அடுத்தது என்ன வேலை பண்ணலாம், நாளைக்கு என்ன சமைக்கலாம், வீட்டுக்காரர் எப்ப வருவார், இப்டி கவலைப்பட்டு, பட்டு தூக்கமும், ஒடம்பு தெம்பும் போச்சு என் மனைவிக்கு, இன்ஸாம்னியா இந்த வ்யாதிக்குப் பேராம். அடிக்கடி டூர், தனியா!! கூட்டிட்டுப் போகனும், மனசு விட்டுப் பேசனும், வேலை செய்ய விடாம, ரிலாக்ஸா வெச்சுக்கனும்னு இங்க்லீஷ், ஆயுர்வேதிக் டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. வீட்ல அவங்க ஏஜ் க்ரூப்ல இருக்கற ஆள் நாந்தான். நான் காலைல 10 மணிக்கு ஃபோட்டான்க்குப் போய்ட்டு, நைட் 12-3 மணிக்குள்ள வந்துடுவேன்!! தூங்க்கி, குளிச்சு, திருப்பி ஆஃபீஸ் போய்டுவேன். மிச்சம் வீட்ல இருக்கறது 60+ ல மாமா, மாமி, 90+ ல தாத்தா, 2 ஆம் வகுப்புல பொண்ணு, 2 வயஸுல பையன். வெளில அப்பப்ப கூட்டிட்டுப் போனா தப்பே இல்ல. கொஞ்சம் காச கரைக்கனும், உலகையும், மனைவியையும் பத்ரமா வெச்சுப் பாக்க.
ரெண்டு குழந்தைங்களும் சிசேரியன், அப்றம் போன மாசம் ஒரு ஆபரேஷன். நாங்க போற எல்லா டூருக்கும் வாகன விஷயத்துல நம்பிக்கையா இருக்கற டீம், பெருங்களத்தூர் ஃபேமிலி ட்ராவல்ஸ். எல்லா ரக வண்டியும் வெச்சிருக்காங்க, மணியும் (செல்: 9500004224 ), அவர் ஃப்ரண்ட்ஸும் சேர்ந்து எங்களுக்கு ஆஸ்தான ட்ராவல்ஸா இருக்காங்க. எப்பவும் போல அன்ப்ளான்டு டூர் தான்.
25 ஜனவரி 2016, திங்கள் ஒரு நாள் லீவு போட்டா நாலு நாள் லீவு. அப்டியே ECRல (கிழக்குக் கடற்கரைச் சாலை), வேதாரண்யம் வரைக்கும் போய்ட்டு வரப் போறோம். 23, சனிக்கிழமை காலை 1 மணிக்குக் கெளம்பியாச்சு, ட்ரைவர் டைசன் அவரோட எட்டியோஸ் கார்ல. சின்னப் பையன், ஆனா ரோடு ரொம்ப பொறுப்பா ஓட்றாரு. அப்பாவோட பெரியப்பா பையன், ராமச்சந்த்ரன் சித்தப்பா, மதுரை த்யாகராஜா காலேஜ்ல காமர்ஸ் HODஆ இருந்தார், அவர் பொண்ணு ரேவதிக்கா கல்யாணம் ஆகி கடலூர்ல தான் இருக்கா. ரொம்ப நாள் ப்ளான் அவங்க வீட்டுக்குப் போகனும்னு. முதல் ஃபோன், கொஞ்சம் வம்பு இழுக்கலாம்னு, அக்காதான் பேசறான்னு நெனைச்சு, "டிவி சானல்லேந்து பேசறோம், ரேவதி இருக்காங்களான்னு" கேட்டா, அது அவங்க மாமியார், நான் இன்னும் அவங்களெல்லாம் பாத்ததே இல்ல. பட்டுனு ஃபோன வெச்சிட்டாங்க வாய்ஸ் ஒரே மாதிரி இருந்ததுல கொஞ்சம் கொழப்பம். அடுத்த தடவ, அக்காவே ஃபோன எடுத்தா. கெளம்பிட்டோம், வந்துட்டு, ரெண்டு, மூணு கோவில் பாத்துட்டு, லஞ்ச் முடிச்சிட்டு, கெளம்பறோம்னு ப்ளான் சொல்லியாச்சு.
எல்லாரும் குளிச்சு ஒரு மணிக்கு விடிகாலை வண்டியெடுத்து, 4.30 மணி போல அக்காகிட்ட வழி கேட்டு, வீட்டுக்குப் போயிட்டோம். ஒரு குட்டித் தூக்கம், கால நீட்டி. அக்கா வீட்டுக்காரர், குழந்தையை ஆஃபீஸ், ஸ்கூலுக்கு ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு, போலாமான்னு கேட்டா. லஞ்ச்சும் எங்களுக்கு ரெடி பண்ணி வெச்சிட்டா. டைசன் கொஞ்சம் அசந்திட்டார், விடிகாலை ட்ரைவிங், கொஞ்சம் கஷ்டம், தூக்கம் தள்ளும், திருடங்க எல்லாம் கையில ஒரு கல்ல புடிச்சிட்டே, குந்தியிருப்பாங்களாம், தூங்கிப் போய், கல்லு அவங்கள அறியாம விழுந்திட்டா, அதான் சரியான நேரம்னு திருட ஊருக்குள்ள போவாங்களாம். எங்க தாத்தா சொல்வார், அந்த நேரம் அது, அவரையும் எழுப்பித் தயாரானோம்.
1. பாடலீஶ்வரர் கோவில்:
- புலிக்கால் முனிவர் (வ்யாக்ர பாதர்) பூஜை செய்த கோவில்
- பாதிரி மரத்தடியில் இருந்து அம்பாள் சிவ பூஜை செய்த ஸ்தலம் (பாதிரி மரத்துக்கு ஸம்ஸ்க்ருதததில் பாடல வ்ருக்ஷம் என்று பெயர், அதனால் பாடலீஶ்வரர்), தமிழில் திருப்பாதிரிப் புலியூர்.
- சைவக் குரவர்களில் ஒருவரான அப்பரை சமணத்திற்கு மாறாததால், அவரை ஒரு கல் தூணில் பூட்டி, கடலில் போட்டு விட்டனர், அவர் கீழ்வரும் பாடலால் சிவனைத் துதித்து, ஒரு பாதிப்பும் இன்றி கரையேறினார், அந்த இடம் இப்போது "கரையேற விட்ட குப்பம்" என்று அழைக்கப்படுகிறது.
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.
வேதப் பொருளொனும், ஜோதி வடிவானவனுமான சிவனின் பொன் திருவடிகளை இறுக்கமாகப் பற்றித் தொழுவோர்க்கு, கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் நற்றுணையாவது நமஶ்ஶிவாய என்ற ஐந்தெழுத்தே.
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய்
மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த்
தோன்றாத் துணையா யிருந்தனன் றன்னடி யோங்களுக்கே.
