு நான் சின்னப் பையனா இருந்தப்ப, அப்பா கூட போனது.  அப்பாவோட நண்பர் சின்னப்பன் மாமா வீட்டுக்குப் போயிருந்தோம்,  அவங்க எங்களுக்கு முழு பாத்திர செட்டும் புதுசா வாங்கி இருந்தாங்க, நாங்க அவங்க வீட்டு சமையல் சாப்பிடனும்னு.  ஊர் சுத்தி காமிச்சாங்க.  இப்ப பீச் ரோடு இன்னும் அகலம் பண்ணியிருக்காங்க.  கப்பல்ல மணலைக் கொண்டு வந்து கொட்டி, இன்னும் அகலம் பண்ணிட்டு இருக்காங்க.  சுண்டல் சாப்டு, சறுக்கு மரம் வெளையாடிட்டு, கப் ஐஸ் க்ரீம் வாங்கிட்டு கார்ல ஏறிட்டோம்.

கடுவெளிச் சித்தர் ஒரு சித்தர்,  அவர் தொண்டை நாட்டு (காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஏரியாக்கள்) சிவ ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டு வந்த போது, இந்த இடத்தில் வந்து தவம் செய்து கொண்டே இருந்தார்,  தவத்தின் உக்ரத்தால் மழையுமின்றி தவித்த மக்கள், மன்னனிடம் பயத்தால் முறையிட்டனர்.  மன்னனும் முனிவரை எப்படி தவத்திலிருந்து கலைப்பது என்று யோசித்து, கோவிலில் நாட்டியமாடும் தேவதாசியான வள்ளியிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்தான்.  புற்றுக்குள் இருந்த முனிவர் தினமும் அவர் கையில் விழும் அரச இலையை மட்டும் உண்டு கொண்டிருப்பதைக் கண்ட வள்ளி, அதற்குப் பதிலாக மாவில் செய்த அப்பளங்களைத் தினமும் கையில் வைத்துக் கொண்டிருந்தாள்.  நாளடைவில் உடல் கொஞ்சம் பெருத்த சித்தர், புற்று உடைந்து, தவம் கலைந்து எழுந்தார்.  மன்னனோடு, வள்ளியும், மக்களும் வறட்சியைப் போக்குமாறு வேண்ட, அவர் அருளால் மழை பொழிந்தது.

மன்னன் இதைத் திருவிழாவாகக் கொண்டாடி, கோவிலில் வள்ளியின் நடனத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தான்.  சித்தர் அவளை சிவ ஸ்வரூபமாகவும், நடராஜரின் நாட்யமாகவும் அனுபவித்து, லயித்திருந்தார்.  அப்போது அவள் காலில் இருந்து சிலம்பு கழன்று விழுந்தது,  உடனே பதறிப்போன சித்தர் ஓடிப்போய் மீண்டும் அதை எடுத்து அணிவித்து விட்டார்.  தாசியின் காலை சித்தர்  பிடித்ததும், பார்த்துக் கொண்டிருந்த மக்களும், மன்னனும் அதிர்ச்சி அடைந்தனர்.  அவரின் தூய்மையில், ஒழுக்கத்தில் சந்தேகம் கொண்டு, கோபித்தனர்.  சித்தர் உடனே சிவனைப் பார்த்து உனக்கு நடந்ததெல்லாம் தெரியாதா ?  என்று ந்யாயம் கேட்டார்.  சித்தருக்காக மனம் குளிர்ந்த சிவபெருமான், மக்களிடமும், மன்னனிடமும் கோவம் கொண்டார்.  சிவ லிங்கம் மூன்றாகத் தெரித்து விழுந்தது.  உடனே தங்கள் தவறை உணர்ந்து அனைவரும் சித்தரிடம் மன்னிப்பு கேட்டனர்.  அவரும் அவர்களுக்காக உடைந்த பாகங்களை ஒன்று சேர்த்து, தாமிரப் பட்டையால் கட்டியுள்ளார்.  இன்றும் இந்த மஹா காளேஶ்வர் அப்படியே உள்ளார்.

இந்த கதைகளெல்லாம் கோவிலில் இப்போது அழகாக செதுக்கப்பட்டுள்ளன.  குருக்கள் அழகாக பூஜை செய்து வைக்கிறார்.   ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலம் இது.





10. ஒழிந்தியாம்பட்டு:  இரும்பையிலிருந்து இந்த கோவில் அருகில் உள்ளது,  இதும் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம்.  ராஜா வேட்டையாடும் போது மானொன்றைத் துரத்திச் சென்றார்.  அது ஓடி ஓடி ஒளிந்தது.  அப்படி ஒளிந்திருந்த போது அம்பை ஒரு முறை எய்தார்.  மான் மறைந்து இரத்தம் ஒழுக சிவ லிங்கமாக மாறியது.   அதுவே ஒளிந்தியாம்பட்டு என்று மருவியது.  வாமதேவர் என்ற முனிவர் இங்கு ஓரிரவு அரச மரத்தடியில் துயிலிருந்தார்.  மறு நாள் காலை, அயர்ந்து உறங்கியதை நினைத்து,  நமக்கு ஒரு நாள் இந்த மரத்தடியில் உறங்கியதே இவ்வளவு சுகமாக இருக்கிறதே,  இந்த இடத்தில் எப்போதும் சிவபெருமான் இருந்தால் அவருக்கு எவ்வளவு சுகமாக இருக்கும் என்று நினைக்க, அவருக்கு அருள்வதற்காக அரசலீஶ்வரராக ஸ்வாமி இங்கு தோன்றினார்.






11. மரக்காணம்: ஒழிந்தியாம்பட்டிலிருந்து க்ராமங்களின் வழியாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சேர்ந்தோம்,  ரோடு ஓஷன் ஸ்ப்ரே ரிசார்ட்க்கு எதிரில் போய் சேர்ந்தது.  மரக்காணம் பூமீஶ்வரர் கோவில் சோழர் காலத்தைச்  சேர்ந்தது.  வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை சிவ பூஜை செய்து விட்டு தான் சாப்பிடுவேன் என்றாராம்.  அவருக்காக சிவ லிங்கம் ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த மரக்கால் (அளக்கும் கருவி) ஒன்றை கவிழ்த்து வைத்து, சிவலிங்கம் போல் செய்து, அவரை அழைத்து, பூஜையை முடித்து, உணவளித்தார்கள்.  அதன் பின் அந்த மரக்கால் அந்த இடத்தில் இல்லை,  ஒரு ஸ்வயம்பு சிவலிங்கம் தோன்றி இருந்தது அங்கு.  மரக்கால் காணோம் என்றது நாளடைவில் மரக்காணம் என்றானது.

தரிசனம் முடித்து தாம்பரம் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம், இரவு 10.00.  நாளை ஆஃபிஸ். பை பை.


1 comment:

Unknown said...

megavum payanulla thagaval..... nandri