சுதை, சிற்பங்களோடு கூடின அருமையான கோவில். தரிசித்து விட்டு திருவந்திபுரம் சென்றோம்.
2. ஆதிசேஷனால் (அஹீந்த்ர = ஆதிசேஷன்) நிர்மாணிக்கப்பட்டதால் திருவஹீந்த்ரபுரம், மருவி திருவந்திபுரம் என்றாயிற்று. தேவநாதப் பெருமாளையும், எதிரே மலைமேலே வீற்றிருக்கும் ஹயக்ரீவரையும் தரிசித்தோம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப் பெற்ற) செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று.
3. திருமாணிக்குழி:
மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.
என்று ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலம். பூத்த மலர்களால் அர்ச்சிக்கப்படும், மார்க்கண்டேயரது உயிரைப் பறிக்க வந்த காலனை காலால் உதைத்த சிவன் இருக்குமிடம், சந்தனம், அகில் முதலியவைகளோடு, மலை, குளங்களில் இருக்கும் மலர்களையும் கொண்டு வயல்களில் பாயும் கெடில நதி ஓடுமிடம் இந்த மாணிக்குழியே.
- சிவன் சன்னதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணையைக் குடிக்க ஒரு எலி முயற்சித்தது. அப்போது அதன் செய்கையால் திரி உந்தப்பட்டு மங்கலாக எரிந்து கொண்டிருந்த அந்த விளக்கு ப்ரகாசமாக எரியத் தொடங்கியது. அறியாமல் செய்த இந்தச் செயலில் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியைச் சக்ரவர்த்தியாகப் பிறக்க வரமளித்தார். (இப்படி எளிதில் சந்தோஷம் அடைவதால் சிவனுக்கு ஆஶுதோஷ் என்று ஒரு பெயர்). எலி மஹாபலியானது. மஹாபலிச்சக்ரவர்த்தியைக் காலால் மிதித்த பாபம் போக, வாமனராக அவதரித்த மஹாவிஷ்ணு பூஜித்த வாமன புரீஶ்வரர். (மாணி=ப்ரம்மசாரி) . இந்தக் கதையை விளக்கும் சிற்பங்கள் இந்தக் கோவிலில் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன.
- மஹாவிஷ்ணு முதலானோர் தொடர் பூஜை செய்து கொண்டிருப்பதாலும், சிவ சக்தி ஸ்வரூபத்தில் மூலவர் இருப்பதாலும் இங்கு சிவபெருமானை பூஜையின் போது அதிக நேரம் தரிசிக்க முடியாது. அவர்களுக்குக் காவலாக பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பீமருத்ரன் இங்கு மூலவரை மறைத்துத் திரைச்சீலையில் (ஸ்க்ரீன்) எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு முதலில் பூஜை செய்து, அவர் அனுமதியோடு அந்தத் திரையை விலக்கி, மூலவருக்கு தீபாராதனை 2-3 நிமிஷம் செய்து, மீண்டும் மூடி விடுகின்றனர். அவ்ளோதான் தரிசனம். குருக்கள் காஞ்சிபுரம் ஸ்ரீ உமாபதி ஶிவாச்சார்யாரின் மாணாக்கர். எளிய விளக்கங்களோடு அழகாக தர்சனம் செய்து வைத்தார்.
அக்கா வீட்டுக்கு வந்தோம், ஏற்கனவே சமையல் முடிச்சிட்டுதான் எங்களோட வந்திருந்தா அக்கா, நல்ல சாப்பாடு, நல்லா சாப்டோம், எல்லாரும் நல்லா கவனிச்சாங்க. ஓய்வு, அக்கா பொண்ணு ஸ்கூல்லேந்து வந்ததும், கடலூர் ஸில்வர் பீச்சுக்குப் போனோம், மெரினா பீச் மாதிரி கூவம் கலப்பு இல்ல, நெறையா கடைகளும், குப்பைகளும் இல்ல, தண்ணி சுத்தமா இருந்துது, கொஞ்ச நேரம் விளையாடிட்டு, அக்கா வீட்டுக்குப் போய்ட்டாங்க, நாங்க வடலூர் வள்ளலார் கோவில்க்குப் போலாம்னு நெனைச்சோம். ஆனா இன்னும் ரெண்டு நாள்ல தைப்பூசம், சரியான கூட்டமா இருக்கும், அப்பறமா போங்கன்னுட்டா அக்கா.
4. சிதம்பரம்.
- சைவர்களுக்குக் கோவில்னா இதுதான்.
- தில்லை மரங்கள் மிகுந்திருந்ததால் தில்லை என்றும் பெயர்.
- மனித வாழ்வின் பல ரகசியங்களை உள்ளடக்கி, தொடர்போடு விளங்கும் கோவில், அமைப்பு
- மூலவர் திருமூல நாதர் எனும் லிங்க வடிவினர், எல்லா சிவ கலைகளும் இங்குதான் தோன்றி, ஐக்யமாகிறது என்பதற்கிணங்க கடைசியாக அர்த்த ஜாமப் பூஜை நடக்கிறது.
- ஒரே இடத்தில் சபாபதியையும், 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருச்சித்ரசபையில் பள்ளி கொண்டிருக்கும் கோவிந்தராஜப் பெருமாளையும் தர்சிக்கலாம்.
- புலிக்கால் முனிவருக்கும், பதஞ்சலிக்கும் நடன தரிசனம்.
- ஐந்து நாட்ய சபைகளில் இந்த கனக சபை முதலானது, (மற்ற நான்கு சபைகள்: மதுரை மீனாக்ஷி சுந்தரேஶ்வரர் திருக்கோவில் - வெள்ளி சபை - இறைவனுக்குக் கால் வலிக்காதா என்று கவலைப் பட்ட பாண்டிய மன்னனுக்காக இங்கு மட்டும் நடராஜர் வலது பாதத்தைத் தூக்கி ஆடுகிறார், திருவாலங்காடு வடாரண்யேஶ்வரர் திருக்கோவில் - ரத்னசபை, திருனெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவில் - தாம்ர சபை, திருக்குற்றாலீஶ்வரர் - சித்ர சபை)
- சிதம்பர ரகசியம்: பஞ்ச பூத தலங்களில் இது ஆகாயத் தலம். வெளி. நடராஜருக்கு அருகிலேயே திரையைத் திறந்து தீபாராதனை காட்டுவார்கள். ஒரு உருவமும் அங்கில்லை. ஆகாசலிங்கம் இருப்பதாக தங்க வில்வமாலை அணிவித்து இருப்பார்கள். இதுவே சிதம்பர ரகசியம். (மற்ற பஞ்ச பூத ஸ்தலங்கள்: நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்ரவனேஶ்வரர், நீர் - திருவானைக்கா ஜம்புகேஶ்வரர், காற்று - ஸ்ரீ காளஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை அருணாசலேஶ்வரர்)
- ரத்ன சபாபதி ஒன்று பத்ரமாக கருவரையிலேயே ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. தினமும் வெளியே எடுத்து, அவருக்குப் பூஜை நடக்கிறது.
- அன்னைக்கும், நடராஜருக்கும் நடந்த நடனப் போட்டியில் பெருமானின் குண்டலம் கீழே விழுந்து விட, ஆடலின் ஒரு அங்கமாக, தன் கால் விரல்களாலேயே அதைத் தன் காதில் பொருத்திக் கொண்டு விடுகிறார். அம்பாள் இதனால் வெட்கி, தில்லை எல்லைக்காளியாக 3 கி.மீ தொலைவில் கோவில் கொண்டுள்ளாள். தக்ஷிணா மூர்த்தி வடிவிலும் இங்கு அம்பிகை குடி கொண்டுள்ளாள்.
5. சீர்காழி: காழி = உறுதி, ப்ரளய காலத்திலும் அழியாது உறுதியாக இருந்ததால், ஸ்ரீகாழி என்று அழைக்கப்பட்டது, மருவி சீர்காழி ஆனது.
- மூன்று நிலைகளில் கோவில் உள்ளது, டிக்கெட் வாங்கிக் கொண்டு மேல் இரு நிலைகளுக்கும் படியேறிப் போகலாம்.
- படைப்புத் தொழிலில் பங்கம் வராதிருக்க ப்ரஹ்மா பூஜை செய்த ப்ரஹ்மபுரீஶ்வரர் கீழ் நிலையில் உள்ளார்.
- ஊழியிலும் அழியாத இத்தலத்தை உமா தேவிக்கு, ப்ரணவத்தைத் தோணியாக்கி, அதில் அழைத்து வந்து காண்பித்த தோணியப்பரும், உமையும் பெருவடிவில் இரண்டாம் நிலையில் எழுந்தருளி உள்ளனர்.
- மஹாபலியை அழித்த பாபத்தாலும், செருக்காலும் உலகை நடுங்கச் செய்து கொண்டிருந்த மஹாவிஷ்ணுவை, சிவாம்சமான அஷ்ட (8) பைரவர்களில் ஒருவரான வடுக பைரவர் அடித்து வீழ்த்தினார். மஹாலக்ஷ்மியின் வேண்டுதலில் அவரை மீண்டும் எழுப்பிய சிவபெருமான், விஷ்ணுவின் வேண்டுதலில், தான் வேறு, அவர் வேறு அல்ல என்று காண்பிக்க, அவருடைய தோலையே சட்டையாக அணிந்து, அவரது எலும்பை கதையாகக் கொண்டு சட்டை நாதராக மூன்றாவது நிலையில் எழுந்தருளியிருக்கிறார்.
- மேலே இருந்து பார்த்தால் 8 பைரவர்களுக்கும் உள்ள தனித்தனி சன்னிதிகளும் தெரிகின்றது.
- ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், சேக்கிழார், பட்டினத்தார், அருணகிரி நாதர், முத்துஸ்வாமி திக்ஷதர், நம்பியாண்டார் நம்பி, அருணாசலக் கவிராயர் என்று பலராலும் போற்றப்படும் ஸ்தலம்.
- சிவனுக்கும், உமையவளுக்கும் நடுவில் குழந்தையாக முருகன் தரிசனம் கிடைப்பதை ஸோமாஸ்கந்த (ஸ=உடன், உமா = உமை, ஸ்கந்தன் = முருகன்) தரிசனம் என்பர். முருகனே இந்த ஊரில் ஆறாம் நூற்றாண்டில் சிவபாத ஹ்ருதயருக்கும், பகவதி அம்மையாருக்கும் ஞானஸம்பந்தராகத் தோன்றினார். இந்தக் கோவில் ஸ்வாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் ஞானசம்பந்தருக்குத் தனி சன்னதியே உள்ளது (ஸோமாஸ்கந்த அமைப்பு).
- ஒரு நாள் அப்பாவோடு இக்கோவிலில் உள்ள ப்ரஹ்மதீர்த்தம் என்ற குளத்துக்குப் போயிருந்தார் குழந்தையாக இருந்த ஞானசம்பந்தர். இவரைக் கரையில் இருத்தி விட்டு நீரில் முங்கிக் குளித்துக் கொண்டிருந்தார் அப்பா. அப்போது குழந்தை அழ ஆரம்பித்து விட, சிவபெருமானின் கருணையால் உமையே தன் பாலை, ஒரு கிண்ணத்தில் இவருக்கு வந்து ஊட்டி விட்டு, மறைந்தாள். குளித்து விட்டு, ஆசாரமாக வந்த அப்பா, குழந்தையின் வாயில் பால் ஒழுகியிருப்பதைக் கண்டு, யாரிடம் பால் குடித்தாய் என்று கோபமாக அதட்டுகிறார்.
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
அப்பா! காதுல தோடு போட்டுண்டு, காளை மாட்டு மேல ஏறி, தலைல வெள்ளையா நிலாவ வெச்சிண்டு, ஒடம்பு முழுக்க சுடுகாட்டு சாம்பல பூசிண்டு என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட திருடனப்பா அவன், முன்னாளில் தாமரையில் தோன்றிய ப்ரஹ்மா பணிந்து, பூஜிக்க அவனுக்கு அருள் செய்ய பெருமை மிக்க இந்த ப்ரஹ்மபுரத்தில் (ஸ்ரீகாழி) எழுந்தருளியவனப்பா அவன்!!
என்று வானை நோக்கித் தன் பிஞ்சுக் கையை நீட்டுகிறார். அங்கு அந்தக் குழந்தைக்குப் பணிந்து, நந்திகேஶ்வரரின் மேல் உமைமஹேஶ்வரராகத் தோன்றி அவரோட அப்பாவுக்கும் குளக்கரையில் தரிசனம் தருகிறார் சிவபெருமான்.
- இன்றும் ஞானசம்பந்தருக்குப் பாலூட்டிய நிகழ்ச்சி வருடம் ஒருமுறை நடந்து, அந்தப் பால் ப்ரசாதமாகத் தரப்படுகிறது.
- சூரபத்மன் கூட்டத்துக்குப் பயந்து, இங்கிருந்த மூங்கில் காடுகளில் மறைந்திருந்த தேவேந்த்ரனால் பூஜிக்கப்பட்ட ஸ்வாமி.
- 18 சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி சித்தர் சமாதி இங்கு உள்ளது.
6. வைத்தீஶ்வரன் கோவில் - நவக்ரஹங்களில் ஒருவரான அங்காரஹனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்த்ததால் வைத்தீஶ்வரன்.
- புள்ளிருக்குவேளூர் - புள் (கருடன், சம்பாதி முதலிய பறவை), ருக்கு வேதம், வேள்- முருகவேள், சூர்யன் முதலானோர் பூஜித்த தலம்.
- பாடல் பெற்ற ஸ்தலம்
மயிலாடுதுறை: இறைவி மயிலாக வந்து பூஜித்த, பாடல் பெற்ற ஸ்தலம். பாக்கல, மணியாய்டுச்சு, வழியா, காரைக்கால் தாண்டி 23, சனிக்கிழமை ராத்திரி 12 மணிக்கு நாகப்பட்ணம் வந்து சேந்தோம். அப்பா ஃப்ரண்டு போலீஸ் ராஜா மாமா, ஏற்கனவே ஃபைர் சர்வீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்க்க இருந்த சத்யா லாட்ஜுல ரூம் சொல்லி இருந்தார், 400₹ ஏசி ரூம் வாடகை, தஞ்சாவூர்ல ட்யூட்டில இருக்கறதால, காலைல வந்து பாக்கறேன்னு சொன்னார், நல்ல டைட் பேக்கேஜ், தொடர்ந்து கோவில்கள், கதை, கதையா சொல்லி கூட்டினு போனாலும், என் பொண்ணு டயர்டா ஆயிட்டா. இனிமே ஒரு நாளைக்கு 2-3 மூணு கோவில்தான் இனிமே கூட்டிண்டு போகணும்னு கன்டிஷன் போட்டுட்டுத் தூங்கினா குழந்தை. இவளுக்குப் போர் அடிக்கக் கூடாதுன்னு தான் ஒவ்வொரு நாளும் ஒரு பீச், பார்க் ஏதாவது சேக்கனும்னு ப்ளான். இன்னிக்குக் கடலூர் சில்வர் பீச் போயாச்சு, நாளைக்கு ஒரு ஸஸ்பென்ஸ் இருக்கு இவங்க எல்லாருக்குமே.
24 ஜனவரி 2016: இனிய நினைவுகள், ஒன்ற வருஷத்து அப்பறமாவும் இன்னும் ப்ளாக்ல கதைக்கற அளவுக்கு ஞாபகம் இருக்கு. வெரி ஹேப்பி அயம், ப்ளெஸ்டா ஃபீல் பண்றேன். ஐடி கம்பனிலேந்து நானாவோ, அவங்களாவோ அனுப்பி, ஏதாவது காலேஜ்ல மிச்ச சர்வீஸ முடிச்சு, பசங்களும் கல்யாணம் ஆகி, அவங்க குழந்தை, குடும்பம் செட்டில் ஆனப்பறம், ஒருத்தரும் கூட இல்லேன்னா, இப்படித்தான் எங்கயாவது நடையா சுத்திண்டு, பொறுக்கிண்டு பொழுத போக்குவேன்னு நினைக்கறேன். தாத்தா சொல்வாங்க, நாம் ஒன்று நினைக்க, சித்ரக்காரர் (சித்ரகுப்தன் - நம்ம தலையெழுத்து புக்ஸ மெயின்டெயின் பண்றவர்) ஒன்று நினைப்பார்னு. பாப்போம். அப்ப இந்த ப்ளாக்ஸ், ஃபோட்டோஸ் திரும்பிப் பாக்க காசு, ஃபோன் என்ட இருக்குமான்னு தெர்ல, இன்ட்ரெஸ்ட் இருக்குமான்னும் தெர்ல, எனக்கு கண்ணு அப்ப எப்டி இருக்கும்னே தெரியல !! சின்னப்பயலே! சின்னப்பயலே !! பாட்ல எம்.ஜி.ஆர் "நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி" ம்பாரு. பாப்போம் காலம் நமக்கு என்ன பயிற்சி தருதுன்னு.
7. நாகப்பட்ணம்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதார ஸ்தலம்.
- பூபாரத்தை சமன் செய்ய தென் திசைக்கு வந்த அகத்தியருக்குத் திருமணக் கோலத்தில் தரிசனம் தந்த ஸ்தலம்.
- நாகராஜனான ஆதிசேஷனால் பூஜிக்கப்பட்டதால் நாகப்பட்ணம்
- காயாரோகணேஶ்வரர் - புண்டரீக முனிவரைத் தன் உடலில் (காயம் - உடல், தோல்) சேர்த்து (ஆரோகணம் - ஏற்றுதல், அவரோஹணம் - இறக்குதல்)க் கொண்ட ஸ்வாமி.
- ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று: முசுகுந்த சக்ரவர்த்தி தேவாசுரப் போரில், தேவர்கள் சார்பில் போரிட்டு, வென்று கொடுத்தார். வெற்றியைக் கொண்டாடி, மகிழ்ந்த தேவேந்த்ரன், வேண்டிய பரிசைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளுமாறு சக்ரவர்த்தியை வேண்டினான். அவரோ தேவேந்த்ரன் தினமும் பூஜிக்கும் சிவலிங்கத்தைத் தன் பூஜைக்குத் தருமாறு வேண்டினார். வாக்களித்து விட்ட தேவேந்த்ரன் என்ன செய்வதென்று யோசித்து, ஒரு ஐடியா பண்ணினான். தேவதச்சனாகிய விஶ்வகர்மாவை அழைத்துத் தான் பூஜிக்கும் சிவலிங்கத்தைப் போன்றே, ஆறு சிவலிங்கங்களை செய்யச் சொன்னான். விஶ்வகர்மா உளி படாமல், (டங்கம் - உளியால் செய்தது, வி டங்கம் - உளி படாதது) மானசீகமாகவே சிவலிங்கங்களைப் படைத்தான். இந்த்ரன் அவைகளோடு தன் சிவலிங்கத்தையும் சேர்த்து வைத்து, உண்மையான ஸ்வாமியைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்ளுமாறு முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கூறினான். அவர் தன் சிவ பக்தியாலும், சிவனருளாலும் உண்மையான சிவலிங்கத்தைக் கண்டு கொண்டார். அவர் பக்தியை மெச்சிய, இந்த்ரன் ஏழையுமே அவருக்குப் பரிசாக அளித்து மகிழ்ந்தான். முக்ய லிங்கத்தை திருவாரூரிலும், வேறு ஊர்களில் மீதமுள்ள ஆறையும் ப்ரதிஷ்டை செய்து வழிபட்டார் சக்ரவர்த்தி. இந்த ஏழு ஊர்களிலும், மூலஸ்தானத்தைத் தவிர, நடராஜர் சன்னதியில் இந்த சிவ லிங்கங்களைப் பத்திரமாக வைத்து, இன்றும் பூஜைகள் நடந்து வருகிறது. நடராஜருக்கும் விடங்கர் (பேரழகன்) என்று பெயருண்டு. இந்த ஏழூர்களிலும் வித்யாசமான நடன நிலைகளில் நடராஜர் தரிசனம் தருகிறார்.
சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான
ஒத்த திருவாய்மூர் உவந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்
திருவாரூர் - தியாகராசப்பெருமான்
திருநள்ளாறு - நாகவிடங்கர்
நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
திருக்காராயில் - ஆதிவிடங்கர்
திருக்குவளை - அவனிவிடங்கர்
திருவாய்மூர் - நீலவிடங்கர்
வேதாரண்யம் - புவனிவிடங்கர்
சிவன் கோவில், நீலாயதாக்ஷி அம்பாள் கோவில் என்று கூறினால் உள்ளூரில் அடையாளம் சொல்கிறார்கள். எந்த ஊரிலும் ஸ்வாமியோட பேர் சொல்லி, காயாரோகணேஶ்வரர் கோவில் எங்க இருக்குன்னு கேட்டா நெறையா பேருக்குத் தெரியல. சிவதரிசனத்தோடு பொழுது புலர்ந்தது.
8. நாகப்பட்ணம் ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் - இது ஆழ்வார்களால் பாடல் பெற்ற ஸ்தலம், தாயார் இங்கு தனியாக கருடி (கருடன் - கருடி!!) வாஹனத்தில் எழுந்தருளுவாள். இது இங்கு மட்டுமே காணும் சிறப்பு, அழகாக இருக்கும் கருடி வாகனம், ஹாஃப் சாரி கட்டிண்டு,
9. பொரவாச்சேரி முருகன் கோவில்: பொருள் வைத்த சேரி என்பது மருவி, பொரவாச்சேரியானது. ஒரு தெய்வீகச் சிற்பி இந்தக் கோவில் முருகனை ஒரே கல்லில் வடித்தான். ஆறுமுகங்கள், ஆயுதங்களோடு பன்னிரு கரங்களையும் கொண்ட பெரிய முருகனை, வாயில் பாம்பைக் கவ்விக் கொண்டு மயில் தன் கால்களில் தாங்கி நிற்குமாறு வடித்திருக்கிறார். ஆயுதங்களைப் பிடித்திருக்கும் கந்தனின் கை நரம்புகளும், மொத்த எடையையும் தாங்கியிருக்கும் மயிலின் கால் எலும்புகளும் அழகுறத் தெரிகின்றன இந்தக் கற்சிலையில், இந்தப் பெருமை வேறெந்த கோவிலுக்கும் கிடைத்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசன் அவன் கட்டை விரலை வெட்டி விடுகிறான். ஆனாலும் அதே அழகோடு ஒரு கி.மீட்டரில் அருகிலுள்ள சிக்கல் சிங்காரவேலனை வடிக்கிறான் அந்த சிற்பி, இப்போது அவன் கண்களைத் தோண்டி விடுகிறான் அரசன், தன் எண்ணத்தையே கண்ணாகக் கொண்டு அவன் மீண்டும் எண்கண் முருகனை வடிக்கிறான். அதன் பின் மீண்டும் அதேபோல் ஒரு சிற்பத்தை வடிக்கையில் தவறி, சிலை சாய்கிறது, குருடனான அந்த சிற்பி அதை எட்டிப் பிடித்தான். அதுவே எட்டுக்குடி. வள்ளி தெய்வானையோடு முருகன் அவனுக்கும், அரசனுக்கும் காட்சி தந்து, சிற்பியை முன்போல் பொலிவுறச் செய்கிறான்.
10. சிக்கல் சிங்கார வேலர்: சூரபத்மனுடன் போருக்குப் புறப்பட்டு, வழி நெடுக பல ஸ்தலங்களில் சிவ ப்ரதிஷ்டை, பூஜை செய்து, சென்று கொண்டிருந்த முருகனுக்கு உமையம்மை தன் சக்தியைத் திரட்டி, ஆழத்திலும், அகலத்திலும், கூர்மையிலும் சிறந்த அறிவைக் குறிக்கும், வேலாயுதமாக தந்த திருக்கோவில். ஸ்வாமி நவநீதேஶ்வரர் ( நவனீதம் - புது வெண்ணெய்), காமதேனுவின் வெண்ணெயில் சிவலிங்கம் செய்து, இங்கு பூஜை செய்த வஸிஷ்டர், முடிவில் அதை எடுக்க முயல்கையில், வராமல் சிக்கிக் கொண்டதால் இந்த ஊருக்குப் பெயர் சிக்கல். வேல் தந்ததால் அன்னைக்கு பெயர் வேல் நெடுங்கண்ணி. இன்றும் ஷஷ்டியின் போது உமையம்மையிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கையில், முருகன் சிலையிலும், சன்னிதியிலும் உக்ரத்தால் வியர்வை நீர் கசிவதைப் பார்க்க முடிகிறது.
காலை தரிசனங்கள் முடிந்தது, சிக்கலிலேயே கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கடையில் பூரி, பட்டானி சுண்டல் (5 ரூபாதான்), தோசைன்னு சிற்றுண்டியை முடித்தோம், சூப்பரா இருந்துது. ராஜா அண்ணா ப்ளான் படி, ஹோட்டல காலி பண்ணிட்டு, 9.30 மணி போல அவரோடயே, நாகப்பட்ணம் நம்பியார் நகர் குப்பத்துக்குச் சென்றோம். இந்த மீனவர்களின் மூதாதையர் தான் நாம் முன்பு கூறிய அதிபத்த நாயனார். தினமும் தொழிலில் கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு அமுதாகத் தந்து விட்டு தான், மீதத்தைத் தனக்குக் கொள்வார். நுளைபாடியென்பது இதன் புராணப் பெயர். இங்கு இவர் பூஜித்த அமுதீசர் கோவில் உள்ளது. மீனவக் குடும்பங்கள் இந்தக் கோவிலை நன்றாகப் பராமரித்து வருகின்றனர். ஐயர் வேஷத்தில் பஞ்ச கச்சத்தோடு கோவில் தரிசனங்களை முடித்து விட்டு, அங்கு சென்ற எங்களுக்கு ஊரார் பெரும் வரவேற்பே கொடுத்து விட்டனர். இப்போதெல்லாம் கட்டு மரங்களை, ட்ராக்டரிலும் இழுத்து வந்து விடுகின்றனர். முன்பு பத்து, இருபது பேர்களாக சேர்ந்து குண்டு, குண்டு கம்பங்களில் கயிறைக் கட்டி, இழுத்தும், தூக்கியும் வருவர். நல்ல பசங்க, டிகிரி, எம்.பி.ஏ ன்னு படிச்சிட்டும் இந்தத் தொழிலில் இன்னும் இருக்கின்றனர். நல்ல கும்பல் நாங்க வந்திருக்கோம்னு, ஒரு மீன்பிடி ஸ்ட்ரீமெர்ல அவங்க நாலு பேர், நாங்க நாலு பேர்னு ஏறிக் கடல்ல கொஞ்ச தூரம் கூட்டினு போனாங்க. லைஃப் ஜாக்கெட் ஏதும் இல்ல, டயர் ட்யூப்பும் இல்ல. போட்ல அமர்ந்து கொண்டு என் மனைவி, அவள இறுக்கமா பிடிச்சிட்டு ஒரு வயசு கூட ஆகாத என் பையன். திரும்பி கரைக்கு வர்ற வரைக்கும் அவன் பிடிய விடவே இல்ல, மனைவி தோள்லேந்து தலையையும் தூக்கல. அலைகள் பெரிசு, பெரிசா வந்து கொண்டிருந்தது. என் பொண்ணும் அவங்க சொன்னத கேட்டு ஒக்காந்திட்டா, நான் என்னவோ நாயகன் படத்து கமலஹாசன் மாதிரி திமிரா நின்னுட்டு இருந்தேன். அனுபவம் இல்ல, அறிவும் இல்ல, ஆசை மட்டும் இருக்கு. ஸ்பீடு ப்ரேக்கர் மாதிரி ஒரு பெரிய அலை வந்துது, டொம்னு போட்டுக்குள்ளேயே விழுந்தேன். கணுக்கால்ல சிராய்ச்சு ரத்தம் வந்திடுச்சு. மெல்ல, மெல்ல எல்லா அலைகளையும் தாண்டிப் போனாங்க. மனந்தளராத விக்ரமாதித்தன் மாதிரி வேட்டிய மடிச்சு, கட்டிட்டு எழுந்தேன், நீல நிறத்துல, அலையில்லாம கண்ணுக்கெட்டின தூரம் வரை தண்ணி. ஒன்னு, ரெண்டு ஸ்ட்ரீமெர் எங்கள தாண்டி கரைக்குப் போச்சு, வெரைட்டியா மீனு, நண்டுல்லாம் காம்சிட்டுப் போனாங்க. என் பொண்ணுக்கு இப்போ தைரியம் வந்தாச்சு, எழுந்து கைய விரிச்சு "அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" எம்.ஜி.ஆர் பாட்டு பாட ஆரம்பிச்சிட்டா, எல்லாரும் கோரஸ்ஸா பாடி என்ஜாய் பண்ணினோம். நான் கடல்ல குதிக்கப் போறேன்னேன்.
ஏக எதிர்ப்பு, நீச்சல் தெரியுமா, சேஃப்டி கருவிகள் ஏதும், இல்ல, மருந்துகளும் இல்லன்னு அந்தப் பசங்க. வந்த எடத்துல இதெல்லாம் தேவையில்லாத வேலைன்னு எங்க வீட்ல, ஏற்கனவே கட்டாயப்படுத்தி ட்ரைவர் டைசன ஏத்தினு வந்திட்டோம், கன்யாகுமரி அந்தப் பையன். மூணு கடலும் சங்கமிக்கற எடம், ஆயிரம் இருந்தும், நீச்சலும் தெரியல, தைரியமும் இல்லயே, நோ பீஸ் ஆஃப் மைண்டு.!! வாந்தி, வாந்தியா எடுத்துனு போட்ல ஒரு மூலைல இருக்காரு. அவரே போட் பண்ணி, போயிருக்கேன்னாரு, அப்பறம் பாத்தா, அது மெட்ராஸ் டிஸம்பர்ல மழை, வெள்ளம் வந்தப்ப, வேளச்சேரில தெர்மகோல்ல பண்ணிப் போன அனுபவமாம். எனக்குக் காவிரி நீச்சல்லாம் இங்க சரி பட்டு வராதுன்னு சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அவங்க த்ருப்திக்கு (எனக்கும் கொஞ்சம் பயந்தே) போட்ல ஒரு குட்டி நூல் கயிறைப் புடிச்சுக்க சொல்லிட்டு, மறு முனைய என் கைல கட்டிட்டு ஒரு ஜம்ப். காவிரி பழக்கம், ஆழத்துக்குப் போயி எல்லாரும் நம்பறதுக்கு அடி மண் எடுத்துட்டு வர்றது. கொஞ்ச நேரத்துக்கு அப்புறந்தான் புத்தி வந்துது, இது கடலு, நீ மண்ண தொடப் போறதில்லன்னு. சுதாரிச்சு, தம் புடிச்சு, தண்ணி மேல வந்திட்டேன். எல்லாம் பயத்தோட எதிர்பாத்துட்டு இருந்தாங்க. போட் முன் பக்கத்துல அதிபத்த நாயனார் துணை ன்னு எழுதி இருந்துது. எல்லாம் சிவமயமா தெரிஞ்சிது. கொஞ்ச நேரம் பத்மாஸனம் போட்டு தண்ணிலயே சீரா மூச்சு விட்டுட்டு, மிதந்துக்கிட்டு இருந்தேன், ஸூர்யன் சுளீர்னு கண்னைப் பறிக்க தரிசனம். திவ்யமான குளியல். வயிறு ஃபுல்லா சிக்கல் டிஃபன் சிக்கல், போட்ல திருப்பி மூச்சுப் புடிச்சு ஏற முடியல. போட் ரொம்ப பெரிசா தெரிஞ்சிது. கொஞ்ச நேரம் திருப்பி, தண்ணிலயே ரெஸ்ட் எடுத்துட்டு, போட் பின் பக்கம் வந்து, அவங்க உதவியோட மேல ஏறினேன். நல்லா ஆட்டம் போட்டாச்சு. தண்ணில குதிக்கும் போது வீடியோ ரெக்கார்டிங் ஆன் பண்ணி, அப்டியே நான் குதிக்கறது, குளிக்கறது, யோகாஸனம் போட்டு தண்ணில மிதக்கறது எல்லாத்தையும் பதிவு பண்ண சொல்லி, கேமராவ குடுத்துட்டு குதிச்சிருந்தேன். வந்து நல்லா தண்ணியெல்லாம் தொடச்சிட்டு, கேமராவ கேட்டா, அவரு பேண்ட் பாக்கெட்லேந்து எடுத்துக் குடுக்கறாரு, ரெக்கார்டிங் அப்டியே ஆன்லயே இருக்கு, பயத்துல பாக்கெட்ல போட்டுட்டாராம், உருப்படியா ஒன்னும் பதிவாகல. கடல்ல ஒரு பழைய கப்பல நங்கூரம் போட்டு நிறுத்தி இருந்தாங்க. மீனெல்லாம் வலைலேந்து பிரிச்சு, வகைப்படுத்திட்டு இருந்தாங்க. அது கிட்ட போயி, கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு, கரைக்கு வந்து சேந்தோம். அமுதீசர் கோவில்ல போயி, மோட்டார் போட்டு நல்ல தண்ணில குளிச்சு, சிவ தரிசனம் முடித்தோம். என் பையன் அப்பதான் கொஞ்சம் தைரியம் வந்து எறங்கினான். ட்ரைவர் ஓகே. பசங்க நம்பர்லாம் இப்ப எங்கிட்ட இல்ல, சிம் கார்டு டேமேஜ் ஆகி, எல்லா நம்பரும் போய்டுச்சு, ஞாயிற்றுக் கிழமை எல்லா மீனவர் குடும்பத்துலயும் சிறப்பு சமையல், எங்களுக்காக வந்து ஒரு வெஜிடேரியன் ஹோட்டல்ல கொஞ்சம் சாப்டு, எங்கள வழியனுப்பி வெச்சாங்க பாய்ஸ். வேதாரண்யம் போறதுக்கு முன்னாடி வடக்குப்பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதிக்குப் போய்ட்டுப் போகச் சொன்னாங்க. மணி மாலை 3.00.
11. அமுதீசர் கோவில், 12, வடக்குப் பொய்கை நல்லூர் கோரக்கர் சமாதி தரிசனம் முடிந்து வேதாரண்யம் கோவில் குருக்கள் ஸ்ரீ சிவ சங்கர சிவாச்சார்யார் இல்லம் போய்ச் சேர்ந்தோம்.
13. வேதாரண்யம்:
- மறைகள் (வேதங்கள்) நான்கும் இறைவனை வழிபட்ட தலமாதலால் வேதாரண்யம் , திருமறைக்காடு.
- மூலஸ்தானத்துக்கு அடுத்த அர்த்த மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக நிற்கின்றன.
- மஹாபலி முன்பிறவியில் எலியாக இருந்து, விளக்குத் திரியைத் தூண்டி விட்ட தலம் . வேதாரண்யம் விளக்கழகு என்ற பழமொழி நினைவு கூறத்தக்கது.
- ராமபிரானின் முன்னோரான த்ரிசங்கு ஸ்வர்க்கம் அடைந்த தலம்.
- முன்பு பார்த்த ஸப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று.
- ஸரஸ்வதியின் யாழ் இசைக்கும், அன்னையின் குரலிசைக்கும் நடந்த போட்டியில் அன்னை வென்று யாழைப் பழித்த மொழியாள் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் தலம். இதனால் இங்கு தனி சன்னதியில் இருக்கும் ஸரஸ்வதி கையில் வீணையின்றி இருக்கிறாள்.
- ராமர் இலங்கைக்கு ஏகும் முன், இங்கு துர்க்கையை ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு சென்றிருக்கிறார். அருகிலுள்ள ராமர் பாதம் என்ற குன்றில் ஏறிப் பார்த்த போது இலங்கையில் இராவணின் கோட்டையின் பின் பக்கம் தெரிந்தது. சக்ரவர்த்தித் திருமகன் பின் பக்கமாக செல்வதும், தாக்குவதும் தனக்கு அழகன்று என்று இராமேஸ்வரம் சென்று, இலங்கைக்குச் சென்றார்.
- ராவணனைக் கொன்ற ப்ரஹ்மஹத்தி தோஷத்தை மீண்டும் இங்கு வந்தே போக்கிக் கொண்டார்.
- வெகு காலமாக அரசனின் ஆணையால் கோவில் கதவு மூடப்பட்டு, மக்கள் பின்புறம் உள்ள ராஜ கோபுரத்தின் வழியாகவே தர்சனம் செய்து வந்துள்ளனர். இங்கு வந்திருந்த ஞானஸம்பந்தரின் பாடலால் பூட்டப்பட்டிருந்த கதவுகள் தானாகவே திறந்து, மக்கள் வழிபாட்டுக்கு உதவியது. (இந்த நிகழ்ச்சியை பழைய திருவருட்செல்வர் திரைப்படத்தில் அற்புதமாக படமாக்கியிருந்தனர் ஏ.பி. நாகராஜன் குழுவினர்). அந்த பெரியக் கதவுக்கு வெள்ளிக் காப்பு செய்துள்ளனர்.
பராமரிப்பில் இதுவும் பெரும்பாலான தமிழகக் கோவில்களைப் போலத்தான். மோசமாக இருந்தது. கேரளா, திருப்பதில எல்லாம் கோவில் கலெக்ஷனைக் கொஞ்சமாவது கோவில்லயே செலவு செஞ்சு மக்களைத் திருப்பி, திருப்பி மயக்கி வரவழைக்கறான். நம்மூர்ல பழனி மலையச் சுத்தியே ஒரே மூச்சா நாத்தம் தான். (இது முன் கூட்டியே தெரிஞ்சு தான் போகர் ஸ்வாமி சிலைய நவபாஷாணத்துல செஞ்சிட்டார்). அவ்வளவா கலெக்ஷன் இல்லாத இந்தக் கோவிலப் பத்தியெல்லாம் சொல்லனுமா ? அம்மாவின் ஆணைக்கிணங்க இப்பதான் சமீபத்துல அவசர, அவசரமா கும்பாபிஷேகம் வேற நடந்திருக்கு.
மாலை விடங்கர் விக்ரஹத்துக்கு அபிஷேகம், பூஜைகள் 10-15 நிமிஷங்கள். நடராஜர் சன்னிதில ஒரு இரும்பு ஜெயில்ல, இரும்பு லாக்கர்குள்ள இருக்கார் இந்த மரகத ஸ்வாமி. அறநிலையத் துறை அதிகாரிகள், கோவில் ஊழியர்கள் முன்னிலையில் தினமும் காலை, மாலை ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்துப் போட்டு, குருக்கள் இவைகளைத் திறந்து பூஜைகளை முடித்து, மீண்டும் உள்ளே வைத்து பூட்டி விடுகிறார். ஜெயிலுக்கு வெளிலேந்து எல்லாரும் பாக்கலாம். 20-30 பேர் இருப்போம். நாங்க முன்னாடியே போய் பக்கத்துல ஒக்காந்துட்டோம். நல்லா பூஜை பாத்துட்டு, ப்ரசாதம் வாங்கிண்டு, டின்னர் முடிச்சிட்டு தூங்கினோம்.
25 ஜனவரி 2016, திங்கள்:
சரியான முன்னறிவிப்புகள் இல்லாததாலும், ப்ரைவேட் கம்பெனில வேலை பார்க்கிறதாலையும் நண்பரால எங்க டூர்ல கலந்துக்க முடியல, அவர் பசங்களும் ஸ்கூலுக்குப் போயிட்டாங்க. அவர் மனைவியும், அண்ணியும் தடபுடலா கவனிச்சிட்டாங்க. வேதாரண்யேஶ்வரரை கடல்ல குளிச்சிட்டு, ஒரு ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல குளிச்சிட்டு தான் தரிசிக்கனும்னு இங்க முறை. ட்ரைவருக்கு ரெஸ்ட் குடுத்துட்டு, ஒரு லோக்கல் ஆட்டோ ஏற்பாடு செஞ்சு நண்பரோட அண்ணாவே எங்களோட வந்துட்டார். இந்த ஊர் கடல வேத நதின்னு தான் சொல்றாங்க. என்னன்னு தெரியலை, எங்க பாத்தாலும் சரியான களி மண், கொண்டு வந்து கரைல தள்றாரு சமுத்ர ராஜன். தண்ணியெல்லாம் சேத்துக் கலர்ல இருக்கு. எங்க கால வெச்சாலும் சல், சல்லுனு புதையுது. தலைல தண்ணிய தெளிச்சிட்டு கெளம்பிட்டோம், குளிக்க முடியல, அண்ணாவுக்கும் ஏன் இப்படின்னு புரியல. இன்னும் கொஞ்ச நாள்ல 27 வருஷத்துக்கப்பறம் மீண்டும் மஹோதயம் ங்கிற புண்ய நாள் வருது. (தை மாசம், அமாவாசை, ஸ்ரவண நக்ஷத்ரம், திங்கள் கிழமை எல்லாம் சேர்ந்து வரும் நாள்). கோடி சூர்ய க்ரஹணங்களுக்கு இணையான பலன் இந்த நாள்ல ஸமுத்ர ஸ்னானம் செஞ்சா, ஜபம் பண்ணினா. லக்ஷக் கணக்குல கும்பல் வரும்னு கலெக்டர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யச் சொல்லி நடந்திட்டிருக்கு.
அங்கிருந்து கிளம்பி, ஏரில குளிச்சிட்டு, கோவில் குளத்துல போய்க் குளிச்சோம், ராஜ கோபுரத்துக்குள்ள நுழைஞ்சதும், இடது புறம் இந்த குளம், கோபுரத்துல நெறையா சுதைகள் இருக்கு. குழந்தை கொஞ்சம், கொஞ்சமா தைரியம் வந்து கையிலேயே ஒக்காந்துண்டு குளிச்சான். நேத்து ராத்திரி புறப்பாடு முடிஞ்சு ஸ்வாமி 1.30 மணிக்கு விடிகாலைல தான் தூங்கப் போயிருக்கார். திருப்பியும் ஒரு தடவ மரகத விடங்கர் தரிசனம் செஞ்சோம்.
கார்ல கெளம்பி கோடிக்கரை போற வழில குன்றுல ஏறி ராமர் பாதம் பார்த்தோம். என் பையன் வால்மீகி ராமாயணம் படிச்சு, பொறந்ததால அவனுக்கும் ராமன்னுதான் பேர், தாத்தா ராமாயணத்த அனுக்ரஹ க்ரந்தம், அது கேட்டதக் குடுக்கும்னு சொல்வார். அது என் அனுபவம். அவன் குழந்தையா இருக்கும் போதே, அவனோட அங்க போனதுல கொஞ்சம் சந்தோஷம். மொத்த வழில அந்த குன்றுல மட்டும் அவ்ளோ குரங்குகள். கோடிக்கரை கடலை தரிசனம் செஞ்சு, நீரை எடுத்துத் தெளிச்சிண்டோம். வரும் போது உப்பளத்துல அதிகாரியா இருக்கற நண்பர் சிவ சங்கர்ட அனுமதி வாங்கிட்டு, கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சிட்டு, வீட்டுக்குப் போய் சாப்டோம்.
ஒரு மணி நேரம் ரெஸ்ட், நா மட்டும் தான் கொஞ்சம் படுத்தேன் (வேற என்ன வேல ஆம்பளைக்கு), மனைவி எல்லாத்தையும் பேக் பண்ணினாங்க. பொண்ணு ஃப்ரெண்டு பொண்களோட விளையாடிட்டு இருந்தா. நாலு, நாலரைக்குக் கெளம்பினோம்.
14. திருநள்ளாறு:
- திரு ன்னு ஆரம்பிச்சாலே அது பாடல் பெற்ற ஸ்தலம்தான்.
- நள மஹாராஜாவுக்கு இங்கு தான் சிவ பூஜை பலனாக சனி தோஷம் நீங்கிற்று.
- சப்த விடங்கரில் இங்கும் ஒருவர்.
- தர்ப்பைக் காட்டில் எழுந்தருளியதாள் ஸ்வாமி தர்ப்பாரண்யேஶ்வரர்.
15. திருக்கடையூர்:
- பாடல் பெற்ற ஸ்தலம்.
- அமிர்த கடத்தில் தோன்றியதால் அம்ருத கடேஶ்வரர்
- அஷ்ட வீரட்ட சிவ ஸ்தலங்கள்ல இதுவும் ஒன்னு. மார்கண்டேயருக்கு ஆயுசு 16 வயதே என்பதால் அந்த வயதில் அவர் உயிரை எடுப்பதற்காக வந்த யமதர்ம ராஜா, அவர் இங்குள்ள சிவபெருமானை இறுக்க அணைத்துக் கொண்டிருக்கும் போதும், யோசிக்காமல் பாசக் கயிறை வீசினான். சிவன் ஓங்கி விட்டார் ஒரு உதை அவனுக்கு, எங்க வந்து, என்ன பண்ணினு இருக்கும் போது, யாருக்கு சேத்து கயிறை வீசற, இனிமே நீ இந்த வேலை செய்ய வேணாம், நானே பாத்துக்கறேன், போ!! ன்னு சத்தம் போட்டு, அவன் ஆயுதங்களையெல்லாம் புடுங்கினு, தொரத்தி விட்டார். மார்க்கண்டேயருக்கும் என்றும் இனிமே உனக்கு பதினாறு வயசு தான்னு வரம் கொடுத்திட்டார். (இன்னிக்கு மெட்ராஸ்ல இருக்கற வேளச்சேரிக்கு புராணப் பெயர் வேதஶ்ரேணி, இங்க தான் அந்த யமன் திரும்பியும் வந்து யம தீர்த்தம்னு ஒரு குளத்த உண்டாக்கி, தினமும் குளிச்சு, முறையா பூஜை, தவம் எல்லாம் செஞ்சு, சிவன சந்தோஷப்படுத்தி, திருப்பியும் தன்னோட தண்டம், முதலான ஆயுதங்களையும், சக்தியையும், பொறுப்பையும் பெற்றான். அதனால வேளச்சேரி ஸ்வாமி பேர் தண்டீஶ்வரர்.)
- திருக்கடையூர் அபிராமி மேல தான் அபிராமி பட்டர் அந்தாதி பாடினார், அம்பாள் அவருக்காகத் தான் ஜொலிக்கற தன் ஆபரணத்தைத் தூக்கிப் போட்டு அமாவாசைய, பௌர்ணமியா மாத்தினா.
26 ஜனவரி 2016, செவ்வாய் விடிகாலை வீட்டுக்கு வந்தோம். ரெஸ்ட்.
கர்ப்பமா இருக்கறவங்க, நேர்ல இந்த கோவில்லுக்கெல்லாம் போக முடியாம இருக்கறவங்கவங்களுக்கு, டெலிவரி மேனேஜர், என்னோட ரிப்போர்ட்டிங் மேனேஜர் திருனெல்வேலி ஜான்ஸனுக்கும் இந்த போஸ்ட் சமர்ப்பணம்!! மீண்டும் சந்திப்போம்.